
தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது போதை பொருள் விற்பனையா? பட்டாசு ஆலை விபத்துகளா? என்று பட்டிமன்றமே வைக்கக்கூடிய அளவிற்கு இந்த இரண்டு ஆபத்துகள் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. போதைப் பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி இளைய தலைமுறையைக் காக்க வேண்டியவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள். பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுத்து நிறுத்தி உயிர்களைக் காக்க வேண்டியவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இரண்டு தரப்பிலும் காட்டப்படும் அலட்சியம் மற்றும் முறைகேடுகளால் தமிழ்நாட்டில் தொடர்ச்சியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் புகழ்பெற்றவை தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள். தற்போது தீபாவளிப் பண்டிகையின்போது பிரபலமாகியுள்ள சீனா பட்டாசுகளுக்கு முன்பே சிவகாசிப் பட்டாசுகள் பல வகைகளிலும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றவையாகும். சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் என விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பட்டாசு ஆலைகளும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் உள்ளன. இது அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளன. குறிப்பாக, பெண்கள் அதிகளவில் இந்த பட்டாசு ஆலைகளில் பணியாற்றுகிறார்கள். சிறார்களை குறைந்த ஊதியத்திற்கு பணியில் சேர்ப்பதாக பல முறை குற்றச்சாட்டுகள் நடந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.
எப்போதும் கவனத்திற்கும் சர்ச்சைக்கும் உரியதாக இருக்கும் விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் அண்மைக்காலமாக விபத்துகள் தொடர்ச்சியாக ஏற்படுவதால், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கடந்த 1ந் தேதியன்று சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் 50 பேர் அளவிற்கு வேலை பார்த்துவந்தனர். பட்டாசுக்கான வெடிமருந்தை நிரப்பும் வேலை நடந்தபோது ஏற்பட்ட உராய்வினால் விபத்து ஏற்பட்டு, 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுபோல கடந்த மாதமும் அதற்கு முந்தைய மாதங்களிலும் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலிகளாகியுள்ளன.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை போதாது என்பதை எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளுமே வலியுறுத்துகின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலத் தலைமையிலிருந்து இது குறித்து அரசுக்கு வலியுறுத்தல்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் அரசுக்குத் தெரிவித்துள்ள ஆலோசனைகள் முக்கியமானவை.
பட்டாசு ஆலைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் குறித்து, தொழிலாளர்களுடன் கலந்தாலோசித்து, வரைவு அறிக்கையைளை உருவாக்க வேண்டும். அந்த வரைவு விதிகள் மீது பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு இறுதி விதிகளை வகுக்க வேண்டும். பாதுகாப்பு விதிகளைத் தளர்த்தாமல் கண்டிப்பாகச் செயல்படுத்தக்கூடிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சியளித்து, பட்டாசு ஆலைகளைக் கண்காணிக்கும் பணியில் நியமிக்கவேண்டும். இந்தப் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது. நியமிக்கப்படும் அதிகாரி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது அந்தப் பணியில் இருக்கவேண்டும். இதையும் தாண்டி விதிமீறலில் ஈடுபட்டு, விபத்துக்கு காரணமாகி, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம், இழப்பீட்டுத் தொகை வசூல், உரிமம் ரத்து என இந்த நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட வேண்டியவையாகும். அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சிப் பெற்றுள்ள நிலையில், சர்வதேச தரத்திலானபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். தாங்கள் வாழும் ஊரிலேயோ அதன் அருகிலேயோ வேலை கிடைக்கிறது என்பதால் பட்டாசு ஆலைகளுக்கு ஆண்களும் பெண்களும் அதிகம் வருகிறார்கள். ஏழ்மையான குடும்பச் சூழலில் உள்ள அவர்களை உழைப்பை உறிஞ்சுவதுடன், உயிருக்கும் உத்தரவாதமில்லை என்கிற நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் செயல்படுவது தொழிலாளர் விரோதமும், மனித உரிமை மீறலுமாகும்.
தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளில் பன்னாட்டு முதலீடுகள் மூலம் பல நிறுவனங்களைக் கொண்டு வந்து அதில் அதிகளவில் பெண்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. அத்துடன் அவர்களின் பாதுகாப்புக்கான விடுதி உள்ளிட்டவையும் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. சர்வதேச நிறுவனங்களில் விதிகள் மீறப்பட்டால் தொழிலாளர்களின் போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்கிறது. தீர்வுகள் கிடைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. உள்நாட்டு முதலாளிகளால் நடத்தப்படும் பட்டாசு ஆலைகளிலும் இந்த பாதுகாப்பும் தொழிலாளர் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும்.