
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தி.மு.க. ஆட்சியில் கல்லூரிகள் கட்டப்படுவதில் சதி இருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அவர் மேற்கொண்டுள்ள பரப்புரைப் பயணத்திற்கு தினமும் ஒரு கன்டென்ட் தேவை. தமிழ்நாட்டை கடனில் தள்ளிவிட்டது தி.மு.க. அரசு என்று ஒரு நாள் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது என்று இன்னொரு நாள் குற்றம்சாட்டினார். பெரிதாக எடுபடவில்லை.
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தபிறகு தொடங்கப்பட்டுள்ள பயணம் என்பதாலும், அவர் பயணிக்கும் இடங்களில் பொதுமக்களைவிட பா.ஜ.க. கொடிகளே அதிகம் இருப்பதாலும், பா.ஜ.க. பேசுகிற தொனியிலேயே, கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதை சதி என்று குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கோயில் அபிவிருத்திக்காக உண்டியலில் போடப்படும் பணத்தில் எதற்கு கல்லூரி கட்டுகிறீர்கள் என்று தி.மு.க அரசை நோக்கி கேட்கிறார் தமிழ்நாட்டில் ஏற்கனவே முதலமைச்சராக இருந்த பழனிசாமி.
தமிழ்நாடு என்பது சென்னை மாகாணமாக இருந்தபோது பனகல் அரசர் ஆட்சியில் 1922ல் இந்து பரிபாலன சட்டம் முன்னெடுக்கப்ப்ட்டு, 1927ல் இந்து சமய அறநிலையச் சட்டத்தின் அடிப்படையிலான வாரியம் கொண்டு வரப்பட்டது. பல கோயில்களின் சொத்துகள் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மற்றும் குடும்பத்தினரின் பிடியில் இருந்த நிலையை மாற்றி, அரசு நிர்வாகத்தின் கீழ் முறைப்படுத்தப்பட்டன. பின்னர், சுதந்திர இந்தியாவில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டு தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம் (1959)ன் படி 1960ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் காமராஜர்.
இந்த சட்டத்தில் உள்ள 66(1)(ஜி) விதியின்படியே, கோயில் சொத்துகளை கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்பது இடம்பெற்றிருக்கிறது. காமராஜர் ஆட்சியின்போதே 1963ல் பழநியில் அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி தொடங்கப்பட்டது. அடுத்து வந்த காங்கிரஸ் முதல்வர் பக்தவத்சலம் ஆட்சியின்போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. நாகை மாவட்டம் மேலையூரில் பூம்புகார் கல்லூரி உருவானது. 1970ல் கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது பழநியில் அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி உருவானது. பின்னர், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1978ஆம் ஆண்டு குற்றாலம் பராசக்தி கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக் குழு மூலம் தன்னாட்சி அங்கீகாரம் பெறப்பட்டது. மேற்சொன்ன கல்லூரிகளில் சுயநிதி வகுப்புகளும் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டன. 1980ஆம் ஆண்டு பழநியில் அருள்மிகு பழநியாண்டவர் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2021ல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்து அறநிலையத்துறையின் சார்பில் கொளத்தூரில் மயிலை கற்பகாம்பாள் பெயரில் மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது.
செல்வி. ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்திலும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கல்லூரிகளின் மேம்பாட்டுக்கான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான கல்வெட்டுகளும் நிறுவப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சைவ – வைணவ ஆன்மிக நிறுவனங்கள் சார்பிலான கல்விப்பணிகள் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன. சைவ ஆதீன மடங்கள் சார்பில் சமயம் சார்ந்த வகுப்பகள், பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை அறியாத ஒரே அரசியல் கட்சியான பா.ஜ.க., இந்து சமய அறநிலையத்துறையை கலைக்கவேண்டும் என்றும், கோயில்களை இந்துக்களிடம் வழங்கவேண்டும் என்றும், கோயில் பணத்தை வேறு பணிகளுக்கு செலவிடக்கூடாது என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறது.
பா.ஜ..க.வும் அதன் குரலில் பேசுபவர்களும் சிறந்த கோயில் நிர்வாகமாக சுட்டிக்காட்டுவது, தன்னாட்சிமிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தைத்தான். அந்த திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், பத்மாவதி மகிளா விஸ்வா வித்யாலயம், எஸ்.வி. கலைக் கல்லூரி, ஸ்ரீபத்மாவதி பெண்கள் ஜூனியர் காலேஜ் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் பணத்தில் ஏன் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் நடத்துகிறீர்கள்? இது இந்துக்களுக்கு எதிரான சதி என்று ஆந்திர மாநில பா.ஜ.க.கூட இதுவரை குற்றம்சாட்டி குரல் கொடுத்ததில்லை. எஜமானர்களை மிஞ்சிய விசுவாசியாக பரப்புரையை மேற்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் நடத்தப்படுவதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டியிருப்பது, அவர் தன்னை முழுமையாக பா.ஜ.க.விடம் அடமானம் வைத்துவிட்டாரா என்ற எண்ணத்தைத்தான் பொதுமக்கள் மனதில் உருவாக்கியுள்ளது.