மோடியின் 3.0 புதிய ஒன்றிய அமைச்சரவையில் 71 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 9 கட்சிகளில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக, கூட்டணி கட்சியில் இருந்து 11 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் குமாரசாமி, ராஷ்டிரிய லோக் தளம் ஜெயந்த் சவுத்ரி, ஐக்கிய ஜனதா தளம் லாலன் சிங், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஜிதன் ராம் மஞ்சி, தெலுங்கு தேசம் ராம் மோகன் நாயுடு, லோக் ஜனசக்தி சிராக் பஸ்வான் உள்ளிட்ட 7 பேர் முதன் முறையாக ஒன்றிய அமைச்சர்களாகி உள்ளனர்.
16 எம்.பிக்களுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், 12 எம்.பிக்களுடன் நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவ்விரு கட்சிகளுக்கு தலா 2 ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், கர்நாடக மாநிலத்தில் 2 முறை முதல்வராக பதவி வகித்தவருமான குமாரசாமி கேபினட் அமைச்சர் ஆகியுள்ளார்.
2014ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலும் பீகாரில் முதலமைச்சராக இருந்த ஜிதன் ராம் மஞ்சிக்கு ஒன்றிய கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ள 36 வயதான ராம் மோகன் நாயுடு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் இருந்து 3 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை மறைந்த கிஞ்சராபு யெர்ரான் நாயுடு, கடந்த 1999ல் இருந்து 1998 வரை ஐக்கிய முன்னணி அரசில் எம்.எல்.ஏவாகவும் , எம்.பி.யாகவும், ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர்.
தெலுங்கு தேசம் கட்சியின் இன்னொரு எம்.பி. சந்திரசேகர் பெம்மாசாணி. 48 வயதான இவர் பணக்கார எம்.பி. குண்டூர் மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.ஆன இவர் டாக்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் தனது தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் குடும்ப சொத்து மதிப்பு ரூ.5,785 கோடிக்கு மேல் என்று தெரிவித்து பலரையும் வாய்பிளக்க வைத்தார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.பி.க்களில் 2 பேர் ஒன்றிய அமைச்சர் ஆகியுள்ளனர். 69 வயதான
‘அப்னா தளம்’ தலைவர் அனுப்ரியா படேல் 2014ம் ஆண்டு முதல் உ.பி. மிர்சாபூர் தொகுதியில் இருந்து தேர்வானவர். மோடி அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராக இருந்தவர். இவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் லோக் ஜனசக்தி 5 இடங்களில் வெற்றி பெற்றது. ஹாஜிபூர் தொகுதியில் இருந்து எம்.பி. ஆன, கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தியின் நிறுவனரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்த கர்புரி தாக்கூரின் மகன் ராம்நாத் தாக்கூர் (ஐக்கிய ஜனதா தளம்) பீகார் சட்ட மேலவை உறுப்பினராகவும், ராஜ்யசபா தலைவராகவும் இருந்தவர். இவர் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றார்.
சிங், பூமிஹார் உயர் சாதியை முக்கியப்படுத்துவதாக அமைந்தாலும் 73 வயதான ராம்நாத் தாக்கூரின் தேர்வு மாநிலத்தின் மிகவும் பின் தங்கிய EBC சாதியினரை மகிழ்விக்கும் என்று பேசப்படுகிறது. பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூர் OBC ,EBC இட ஒதுக்கீட்டின் முன்னோடியாக பார்க்கப்படுகிறார்.
சமஸ்திபூரைச் சேர்ந்த ராம்நாத் தாக்கூர் 2005 -2010 கால கட்டத்தில் பீகார் மாநில அமைச்சராக இருந்தவர். 1970ல் இவர் தந்தை கர்புரிக்கு உதவியாக இருக்க அரசியலில் நுழைந்தவர். 1988ல் கர்பூரி மறைவுக்கு பின்னர் எம்.எல்.ஏ.ஆனார். 1994ல் பீகார் சட்டமன்றத்தின் மேல்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். 2005ல் சமஸ்திபூரில் வென்று நிலம் மற்றும் வருவாய் அமைச்சராக இருந்தார். 2010 சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
‘ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’வின் ஜிதன் ராம் மஞ்சிக்கு மோடியின் புதிய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 79 வயதான ஜிதன் ராம் மஞ்சி பீகாரில் கயா தொகுதியில் போட்யிட்டு வென்றவர். பீகாரில் பிறந்த இவர் 1980ல் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். காங்கிரஸ், ஆர்.ஜே.டி., ஜனதா தளம் கட்சிகளில் அங்கம் வகித்துள்ளார். 2014 -2015ல் பீகார் முதல்வராக இருந்தவர் . 2015ல் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியை துவங்கியவர் முதன்முறையாக ஒன்றிய அமைச்சர் ஆகியுள்ளார்.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இணை அமைச்சராக இருந்தவர் ராம்தாஸ் அத்வாலே. 64 வயதான ராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிராவில் சாங்லி மாவட்டத்தை சேர்ந்தவர். கவிஞர், ஓவியர், சமூக ஆர்வலரான இவர் எழுபதுகளில் தலித் சிறுத்தைகள் இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய குடியரசுக்கட்சியில் இருந்து பின்னர் இந்திய குடியரசுக்கட்சி(A)வின் தலைவராக இருந்து வருகிறார்.
