ஏவி.எம். ஸ்டூடியோ என்றதும் உலக உருண்டை நினைவுக்கு வருவது போலவே ஏவிஎம் சரவணன் என்றதும் வெள்ளை பேன்ட், வெள்ளை சர்ட்டும், கைகளை கட்டி நிற்கும் பணிவும்தான் நினைவுக்கு வரும். அமைதியாக பேசும் சரவணன் எந்த நிலையிலும் அதிர்ந்து பேசியதில்லை. யாரையாவது கடிந்து பேசும்போது கூட அவர் கெட்ட வார்த்தைகளை உதிர்த்ததில்லை. கடிந்து பேசும் போது அவர் உதிர்க்கும் அதிக பட்ச வார்த்தையே ‘மடச்சாம்பிராணி’தான். இந்த பணிவுக்குத்தான் புதுவை அரசு இவருக்கு ‘பண்பின் சிகரம்’ விருது வழங்கி கவுரவித்தது.

ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு ஏவிஎம் நிறுவனம் அதே பாரம்பரியத்துடன் இயங்கியதற்கு காரணம் சரவணன். அதனால்தான் மெய்யப்ப செட்டியாரின் புதல்வர்களில் இவர் தனித்து அடையாளம் காணப்பட்டார். தீவிர சினிமா காதலரான சரவணன் எம்.ஜி.ஆரின் ரசிகர். தான் ஒரு தயாரிப்பாளின் மகன் என்ற போதிலும் கூட, பிற சினிமா நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களுக்கே சென்று எம்.ஜி.ஆரை சந்திக்கும் அளவுக்கு அவரின் தீவிர ரசிகராக இருந்தார்.

தந்தை காலத்தில் இருந்தே தனது 18வயதில் அவருடன் இணைந்து திரைப்பயணம் மேற்கொண்டு வந்தவர் சரவணன். 1958ல் ‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்தில் ஆரம்பித்து முரட்டுக்காளை, முந்தானை முடிச்சு, பாட்டி சொல்லை தட்டாதே, எஜமான், மனிதன், போக்கிரி ராஜா, பாயும் புலி, சிவாஜி வரையிலும் 100க்கும் மேற்பட்ட படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்ததில் சரவணன் பெரும்பங்கு வகித்துள்ளார்.

3.12.1939ல் பிறந்த சரவணன் நேற்று தனது 86ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இன்று வயது மூப்பின் காரணமாக மறைந்தார். ஏவிஎம் ஸ்டூடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருப்பது அவரது ரசிகர்களுக்கு நிறைவைத்தருகிறது.
சாய்பாபாவின் தீவிர பக்தரான சரவணன், சாய்பாபாவை வழிபடுவதற்கு உகந்த நாளான வியாழக்கிழமை தினத்தில் மறைந்திருக்கிறார்.
