
மாநில அரசுகள், பெண்களுக்கான பயண வசதிகளை மேம்படுத்த இலவச பேருந்துப் பயணத் திட்டங்களை கடந்த சில வருடங்களாக முன்னெடுத்து வருகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படும் இந்த திட்டம், இப்போது ஆந்திரப் பிரதேசத்திலும் தொடங்கப் போகிறது. பெண்களின் தினசரி செலவு மற்றும் பயணங்களில் இந்த இலவச பேருந்துப் பயணத் திட்டம் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது? எந்த மாநிலம் பெண்களுக்கு அதிக நன்மை தருகிறது? முழு ஒப்பீட்டை பார்ப்போம்.
தமிழ்நாடு – மகளிர் விடியல் பயணம்:
பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் இந்தியாவில் முதன்முதலாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தபட்டது. அரசு பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கும் இந்த மகளிர் விடியல் பயணம், தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த திட்டம் பெண்களின் தினசரி வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, தொடங்கிய ஒன்பது மாதங்களுக்குள் பெண் பேருந்து பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 61 சதவீதமாக அதிகரித்தது.
அரசின் கணக்கீட்டுப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 730 கோடி இலவசப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பெண்கள்சராசரியாக மாதம் ₹888 வரை சேமிக்கிறார்கள் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. லக்சுரி பேருந்துகள் இதில் சேர்க்கப்படாத போதிலும், மாநிலம் முழுவதும் இந்த திட்டம் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டதிற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்பதால், மக்கள் எளிமையாக பயனுறும் வகையிலும் இத்திட்டம் செயல்படுகிறது. கூட்ட நெரிசல் போன்ற சவால்கள் இருப்பினும் பெண்கள் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

கர்நாடகா – ஷக்தி திட்டம்:
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, 2023 ஜூன் மாதத்தில் கர்நாடகா ஷக்தி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் கர்நாடகாவில் வசிக்கும் பெண்கள், நான்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களான KSRTC, BMTC, NWKRTC மற்றும் KKRTC ஆகியவற்றால் இயக்கப்படும் பிரீமியம் அல்லாத அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கிறது. மாநிலத்துக்குள் மட்டுமே பயன்படும் இந்த திட்டம் Seva Sindhu வழியாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு முறையை அறிமுகப்படுத்தியிருப்பது தனிச்சிறப்பு.
தெலங்கானா – மகாலக்ஷ்மி திட்டம்:
2023 டிசம்பரில் தொடங்கிய மகாலக்ஷ்மி திட்டம் தெலங்கானாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பெண்கள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் அனைவருக்கும் நகரப்புற, கிராமப்புற பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படுகிறது. மிக குறுகிய காலத்தில் இத்திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 மாதங்களில் 200 கோடி இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன; இதன் மூலம் பெண்கள் சுமார் ₹6,700 கோடி வரை சேமித்துள்ளனர் என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் – ஸ்ரீ சக்தி திட்டம்:
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை தொடர்ந்து, மகளிர்க்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை ஸ்ரீ சக்தி என்னும் பெயரில் 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்துகிறது ஆந்திர மாநிலம். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் திருநங்கைகள் பல்லேவெலுகு, அல்ட்ரா பல்லேவெலுகு, சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ் மற்றும் மெட்ரோ எக்ஸ்பிரஸ் போன்ற பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இவை APSRTC பேருந்துகளில் 74 சதவீதம் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், பயணிகள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு அல்லது மாநில மற்றும் யூனியன் அரசுகளால் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
மாநிலங்கள் ஒப்பீடு – யார் முன்னிலை?
இந்த மாநிலங்கள் நான்கையும் ஒப்பிடும்போது, மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மாநிலமாக தெலங்கானா திகழ்ந்தாலும் தெளிவான தரவுகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் பயன் மற்றும் நீடித்த கால வெற்றி என்கிற அடிப்படையுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஸ்மார்ட் கார்டு முறையில் பெண்களுக்கு எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் கர்நாடகா, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் முன்னிலையில் உள்ளது. ஆந்திரப் பிரதேசம் புதியதாக தொடங்கும் நிலையில் இருந்தாலும், தமிழ்நாடு மாதிரியை பின்பற்றுவதால், விரைவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயண திட்டங்கள், அவர்களின் பொருளாதார பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகத் திகழ்கிறது. எதிர்காலத்தில் இத்திட்டங்கள் மேலும் விரிவடைந்து, மாநிலங்களுக்கு இடையேயான போட்டியை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.