
’ஜாத்’ சினிமா விடுதலைப்புலிகளை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்ததைப் போலவே, ’The hunt: the Rajiv Gandhi Assassination case’ வெப் தொடரும் விடுதலைப்புலிகளை தவறாக சித்தரித்துள்ளது என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.
இந்த தவறான சித்தரிப்புக்கு பின்னால் பாஜக இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு. அவர், ‘’விடுதலைப்புலிகள் முன்னெடுத்த தமிழர் தாகம் தமிழீழ தாயகம் எனும் முழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு போய் சேர்ந்திடக்கூடாது என்பதற்காக பாஜக அரசு பல்வேறு உத்திகளை கையாளுகிறது’’ என்கிறார். அதில் ஒன்றாக ஊடகங்கள் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான நச்சுக்கருத்தியலை பரப்பி வருகிறது பாஜக. குறிப்பாக திரைத்துறையை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திருப்பியுள்ளது என்கிறார்.

’’கடந்த 2025 ஏப்ரல் 10இல் வெளிவந்த இந்தி நடிகர் சன்னி தியோல் நடித்த ஜாட் திரைப்படம் முழுக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரை செய்துள்ளது’’ என்று சொல்லும் வன்னி அரசு, ’’விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த ஒருவன் இந்தியாவில் உள்ள ஆந்திராவுக்குள் ஊடுருவி கற்பழிப்பு, படுகொலைகள் என பயங்கரவாத செயல்களை செய்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது, அப்பாவி கிராம மக்களை அச்சுறுத்தி தினமும் பெண்களை அனுபவிப்பது போல தமது நஞ்சை கக்கியுள்ளது பாசிசக்கும்பல்’’ என்கிறார்.
இதனால்தான் விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்த திரைப்படத்திற்கு எதிராக மாநிலமெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
ஜாட் படத்தை அடுத்து The hunt: the Rajiv Gandhi Assassination case எனும் வெப் தொடரும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் நஞ்சை கக்கியுள்ளது என்கிறார் வன்னி அரசு.

அதாவது, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், ‘’குற்றம் சுமத்தப்பட்ட எல்லோரும் விடுதலை ஆன பிறகும் அவர்களை குற்றவாளிகளாக காட்டுவது எத்தனை இன வன்மம் என்பதை புரிந்து கொள்ளலாம். பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகத்தான் குற்றச்சாட்டு. ஆனால் இந்த தொடரில் Bomb maker என்றே பேரறிவாளனை காட்சிப்படுத்துகிறார்கள். ஜெயின் கமிசனில் ராஜீவ் கொலை தொடர்பாக சந்திராசாமி போன்றோரின் தொடர்புகள் இருப்பதையும் சர்வதேச சதி இருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், இந்த தொடர் முழுக்க ராஜீவை கொன்றது விடுதலைப்புலிகள் என்றே உறுதிப்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாது, ராஜீவ் படுகொலைக்கு பிறகு ஜெயலலிதாவை கொல்லப்போவதாக சிவராசன், பேபி அண்ணாவிடம் கதைப்பது போல காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இது பச்சை அயோக்கியத்தனம்’’ என்கிறார்.
’’ஜெயின் கமிசனிலோ அல்லது சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் விசாரணை அறிக்கையில் கூட ஜெயலலிதா பெயர் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்கும் போது எதற்காக இத்தனை வன்மத்தை கட்டமைக்க வேண்டும்?
சிவராசன் எப்போது பார்த்தாலும் சிகரெட் குடிப்பது போல காட்டுவதன் மூலம் விடுதலைப்புலிகளை ஒழுக்க மின்மையோராக காட்டுவதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது.

விடுதலைப்புலிகள் தேசிய இன விடுதலைக்காக போராடியவர்கள். அப்படிப்பட்ட உயரிய நோக்கத்துக்காக லட்சக்கணக்கில் தங்களை தியாகம் செய்தோரை இழிவு படுத்துவது இனப்பகையே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?’’ என்று கேட்கும் வன்னி அரசு, ‘’எத்தனை நச்சுக் கருத்தியல் மூலம் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்த முனைந்தாலும் தமிழீழ விடுதலை தாகத்தை தடுக்க முடியாது. விடுதலைப் புலிகள் ஆதரவையும் முடக்க முடியாது’’ என்று பாஜகவுக்கு சவால் விடுகிறார்.