
கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுகவை கடுமையாக விமர்சித்ததால்தான், அதிமுகவின் பொதுச்செயலாளர் பழனிசாமியையே ஒருமையில் அண்ணாமலை பேசி அது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது.
மீண்டும் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையில், அண்ணாமலையின் தலைமை இல்லாதிருந்தால் கூட்டணி ஓகே! என்று பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால்தான் அமித்ஷாவின் சென்னை பயணத்தின் போது தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்டார் என்ற பேச்சு இருக்கிறது.
பழனிசாமியின் சிபாரிசில்தான் தமிழக புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார் என்பது அண்ணாமலை வட்டாரத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால்தானோ என்னவோ தெரியவில்லை, நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். பதிலுக்கு நயினார் நாகேந்திரன் சார்பில் ஓட்டப்படும் போஸ்டர்களில் அண்ணாமலையின் பெயரை தவிர்த்து வருகின்றனர் நயினாரின் ஆதரவாளர்கள்.

அண்ணாமலைக்கும் நயினாருக்குமான பனிப்போர் நீடித்து வரும் நிலையில், தனி வார் ரூம் அமைத்து நயினாருக்கு எதிரான ரிப்போர்ட்கள் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி வருகிறார் அண்ணாமலை என்று சொல்கிறது கமலாலய வட்டாரம்.
தமிழக பாஜகவில் தலைவர்களாக இருந்தவர்களுக்கு தேசிய அல்லது மாநில அளவில் உயர் பதவிகள் வழங்கி வந்தது பாஜக டெல்லி தலைமை. அண்ணாமலைக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லாததால் அதிருப்தியில் அவர் உள்ளதாகவும், இதனால் தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், உண்மையில் அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து ஆபர் வந்தது என்றும், அண்ணாமலைதான் அதை மறுத்துவிட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, தலைவர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கினாலும் தமிழக பாஜகவில் தனக்கான செல்வாக்கு இன்னமும் அப்படியேதான் இருக்கின்றது என்பதை நிரூபித்து வருகிறார் அண்ணாமலை. பாஜக முக்கிய பொதுக்கூட்டங்களில் அண்ணாமலைக்கு அவரது ஆதரவாளர்கள் தரும் ஏகோபித்த வரவேற்பு பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தினந்தோறும் இரண்டு பேட்டிகளையாவது கொடுத்து, பரபரப்பு தீயை பற்றவைத்து தமிழக அரசியல் களத்தை எப்போதும் சூடாகவே வைத்திருந்த அண்ணாமலை இப்போது மவுனம் காத்து வருகிறார். அவர் தனிக்கட்சி தொடங்கவிருப்பதுதான் இந்த மவுனத்திற்கான அர்த்தம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக, ‘அண்ணாமலை அன்பு கூட்டம்’ எனும் பெயரில் அவரது ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தி வருவதாக தகவல் பரவுகிறது.