அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பறந்த தவெக கொடியைப் பார்த்து, ‘’பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க’’ என்று அதிமுக – தவெக கூட்டணி அமைந்துவிட்டது என்று குதூகலித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த கொடியைப் பிடித்தது தவெக தொண்டர் அல்ல. அது அதிமுக தொண்டர்தான் என்பது பின்னர்தான் தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமிக்கும் அப்போது தெரிந்திருந்தாலும் கூட அவர் தவெக மயக்கத்தில் இருந்ததால் தெரியாமல் சொல்லிவிட்டார்.
அதிமுக என்கிற இவ்வளவு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர், தவெகவின் ஒப்புதல் இல்லாமலா இப்படி பொதுவெளியில் சொல்லுவார்? என்றே எல்லோரும் நம்பினார்கள். ஆனால் ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் தானாகவே உளறியிருக்கிறார் எடப்பாடி என்பது இப்போதுதான் தெரிகிறது.

2026ல் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி. 2026ல்தால் தவெக ஆட்சிதான் என்று தவெக பொதுக்குழு எடப்பாடி முகத்தில் கரியைப் பூசி இருக்கிறது. இப்படி ஒரு நிலைமை தேவையா? என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக சாடி இருக்கிறார்.
தவெகவின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘’எதிர்க்கட்சி அவர்களோடு வந்து சேருமாறு எங்களை அழைக்கிறது’’ என்று விமர்சிக்குமளவு எடப்பாடியின் செயல்கள் ஆகிவிட்டது.

தவெகவை கூட்டணிக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காக கரூர் விவகாரத்தில் விஜய்க்கு முழு ஆதரவாக இருந்தது அதிமுக. இந்த அளவுக்கு அதிமுக அவர்களுக்கு உதவியது என்பதைக் கூட மறந்து, அதிமுகவை அசிங்கப் படுத்தியிருக்கிறார் ஆதவ் அர்ஜூன்.
இதனால் அவமானப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து மனம் நொந்து போயிருக்கிறார் எடப்பாடி. அவரை கூல் செய்யும் விதமாகத்தான், முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, 50 ஆண்டுகளாக திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. மக்களை சந்திக்காமல், மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் சிலர் திரைப்புகழை கொண்டு மாய பிம்பத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள் என்று விஜயை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

தவெகவை அதிமுக அடிக்க ஆரம்பித்திருப்பதால் திருப்பி அடிக்க தவெகவும் தயாராகி வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய கட்சி கூட்டணிக்குள் வருகிறது… ஒரு பெரிய கட்சி கூட்டணிக்குள் வருகிறது… என்று புதிய கட்சி தவெகவை பெரிய கட்சி என்று கூவிக்கூவி வந்த எடப்பாடிக்கு தேர்தல் நெருக்கத்தில் இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது. அடுத்து என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? என்பதே அதிமுகவினரின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
