ஆப்ரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதி மெதுவாக பிளந்து, அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிய பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
ஆப்ரிக்காவைப் பிளந்து வரும் டெக்டோனிக் விசைகள்
ஆப்ரிக்க கண்டத்தின் அடியில், சூரிய வெளிச்சத்திற்கு தெரியாமல் பிரம்மாண்டமான மாற்றம் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, ஆப்ரிக்க கண்டத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடியது என்றும் பூமியின் டெக்டோனிக் விசைகள் (Tectonic forces) மெல்ல மெல்ல ஆப்ரிக்காவைப் பிளந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

புதிய பெருங்கடல் தோற்றம்
இதன் மூலம் கிழக்கு ஆப்ரிக்காவில் பூமியின் ஆறாவது பெருங்கடல் (Sixth Ocean) உருவாக வாய்புள்ளதாக விஞ்ஞானிகள் (Scientists) தெரிவிக்கின்றனர். மேலும், அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பூமியின் நிலப்பரப்பு மற்றும் நீரின் மட்டமும் மாற்றமடையும் என தெரிவிக்கின்றனர்.
பூமியின் மேற்பரப்பில் புவியியல் விரிசல்
தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு நீண்டிருக்கும் கிழக்கு ஆப்ரிக்க பிளவுப் பள்ளத்தாக்கு என்பது பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய புவியியல் விரிசல் ஆகும் என்றும் இங்குதான் ஆப்ரிக்கக் கண்டம் மெதுவாக இரண்டாகப் பிளந்து கொண்டு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், எத்தியோப்பியாவின் பாலைவனப் பகுதிகளில் இந்த மாற்றம் நிகழ்வதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எத்தியோப்பியாவின் பாலைவனப் பகுதியில் உருவான விரிசல்
எத்தியோப்பியாவின் பாலைவனத்தில், குறிப்பாக அஃபார் பகுதியில் ஏற்பட்ட விரிசல்கள், பூமியின் டெக்டோனிக் தகடுகள் பிரிந்து வருவதற்கான சான்றாகும். இதனால், ஆப்பிரிக்கா புதிய நிலப்பரப்புகளாகப் பிரிவதற்கு முக்கிய காரணமாகிறது. மேலும், இது 2005ஆம் ஆண்டில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு மட்டுமல்லாமல் இங்கு உருவான 35 மைல் நீளமுள்ள விரிசல், பூமிக்கடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகளின் அசைவால் மெல்ல மெல்ல அகலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
புவித் தட்டுகளால் நிகழும் மாற்றம்
இந்த நிகழ்விற்கு முக்கியக் காரணம் ஆப்பிரிக்கத் தட்டு, சோமாலித் தட்டு, அரேபியத் தட்டு ஆகிய மூன்று பிரம்மாண்ட புவித் தட்டுகள் வருடத்திற்குச் சில மில்லிமீட்டர் என்ற அளவில் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. இதனால் நிலப்பரப்பில் பள்ளங்கள் உருவாகி, கடல் நீர் இந்தப் பள்ளத்தாக்கிற்குள் புகுந்து நிரம்பும் என்றும் இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவும் ஆப்ரிக்காவும் பிரிந்து சென்றதைப் போன்ற நிகழ்வு என்றும் தெரிவிக்கின்றனர்.

புவியியல் ரீதியாக நிகழும் மிகப்பெரிய மாற்றம்
இந்தப் பிளவுப் பள்ளத்தாக்குத் தாழ்ந்து கொண்டே போவதாகவும், இறுதியில் இது கடல் படுகையாக மாறும் என்றும் இது புவியியல் ரீதியாக மாறும் மிகப்பெரிய நிகழ்வாகும் என்றும் கலிபோர்னியா பல்கலை. கடல்சார் புவி இயற்பியலாளர் கென் மெக்டொனால்ட் இதுபற்றி விளக்குகிறார்.
உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய மையமாக மாறும் கிழக்கு ஆப்பிரிக்கா
மேலும், இந்தப் புவியியல் மாற்றம் ஆப்ரிக்காவின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் இந்தப் புதிய கடல் உருவானால், இந்நாடுகளுக்குச் சொந்தமாகப் புதிய கடற்கரைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், கிழக்கு ஆப்பிரிக்கா புதிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் உருவாவதன் மூலம், உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய மையமாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:
- கால அளவு: அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் இந்த செயல்முறை முழுமையடையலாம்.
- புதிய கடல் உருவாக்கம்: ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதி, கண்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்து, புதிய பெருங்கடல் படுகையாக மாறும்.
- தொடர்புடைய நிகழ்வு: கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்கனவே பெரிய பிளவுகள் உருவாகியுள்ளன. இந்த விஞ்ஞானக் கணிப்புகள், புவியியல் மாற்றங்களின் நீண்ட கால தாக்கங்கள் மற்றும் பூமியின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
- வேகமான மாற்றம்: விஞ்ஞானிகள் கணித்ததை விட இந்த செயல்முறை விரைவாக நடைபெறலாம், இது பூமியின் மேலோட்டில் உள்ள வெப்பமான சக்திகளால் துரிதப்படுத்தப்படுகிறது.
