
மதிமுகவின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது வைகோதான் அண்மையில் இருவரையும் இணைத்து வைத்தார். ஆனால் வைகோவே மல்லை சத்யா இயக்கத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டி இருக்கிறார். இதனால் மல்லை சத்யா மதிமுகவில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற தகவல் பரவுகிறது. அதற்கேற்றார்போல், பூந்தமல்லியில் இன்று நடைபெறும் கட்சியின் கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் மல்லை சத்யாவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது தலைமையின் உத்தரவு என்கிறார்கள்.

மதிமுகவில் என்னதான் நடக்குது?
’’நான் அவரை உடன்பிறவா தம்பியை போல் நடத்தி வந்தேன். அவர்(மல்லை சத்யா) இரண்டு ஆண்டுகளாகவே இயக்கத்துக்கு எதிராக யாரெல்லாம் கட்சியை விட்டு போனார்களோ அவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களோடு நிகழ்ச்சிகளுக்கு போய் வந்தார். என்னைப்பற்றி மிக மோசமாக பதிவுகளை போடக்கூடிய நான்கைந்து பேரோடு நெருக்கமான நட்பு வைத்துக்கொண்டு, அவர்கள் வெளிநாடுகளில் இருந்து பதிவுகளை போடுகிறார்கள். இங்கே இரண்டு மூன்று பேர் அதை அப்படியே பரிமாறுகிறார்கள்.
தோழர் மல்லை சத்யா அவர்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டு அவர்களின் திருமண நிகழ்சிகளுக்கு எல்லாம் சென்று இரண்டு நாள் தங்கிவிட்டு வந்தார். அவர் 7 முறை வெளிநாடுகளுக்கு போனபோது எந்த இடத்திலும் அவர், மதிமுக துணை பொதுச்செயலாளர் என்று சொல்லவே இல்லை. அவர் என் பெயரைக்கூட சொல்லவில்லை; பரவாயில்லை. ஆனால், தான் மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறேன் என்று கூட சொல்லவில்லை. தான் மாமல்லபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் என்று சொல்லி வந்தார்.
எந்த பயணத்திற்கும் அவர் என்னிடம் சொல்லிவிட்டும் போனதில்லை.

இந்த இயக்கத்தை எப்படியாவது பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அலைபேசியில் அலவளாவது, காஞ்சி மாவட்டத்தில் இந்த முறையில் சில குழப்பங்களை ஏற்படுத்தி புகழேந்தி மூலமாக பத்திரிகையாளர்களிடம் தவறான கருத்துக்களை சொல்ல வைத்தார்.
இந்த சூழ்நிலையில் அவர் இயக்கத்திற்கு உள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு குழுவை அவர் தயாரிக்க முயன்றார். அது நடக்கவில்லை. ஆகவேதான் அவர் கடைசியாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு வரும்போதும் மதிமுக பெயரை உச்சரிக்கவில்லை. எனவேதான் இயக்கத்தினர் எல்லோரும் நமக்கு எதிரானவர்களை ஊக்குவிக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்கள். ஆகவேதான் இந்த உண்மைகளை சொல்லாவிடில் கட்சிக்காரர்களுக்கு தெரியாமல் போய்விடும் என்றுதான் நிர்வாகக்குழுவில் பேசும்போது, அவரை என் தம்பியை போல் நினைத்தேன். ஆனால், அவர் எதிராக செயல்படுகிறார் என்று தெரிவித்தேன்.
அதற்கு அவர், தான் தலித் சகோதரர் என்பதால் இப்படிச் செய்கிறேன் என்று பரவவிட்டார். திராவிட இயக்கத்தில் தலித்துகளுக்கு முதன் முதலாக பதவி கொடுத்ததே மதிமுகதான் . நான்கு சீட்டில் இரண்டு சீட்டை தலித்துகளுக்கு ஒதுக்கியவன் நான். குடியரசு அண்ணனை துணை பொதுச்செயலாளராக்கினேன். அவர் மறைந்ததும் அவர் குடும்பத்தில் இருந்த 8 பேருக்கும் பெரிய செலவு செய்து வீடு கட்டிக் கொடுத்தேன். என் வீட்டில் முழுநேர உதவியாளராக இருந்த தலித் சகோதரர் சந்துருக்கு சொந்த ஊரில் புது வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இவர் இப்படி பரவ விடுகிறார்.

உளவுத்துறையில் எனக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் ஆதாரத்தோடு சொல்கிறேன். அவர் மதிமுகவுக்கு எதிரானவர்களோடு தொடர்பில் இருக்கிறார். அவர் ஏன் இரண்டு ஆண்டுகளாக தலைகீழாக மாறினார்?முத்து ரத்தினத்தோடு இப்போது தொடர்பில் இருக்கிறார்.
இப்படி இரு நிலையை யாரும் இயக்கத்திலே ஏற்படுத்தியதில்லை. இது மூடுமந்திரமாக இருக்கக்கூடாது. இதை நிர்வாகக்குழுவில் சொல்லிவிடுங்கள் என்று இயக்கத்தினர் சொன்னதால்தான் நான் சொன்னேன்.
அவர் இயக்கத்திற்கு மாறுபட்டு நடக்கிறார். இவர் தயாரித்து கொடுப்பதைத்தான் வெளியில் உள்ளவர்கள் பரப்புகிறார்கள். இதை என்னால் சகித்துக்கொண்டு இருக்க முடியாது.
பெரிய சிங்கம், புலின்னு சொன்னவங்க போனபோதெல்லாம் ஒரு துரும்பும் அசையவில்லை. அதனால் மல்லை சத்யாவால் இயக்கத்திற்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது’’ என்கிறார் வைகோ.

மல்லை சத்யா இதை மறுக்கிறார். அவர், ‘’தமிழ்சங்கம் சார்பான வெளிநாட்டு நிகழ்ச்சிக்கும் கூட கரை வேட்டி கட்டித்தான் சென்றேன். வைகோ அவர்கள் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. என் மீது இப்படி ஒரு பழியை சுமத்துவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் 32 ஆண்டுகளாக உண்மையாக இருந்து வருகிறேன். என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்கு பதிலாக ஒரு பாட்டில் விஷம் வாங்கி குடி என்று சொன்னால் கூட குடித்துவிட்டு இறந்துவிடுவேன்’’ என்கிறார்.