
திருமணத்தை மீறிய உறவில் காதலுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக பெற்ற குழந்தைகளை பாலில் விஷம் கலந்து, அதிலும் சாகாத மகனை கொன்ற கொடூரத்தாய் குன்றத்தூர் அபிராமியின் செயல் கடந்த 2018இல் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. 7 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கில் அபிராமி குற்றவாளி என்று இன்று தீர்ப்பு வழங்கி, சாகும் வரை அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறது காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம். கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த குன்றத்தூரில் மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெரிவில் வசித்து வந்தவர் விஜய். 2018 ம் ஆண்டின் படி 30 வயதான இவரின் மனைவி அபிராமிக்கு 25 வயது. இந்த தம்பதிக்கு 7 வயது அஜய் என்ற மகனும், 4 வயதில் காருனிகா என்ர மகளும் இருந்தனர்.
வங்கியில் வேலை பார்த்து வந்தார் விஜய். இவரது மனைவி அபிராமி வீட்டில் இருந்து வந்ததால் பொழுதுபோக்காக டிக்டாக் செயலியில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி பதிவேற்றி வந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் சமைக்காமல் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்திருக்கிறார்.

டெலிவரி பாய் மீனாட்சி சுந்தரம், அபிராமிக்கு பார்சலில் கூடுதலாக பிரியாணி வைத்து கொடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் செயலி மூலம் சினிமா பாடல்களை பாடி வந்தனர்.
இதில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு விஜய் வீட்டில் இல்லாத நேரங்களில், அவர் இரவுப்பனிக்கு செல்லும் நேரங்களில் மீனாட்சி சுந்தரமும் அபிராமியும் உல்லாசமாக இருந்து வந்தனர். குழந்தைகள் மூலம் இது உறவினர்கள் மற்றும் விஜய்க்கு தெரியவந்தது. இனிமேல் கள்ளக்காதலை மறந்துவிட்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார்கள். ஆனால் அபிராமியால் மீனாட்சி சுந்தரத்தை மறக்க முடியவில்லை.
இது பற்றி மீனாட்சி சுந்தரத்திடம் அபிராமி ஆலோசித்த போது, கணவரையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டால் நாம் சந்தோஷமாக வாழலாம். அதன்பிறகு இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கேரளா சென்று புரோட்டா வைத்து சம்பாதித்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். பாலில் மயக்க மருந்து கொடுத்து கொன்றுவிடலாம் என்றும் அபிராமிக்கு ஆலோசனை சொன்னார்.
அதன்படி பாலில் தூக்க மாத்திரைகள் கலந்து கணவர் மற்றும் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்துவிட்டார் அபிராமி.

மூன்று பேரும் இறந்து கிடப்பார்கள் என்று அதிகாலையில் எழுந்த பார்த்த அபிராமிக்கு ஒரே அதிர்ச்சி. கணவருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் அவசர வேலை என்று எழுந்து வழக்கம் போல் வங்கிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். 4வயது மகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தார். 7 வயது மகன் அஜய் அரை மயக்கத்தில் கிடந்தான். இதனால் மகனின் வாய் மற்றும் மூக்கை பொத்தி மூச்சைடைத்து துடிதுடிக்க சாகடித்தார் அபிராமி. அதன் பின்னர் இரவு வந்ததும் மீண்டும் பாலில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து கொன்றுவிட நினைத்தார் அபிராமி. ஆனால் குழந்தைகள் இறந்தது தெரிந்துவிட்டால் பிரச்சனை ஆகிவிட்டும் என்று அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட சொல்லிவிட்டார் மீனாட்சி சுந்தரம். அதனால் மாலையில் கதவை சாத்தி வைத்துவிட்டு அருகே இருந்த மீனாட்சி சுந்தரத்தின் வீட்டுக்கு சென்று விட்டார் அபிராமி.
மகனையும் மகளையும் கொன்றுவிட்ட குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் அன்று இரவு முழுவதும் மீனாட்சி சுந்தரத்துடன் உல்லாசமாக இருந்தார் அபிராமி. மறுநாள் காலையில் அபிராமியின் தாலியை அடகுவைத்து அந்த பணத்தை கொடுத்து நாகர்கோவில் சென்று காத்திரு, நான் பின்னே வந்துவிடுகிறேன். இருவரும் கேரளா சென்றுவிடுவோம் என்று அபிராமியை அனுப்பி வைத்தார் மீனாட்சி சுந்தரம்.

அதன்படி குன்றத்தூரில் இருந்து ஸ்கூட்டியில் கோயம்பேடுக்கு வந்து அங்கே ஸ்கூட்டியை பார்க்கிங் செய்துவிட்டு பஸ் ஏறி நாகர்கோவில் விரைந்தார் அபிராமி.
வங்கியில் அதிக வேலை என்பதால் அதிகாலையில் சென்ற விஜய் அன்று இரவு வீட்டுக்கு வராமல் மறுநாள் அதிகாலைதான் வந்தார். குழந்தைகள் இறந்து கிடப்பதையும் மனைவி காணாமல் போயிருப்பதையும் பார்த்து, மீனாட்சு சுந்தரத்திற்காக அபிராமிதான் இந்த வேலையை செய்துவிட்டார் என்பது புரிந்து கதறி அழுதார். உறவினர்கள் வந்து போலீசாருக்கு புகார் அளித்தனர்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதனால் பயந்துகொண்டு மீனாட்சி சுந்தரம் நாகர்கோவில் செல்லாமல் பதுங்கிவிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரை வைத்து செல்போனில் பேச வைத்து மாலையில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இறங்கிய அபிராமியை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட விஜய், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என்ற தகவல் பரவியதால் ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு விஜயை வரவழைத்து ஆறுதல் சொல்லி தேற்றினார்.
கைது செய்யப்பட்ட அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அபிராமியை உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. தன்னை உறவினர்கள் வந்து பார்த்து ஜாமீனில் எடுக்கச் சொல்லி சிறை அதிகாரிகளிடம் கதறினார் அபிராமி. உறவினர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.
கடந்த 7 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று 24.7.2025இல் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அபிராமி, மீனாட்சி சுந்தரம் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம்.