
அதிமுக கூட்டணியில் விரைவில் பிரம்மாண்ட கட்சி இணையும்’ என்று அறிவிப்பு செய்திருக்கிறார் பழனிசாமி. இந்த அறிவிப்புக்கு பிறகு அந்த பிரம்மாண்ட கட்சி எது? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. தவெகவைத்தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, ‘இல்லை’ என்று சொல்லவில்லை பழனிசாமி. தேர்தல் வியூகத்தை இப்போது சொல்ல முடியாது என்றே சொல்லி இருக்கிறார்.
ஆனால் தவெகவோ, பாஜகவுடன் உறவு வைத்திருக்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறது. மேலும், முதல்வர் வேட்பாளர் விஜய்தான். அவரின் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கிறது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகம், கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ’’தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் வெற்றித் தலைவரின் எழுச்சியை, கருத்துக் கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.
தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம். எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் மட்டும்தான். அவர் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் ‘நிரந்தர’ எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘’மாற்றிப் பேசுவதும் ஏற்றிப் பேசுவதும், வேண்டாம் என்றால் ஆள் வைத்து தூற்றிப் பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளின் பழக்கமாக இருக்கலாம். எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல்படி நிற்கும் மாவீரர்! தான் எடுத்த முடிவை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை! இதுதான் உண்மை வரலாறு!’’என்கிறார்.

’’சரித்திர சிறப்பு பெறப்போகும் மாநாடு முடித்து, தலைவர் விஜய் வெற்றிப் பயணம் முடித்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் செய்து, நம் தலைவர் தலைமை ஏற்று வரும் சமத்துவ சமதர்ம சக்திகளை அரவணைப்போம். பாஜக, திமுக இருவரையும் தோற்கடிப்போம்! ’’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ராஜ்மோகன்.