
அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனையால் நேரடியாகப் பலம் பெறப்போவது விஜய்தான் என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. அவர் மேலும், விஜய்யை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு அதிமுக பிரமுகர்கள் பேரம் பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.
அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், டிடிடி தினகரன் உள்ளிட்டோரை இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை பழனிசாமி ஏற்றுக் கொள்ளாததால், என்.டி.ஏ. கூட்டணியில் தாங்கள் வருவதென்றால் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அடம்பிடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, தவெகவுடன் கூட்டணி அமைத்துவிடுவோம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து கே.சி.பழனிசாமி, ‘’நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று நான் முயற்சித்தேன். அப்பொழுது எடப்பாடி பழனிசாமி அதை தரம் தாழ்ந்து விமர்சித்தார். ஆனால் தற்பொழுது ஒருங்கிணைப்பை பாஜக பின்னணியில் இருந்து இயக்குகிறது.
கட்சியை ஒன்றிணைக்க பாஜக அதிக அழுத்தம் கொடுத்தால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜயோடு கை கோர்க்க முயற்சிக்கிறார் எடப்பாடி. ஆனால் தற்பொழுது களத்தில் அதிமுகவின் பலவீனத்தால் தான் விஜய் பலமானவர் போல் தோற்றமளிக்கிறார்.
நான் ஒருங்கிணைப்புக்கு முயற்சி செய்தபோது எடப்பாடி அதை செய்திருந்தால் 40-50 தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு விஜய் கூட்டணியில் இணைந்திருப்பார். ஆனால் தற்பொழுது 100-க்கும் மேல் தொகுதிகளை எதிர்பார்க்கிறார். அதேபோல NDA வை விட்டு விஜயுடன் செல்லும் வாய்ப்பு OPS, TTV போன்றொருக்கு இல்லை . ஆனால் தற்பொழுது விஜயோடு அணிசேர வாய்ப்பு உள்ளது. அன்று எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் தற்போது சொல்கிறார்கள்’’ என்கிறார்.

வெற்றிக்கு ஒற்றுமை தேவை என்பதை தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஒருவேளை வெற்றி பெறாவிட்டாலும் எடப்பாடியின் தலைமைக்கு ஆபத்து வரும். எனவே ஏதேனும் ஒரு விதத்தில் ஒன்றுபடுத்த முயற்சிப்பது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது என்கிறார் பழனிசாமி.
ஆனால் பழனிசாமியோ இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளார்.