
ஆரம்பத்தில் இருந்தே கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்றும், அவர்தான் அந்த வழக்கின் முதல் குற்றவாளி என்றும் மறைமுகமாக சொல்லி வந்தார் மருது அழகுராஜ்.
பன்னீர்செல்வம் – பழனிசாமி இருவரும் பிரிந்தபோது, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்பதால் ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் மருது அழகுராஜ். அன்று முதல் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பழனிசாமியை குற்றம்சாட்டி வருகிறார்.
கொடநாடு வழக்கில் பழனிசாமிதான் முதல் குற்றவாளி என்று தன்னிடம் அதிமுக சீனியர்கள் சொன்னதாகவும் மருது அழகுராஜ் சொல்லி வந்தார். பன்னீர்செல்வத்தின் ஆதரவு அணியில் இருந்த பெங்களூரு புகழேந்தியும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமி மீது குற்றம்சாட்டி வந்தார்.

இப்போது, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வரும் பழனிசாமி, ’’மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டு கதவை தட்டியதால்தான் தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்ட பணம் கிடைத்தது. சாதி வாரி கணக்கெடுப்பு திட்டம் நிறைவேறியது’’ என்றார். ஆனால், மருது அழகுராஜ், அமலாக்கத்துறை சோதனைகளில் இருந்து தப்பிக்கவே அமித்ஷா வீட்டு கதவை தட்டினார் பழனிசாமி என்கிறார்.

கொடநாடு வழக்கில் தப்பிக்கவும் அமித்ஷா வீட்டு கதவை தட்டினார் என்பதைத்தான் சூசகமாக, ’’ஈரோட்டில் நடந்த அமலாக்கதுறை சோதனைக்கு முதல் நாள் வரை பாஜகவோடு ஒட்டுமில்லை உறவுமில்லையாம். ஆனால், இப்போது அமித்ஷா வீட்டு கதவை தட்டுனா தமிழ்நாட்டுக்கான எல்லாம் கிடைக்குமாம். அப்படின்னா, அந்த அமித்ஷா வீட்டு கதவை தட்டி கொடநாடு பங்களாவுல கொலையும் கொள்ளையும் நடத்த காரணமான அந்த யோக்கியரு யாருன்னு கண்டுபுடிச்சு வளைகாப்பு நடத்தச் சொல்லுங்க மிஸ்டர் எடப்பாடி’’என்று காட்டமாகச் கேட்கிறார் மருது அழகுராஜ்.