
அடுத்தவனின் இருப்பை ஒத்துக்கொள்ளாத பெரிய சர்வாதிகாரி வைகோ என்கிறார் நாஞ்சில் சம்பத்.
மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா துரோகி என்று சொல்லி அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ.
கட்சியில் இருந்து வெளியேறிய துரோகிகளுடன் தொடர்பில் இருக்கிறார் சத்யா என்பது வைகோவின் குற்றச்சாட்டுகளில் ஒன்று. இது குறித்து மதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத், ‘சவுத் பீட்’ யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
அதில், ‘’திருப்பூர் துரைசாமியை துரோகி என்கிறார் வைகோ. மதிமுகவின் அட்சயபாத்திரமாக இருந்தவர் திருப்பூர் துரைசாமி. சில்லுண்டி பயலுகள வச்சு அவரை சீண்டியதால்தான் ‘வைகோ சிறையில் சுகமாகத்தான் இருந்தார்’ என்று உண்மையை வெளியே சொன்னார்.

கட்சியை விட்டு யாரும் போகவில்லை. எல்லோரும் வைகோவால் விரட்டப்பட்டவர்கள். அதனால்தான் மதிமுகவில் இன்றைக்கு யாருமில்லை. எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். 2 மினி பஸ்ஸில் செல்லும் அளவுக்குத்தான் இப்போது மதிமுகவில் ஆட்கள் இருக்கிறார்கள்’’ என்கிறார்.
மதிமுக பேரணியில் பங்கேற்க வந்த தனது தம்பி வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய செய்தியை பேரணி முடியும் வரையிலும் தன்னிடம் தெரிவிக்காமல் இருந்த துரோகி வைகோ என்று ஆத்திரப்படும் நாஞ்சில் சம்பத், தன் மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாகச் சொல்லி அதை செய்யவில்லை. மகளின் திருமணத்திற்கும் அவர் வரவில்லை. தன் மகனை டாக்டருக்கு படிப்ப வைப்பதாக சொல்லி அதையும் செய்யவில்லை என்பதை எல்லாம் சொல்லி யார் துரோகி? வைகோவா? நாங்களா? என்று கேட்கிறார் சம்பத்.
அடுத்தவனின் இருப்பை ஒத்துக்கொள்ளாத பெரிய சர்வாதிகாரி வைகோ என்று சொல்லும் சம்பத், தன் இருப்பை ஒத்துக்கொள்ளாமல் தனக்கு துரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார்.

’’2012ல் கரூரில் மதிமுக மாநாடு. அதுக்கு முந்தைய நெல்லை மாநாட்டுக்கு நான் தான் தலைமை தாங்கி நடத்துனேன். அதுக்கு அடுத்த நாள் காலையில்அரியலூரில் என் தலைமையில் ஒரு திருமணம். அந்த திருமணத்திற்கு வாரணாசி ராஜேந்திரன் என்னை இன்னோவா காரில் கூட்டிக்கிட்டு போனான்.
விருதுநகர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் நான் வெளியே வீசப்பட்டேன். காலையில் கல்யாணம் என்பதால் சாலை ஓரத்தில் வேதனைப்பட்டு நின்று கொண்டிருந்தேன். மதுரைக்கு போய் வேறு கார் எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு வாரணாசி ராஜேந்திரன் போய்விட்டார்.
அப்போது வேனில் வந்த வைகோ, கார் விபத்துக்குள்ளாகி நிற்பதையும் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய நாஞ்சில் சம்பத் ரோட்டு ஓரமாக நிற்பதையும் பார்த்துவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு போய் மதுரையில் ஒரு விடுதியில் தங்க வைத்துவிட்டு போகாமல், அப்படியே நடுரோட்டில் நிற்கவைத்து விட்டு ’சரி, நான் போயிட்டு வரட்டா’ என்று போய்விட்டார். இப்படி எந்த தலைவனாவது போவனா? அவனுக்கு என்ன கவலைன்னா..? இவன் சாகலேன்னு கவலை. யாராவது போவாங்களாங்க?’’ என்று சொல்ல, அதுக்கு நெறியாளர் ‘இதுக்கு என்ன ரியாக்ட் பண்றதுன்னே தெரியல?’ என்று சொல்ல, ‘’நீங்க ரியாக்ட் பண்ண முடியாதுங்க’’என்று பேச முடியாமல் நா தழுதழுக்க பேசுகிறார் சம்பத்.

‘’இத யார்கிட்டேயும் இதுவரைக்கும் சொல்லல.. நான் எத்தனை நாள் அழுதேன் தெரியுமா? நீ தலைவனா இல்ல..அத விடு. மனிதனா இருந்தா நீ என்ன செஞ்சிருக்கணும். என்னை வேனில் ஏறுன்னு சொல்லி மதுரையில ஒரு விடுதியில கொண்டு விட வேண்டாமா? செய்யலியே. இன்னைக்கும் அந்த வாரணாசி ராஜேந்திரன் மதிமுகவுல இருக்குறான். இப்பாவது வைகோவ புரிஞ்சுதான்னு சொல்லிட்டு வந்தேன்’’ என்கிறார் சம்பத்.