தேர்தல் நெருக்கத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சொதப்பியதால் , தாங்கள் கையில் எடுத்த மத அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் நயினார் மீது அதிருப்தியில் உள்ளது டெல்லி தலைமை. இதனால் மீண்டும் அண்ணாமலையை தமிழக பாஜக தலைமைக்கு கொண்டு வரும் முயற்சிகளை அமித்ஷா மேற்கொண்டு வருகிறார்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை அமித்ஷா கவனிக்கிறார் என்று அண்ணாமலையே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுவதில் இருந்தே திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை வைத்து பாஜக செய்யும் அரசியல் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தலை முன்னிட்டு பாஜக மத அரசியலை கையில் எடுத்திருக்கிறது என்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது என்பதையும் தமிழக மக்கள் கவனிக்கத் தவறவில்லை.
ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில் மலையில் உள்ள தர்கா அருகே இருக்கும் தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து ராம ரவிக்குமார் கோரிய இடத்தில் தீபம் ஏற்ற டிசம்பர் 1ம் தேதி அன்று அனுமதி வழங்கினார்.

இது தொடர்பான வழக்கில் 2014ல் இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு மாறாக, தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்று பாஜகவினரும் இந்து முன்னணியினரும் கொக்கரித்தனர். மதநல்லிணக்கத்துடன் வாழும் மதுரையில் மதரீதியான கலவரத்தைத் தூண்டுவதற்கு நீதிமன்றம் வரை செல்வாக்கைக் காட்டும் பா.ஜ.க.வால், தமிழ்நாட்டின் நல்லிணக்கம் கேள்விக்குறியாகும் சூழலில், தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதிக்கவில்லை.
நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்றுவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என்று சொல்லி மீண்டும் நீதிமன்றத்தின் கதவை தட்டினார் ராம ரவிக்குமார்.
தீபம் ஏற்ற கடும் எதிர்ப்புகள் இருந்ததை எண்ணி, மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று ராம ரவிக்குமார் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அதன்படி இந்து முன்னணியினருடன் பாஜகவினரும் திரண்டு சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. தடையை மீறிச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். தடையை மீறியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதிக்கவில்லை என்று மீண்டும் நீதிமன்றம் சென்ற நிலையில், ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வரும் இடத்தை விட்டு வேறு இடத்தில், அதுவும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே வெறும் 15 மீட்டர் தூரத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்றினால் சச்சரவுகள் ஏற்படும் நிலை இருக்கிறது. தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாட்டு அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை.

தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தினால் சச்சரவுகள் உண்டாகும் என்பதால்தான் மேல்முறையீடு செய்துள்ளது இந்து சமய அறநிலையத்துறை.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திருநாள் கடந்தாலும் பரவாயில்லை தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் எந்த நாளிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர் பாஜகவினர்.

அதிமுக கூட்டணி விவகாரத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அன்று முதல் மீண்டும் தமிழக பாஜகவின் தலைவராவதற்கான அரசியல் காய்களை நகர்த்தி வரும் அண்ணாமலை, இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்திருக்கிறார்.
அதிரடியாக செயல்பட்டு, நயினார் நாகேந்திரன் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் தீபம் ஏற்றப்பட்டிருக்கும். அவர் சொதப்பியதால்தான் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே கருத்தையே ராம ரவிக்குமாரும் அவரது ஆதரவாளர்களும் சொல்லி வருகின்றனர்.

தேர்தல் நெருக்கத்தில் திருப்பரங்குன்றத்தில் சொதப்பியது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அண்ணாமலை டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பினார். இதன் பின்னரே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்தார்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் இருக்கும்போது அண்ணாமலை டெல்லி சென்றது தமிழக பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
டெல்லி விசிட்டுக்கு பின்னர் தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமாக கமாலாலயத்திலேயே அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தது புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்றது தமிழக பாஜகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நயினார் நாகேந்திரன் இடத்தில் தான் இருந்தால் அதிரடியாக செயல்பட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற வழி செய்திருப்பேன். பாஜகவுக்கு சொதப்பல் ஏற்பட்டிருக்காது என்று சொன்னதை அமித்ஷா உள்வாங்கிக்கொண்டு, தேர்தல் நெருக்கத்தில் பாஜகவுக்கு மேலும் பின்னடைவுகள் ஏற்படக்கூடாது என்று நினைத்து மீண்டும் தமிழக பாஜக தலைமைக்கு அண்ணாமலையை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்கிறது கமலாலயம்.