1990 -1996ல் எம்.எல்.சியாக இருந்தவர் சமூக நலம் மற்றும் போக்குவரத்து , வேலை உறுதித்திட்டம் மற்றும் மதுவிலக்கு பிரச்சார அமைச்சராக இருந்தவர். 1998-99, 2004-2009 காலகட்டத்தில் மும்பை வடக்கு மத்திய பகுதியின் எம்.பியாக இருந்தார்.
2009ல் ஷீரடி மக்களவை தொகுதியில் தோல்வி அடைந்த ராம்தாஸ் அத்வாலே, 2013-14ல் பாஜக, சிவசேனாவுடன் இணைந்து சிவசக்தி பீம் சக்தி கூட்டணியை உருவாக்கினார். புதிய சேனாவை இவர் வளர்த்தெடுத்ததை பார்த்து 90களில் பாலாசாகேப் தாக்கரே இவரை பாராட்டியுள்ளார்.
தலித் விவகாரங்களில் ஈடுபாட்டுடன் இருப்பதை தவிர, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
லாலன் சிங் என்று அழைக்கப்படும் 69 வயதான ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜிவ் ரஞ்சன் சிங் 4 முறை எம்.பியாக இருந்தவர். ஜேடியு தலைவராகவும், பீகாரில் அமைச்சராகவும் இருந்தவர். பீகாரில் முதல்வரக இருந்த கர்புரி தாக்கூரால் வளர்கப்பட்டவர். ஒரு காலத்தில் இவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் உதவியாளராக கருதப்பட்டார். ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் யாதவ் உடனான நெருக்கம் காரணமாக நிதிஷ்குமாரின் ஆதரவை இழந்தார். ஆனாலும் நிதிஷ்குமாருக்கு இவர் மீதான செல்வாக்கு இருந்தது.
மகாராஷ்டிராவிவின் புல்தானா மக்களவை தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதாப் ராவ் ஜாதவ்(சிவசேனா ஷிண்டே). இவருக்கு மோடியின் புதிய அமைச்சரவையில் இணை அமைச்சர் -தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 1986ல் இருந்து சிவசேனாவில் இருந்து வருகிறார். சொந்த மாவட்டமான புல்தானாவில் இவர் சட்டமன்ற உறுப்பினராகவும், எம்.பியாகவும் தொடர்ந்து தேர்வாகி வந்துள்ளார்.
1995ல் மெஹ்கர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அந்த ஆண்டு பாஜக -சிவசேனா ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் ஆனார். 2009, 2014,2019 ல் புல்தானா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்.பி.ஆனார். சிவசேனா பிளவுபட்டபோது சிவசேனா(ஷிண்டே)வில் இணைந்தார். 2024ல் மீண்டும் புல்தானாவில் போட்டியிட்டு வென்று ஒன்றிய இணை அமைச்சர் – தனி பொறுப்பு பெற்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரன் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜித் சிங்கின் மகன். கடந்த சில வருடங்களில் வளர்ந்த இளம் அரசியல் தலைவர். பாரம்பரியமிக்க அரசியல் குடும்ப வாரிசு. வெளிநாட்டில் படித்துவிட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த ஜெயந்த் சவுத்ரி அஜித் சிங் மறைவுக்கு பின்னர் கட்சிக்கு பொறுப்பேற்றார்.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட, நில பிரபுத்துவம் அதிகம் கொண்ட ஜாட் இன மக்களின் அடையாளமாக உள்ளது ராஸ்டிரிய லோக் தளம். பாஜகவின் வேளாண் சட்டங்களை எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் உ.பி. ஜாட் இன மக்கள். இதனால்தால் அமித்ஷா எத்தனையோ முறை அழைத்தும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை ஜெயந்த் சவுத்ரி. ஆனால் 2014, 2019 மக்களவை தேர்தல் தோல்விகள், 2022ல் 32 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததால் தொடர் தோல்வியில் இருந்த ஜெயந்த் சவுத்ரி பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு வென்று ஒன்றிய இணை அமைச்சர் தனிப்பொறுப்பு பெற்றுள்ளார்.