
பொறுத்தது போதும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் அமமுக என்று தனிக்கட்சி நடத்தி வருவதால் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கும் மரியாதையுடன் இடம் கிடைக்கிறது.
டிடிவி தினகரனைப் போலவே ஓ. பன்னீர் செல்வத்தையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று ரொம்பவே பிடிவாதமாக இருக்கிறார் பழனிசாமி. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ்க்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இருக்கிறது. அதே சமயம் தனிக்கட்சி இல்லை என்பதால் தினகரனுக்கு இருப்பது போன்ற மரியாதையுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கவும் முடியவில்லை.

அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கம் போல் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்திருக்கிறார் ஓபிஎஸ். இதனால் இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் தொண்டர்களிடையே பேசிய ஓபிஎஸ் அணியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், ‘’தமிழ்நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் செப்டம்பர் -4இல் மதுரையில் மாநாடு நடத்தவிருக்கிறோம்.
கூடி கலைகின்ற மாநாடாக இருக்காது. லட்சியம் குறித்து அறிவிக்கும் மாநாடாக இருக்கும்’’என்றார். மேலும், ‘’யார் பின்னாலும் செல்லப்போவதில்லை. யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தப்போவதில்லை’’என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அவரது பேச்சின் மூலம், அதாவது லட்சியம் குறித்து அறிவிக்கும் மாநாடாக இருக்கும் என்ற வார்த்தைகளின் மூலம், ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகிறது.
மேலும் ஓபிஎஸ் தனது பேச்சில், ‘’கழகம் பல்வேறு பிரச்சனைகளில் தலையிட்டு சிக்குண்டு இருக்கின்ற காரணத்தினால் இரண்டாண்டுகளில் நடக்கின்ற சட்டப் போராட்டத்தில் இதுவரை வென்றிருக்கிறோம்;எதிர்காலத்தில் வென்றெடுப்போம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திய வரலாற்றை மீண்டும் கொண்டு வருவோம். அதற்காகத்தான் தர்மயுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு முழு வடிவம் கொடுக்க வேண்டும் என்றுதான் தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி பேசி இன்றைக்கு ஒரு முடி எடுத்திருக்கிறோம். அதில் சில முடிவுகள் வெளியே சொல்ல முடியாதபடி இருக்கின்றன. சில முடிவுகள் வெளியே சொல்ல வேண்டியது இருக்கிறது. வெளியே சொல்ல முடியாத எது? என்பது உங்களுக்கும் தெரியும்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எந்த மாநாடு நடத்தினாலும் அது வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மாநாடாகத்தான் இருக்கும். அந்த நிலையை நாம் மீண்டும் உருவாக்கிட வேண்டும். அதுதான் நம்மை உருவாக்கிய தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

அந்த வகையில் கழக ரீதியாக 89 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவற்றில் வைத்திலிங்கம் தலைமையிலான குழு கழக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்த கூட்டங்கள் நிறைவான பின்னர் இறுதியாக மதுரையில் 4.9.2025 வியாழக்கிழமை மிகப்பெரிய மாநில மாநாடு நடத்தப்படும். அந்த மாநில மாநாட்டில் இன்றைக்கு நீங்கள் எதிர்பார்த்திருக்கின்ற அந்த முடிவு, எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது அங்கே நிறைவேற்றப்படும்.
இந்த இரண்டு ஆண்டுகளில் பல நிலைகளில் நமக்கு தொல்லைகள், துயர் கொடுத்தாலும் தமிழக மக்களின் ஆதரவு நமக்குத்தான் இருக்கிறது என்பது ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு சதவிகிதத்தின் முடிவுகள் நிரூபணமாகி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி புகழை பரப்புகின்ற சக்தியாக மட்டுமே உருவெடுத்து, சவாலை ஏற்று வெற்றி காண்போம்’’ என்று குறிப்பிட்டார்.
இன்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றால் அது தனிக்கட்சிதான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.