
கல்வி, சுகாராதம், சாலைகள், பூங்கா, திடக்கழிவு மேலாண்மை, சிறப்புத் திட்டங்கள் என 62 அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை நேற்றைய தினம் மேயர் பிரியா தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. 2025-26ம் நிதியாண்டில் வருவாய் செலவினம் ரூ.5,214 கோடி; மூலதன செலவினம் ரூ.3,190.61 கோடி என மொத்த செலவினம் ரூ.8,404.70 கோடியாக உள்ளது.
நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அறிவிப்புகளை இங்குக் காண்போம்.
- மகளிருக்கான சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கிட ரூ.7.50 கோடி செலவில் 15 மண்டலங்களில் தலா ஒரு மையம் அமைக்கப்பட உள்ளது.
- ரூ.14 கோடியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காற்று புகும் வகையில் பதனம் செய்யும் உரம் தயாரிக்கும் கூடம் (Windrow Compost Plant) கட்டப்பட உள்ளது.
- ரூ.22.25 கோடியில் 10 மண்டலங்களில் தலா 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட நெகிழி சிப்பமாக்கல் மையங்கள் (Plastic Baling Centre) அமைக்க உள்ளது.
- தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ரூ.3 கோடி செலவில் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட இருக்கிறது.
- ரூ.8 கோடியில் குப்பைகளைப் பெருக்கி உறிஞ்சியெடுத்து சுத்தம் செய்யக்கூடிய 20 Ride on sweeping cum suction வாகனங்கள் வாங்கப்படுகிறது.
- சுமார் 30 கோடி ரூபாய் செலவில் 200 புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளது.

- மணலி, IOCL, டோல்கேட் மற்றும் சாலிகிராமத்தில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் ரூ.16 கோடியில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- ரூபாய் 2 கோடியில் 70 பூங்காக்களில் இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு பகுதி நிறுவப்பட உள்ளது.
- 300 பூங்காக்களைப் பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்காக ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூபாய் 2.50 கோடியில் ஆண்டார் குப்பம் – ஏலந்தனுார், சடையன்குப்பம் – பர்மா நகர் ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட உள்ளது.
- மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வார்டு மேம்பாட்டு நிதி, கடந்த நிதியாண்டில் ரூ.50 லட்சமாக இருந்தது. இது தற்போதைய நிதியாண்டில் ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்த அரசுக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள்ளப்பட உள்ளது.
துறைகள் வாரியாக பார்க்கையில்; மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1,032.25 கோடி, பேருந்து சாலை துறைக்கு ரூ.628.35 கோடி, கட்டிடங்கள் துறைக்கு ரூ.413.63 கோடி, திடக்கழிவு மேலாண்மை துறைக்கு ரூ.352 கோடி, மண்டலங்களுக்கு ரூ.279.01 கோடி, சிறப்பு திட்டங்களுக்கு 179.03 கோடி என இன்னும் பல்வெறு துறைகளுக்கு திட்டமிட்டு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
திட்டங்களைத் தவிர்த்து வருவாயை அதிகரிப்பதற்காக வரி செலுத்த ஏதுவாக QR Code அச்சிட்ட அட்டைகள், வணிக வளாக வாடகைதாரர்கள் இணையதளம் வழியாக வாடகை செலுத்தும் வசதி, உணவு விற்பனை மண்டலங்கள் (Food Court) போன்ற சிறப்பு அம்சங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்நிதியாண்டில் வருவாய் வரவு ரூ.5,145 கோடி, வருவாய் செலவினம் ரூ.5,214 கோடியாக உள்ள நிலையில், வருவாய் பற்றாக்குறை ரூ.69 கோடியாக உள்ளது. இந்த பற்றாக்குறை நிதி கடந்த ஆண்டில் ரூ.263 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
fxrbb6
80fcwi