எடப்பாடி பழனிச்சாமியின் ரகசியங்கள் அனைத்தும் அண்ணாமலைக்கு தெரியும். அதனால் ஈடி, ஐடியை அனுப்பி எடப்பாடியை சிறைக்கு அனுப்பினால்தான் அதிமுக ஒருங்கிணையும் என்று ரொம்பவே காட்டமாக தெரிவித்திருக்கிறார் பெங்களூரு புகழேந்தி.
அதிமுகவினர் அனைவரும் விரைவில் இணைவோம் என்று அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் சொல்லி வருகிறார். ஆனால், கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று விடாப்பிடியாக இருந்து வருகிறார் எடப்பாடிபழனிச்சாமி.
இந்த நிலையில் அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து, பின்னர் ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த பெங்களூரு புகழேந்தி, தற்போது அதிமுக ஒருங்கிணைப்பு குழுவில் இணைந்து அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் உள்ளார். ஆனாலும் எடப்பாடியின் பிடிவாதத்தை பார்த்து ஏக கடுப்பில் உள்ளார். இந்த ஆத்திரத்தை அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கொட்டி இருக்கிறார்.
‘’அதிமுக தேய்ந்துகொண்டே போகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. அதனால் கட்சியை ஒருங்கிணைக்க சசிகலாவும், ஓபிஎஸ்சும் தயாராக உள்ளார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி மட்டும் எதிராக இருக்கிறார்’’என்றவர்,
‘’எடப்பாடி பழனிச்சாமியை நம்பிக்கை துரோகி என்கிறார் அண்ணாமலை. எடப்பாடியும் அண்ணாமலையை நம்பிக்கை துரோகி என்கிறார். உண்மையில் நம்பிக்கை துரோகி எடப்பாடிதான் என்பதை தெரிந்துகொள்ள அண்ணாமலைக்கு 2 ஆண்டுகளாகி இருக்கிறது.
அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிலைதான் இருக்கிறது. அண்ணாமலை இதை விடக்கூடாது. எடப்பாடி பழனிச்சாமியின் ரகசியங்கள் அண்ணாமலைக்கு தெரியும். இதைவைத்து ஈடி, ஐடியை ஏவி விட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு சென்றால்தான் அதிமுக ஒருங்கிணையும்’’ என்று வெடித்திருக்கிறார்.