சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற விஜய்யோடு திருமாவளவன் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார் வன்னி அரசு
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்று நூலினை தமிழக வெற்றிக்கழகம் தலைவர் நாளை வெளியிடுகிறார். இதை விசிக தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொள்வதாக இருந்தது. திடீரென்று அவர் பின்வாங்கிவிட்டார்.
திமுக கொடுத்த நெருக்கடியால்தான் திருமாவளவன் பின்வாங்கிவிட்டார் என்று செய்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து விசிக துணைப்பொதுச்செயலாளர் அளித்துள்ள விளக்கத்தில்,
’’எமது தலைவரை யாரும் பின்னிருந்து வழி நடத்திட முடியாது. சில அரசியல் தரகர்கள் அப்படி முயற்சிக்கிறார்கள். நாளை திசம்பர் 6 அன்று நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில்,திமுக கொடுத்த நெருக்கடியால்தான் எங்கள் தலைவர் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.
கோட்பாட்டு உறுதிமிக்கத் தலைவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல முடியும் என சில தரகர்கள் முயற்சிப்பது அரசியல் சோகமாகும்’’ என்கிறார்.
அவர் மேலும், ‘’அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எமது தலைவர் கூறவில்லை’’ என்கிறார்.
பின்னர் அதுகுறித்த விரிவான விளக்கத்தில், ‘’ புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார். ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும்’’ என்கிறார்.
வன்னி அரசுவின் விளக்கத்தின் மூலம் திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. திருமாவளவனைத்தான் புறக்கணித்துள்ளார்கள் என்று தெரிகிறது.
அதனால்தான், ‘’நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.