
வாழும் காலத்திலேயே ஒரு தலைவரின் வாழ்க்கை சினிமாவாக பதிவாகிறது. பாமக நிறுவனர் – தலைவர் ராமதாசின் வாழ்க்கையை சினிமாவாக பதிவு செய்கிறார் இயக்குநர் சேரன். பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் இப்படத்தை தயாரிக்கிறார். நடிகர் ஆரி அர்ஜூனன் ராமதாஸ் பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராமதாசின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அய்யா படத்தின் போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறார் சேரன்.
அக்காலத்தில் ஐந்து ரூபாய் டாக்டராக இருந்தவர் ராமதாஸ். தன்னிடம் வரும் தன் மக்களுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு சிகிச்சைக்குத் தர பணம் இருக்காது. அதனால் சிகிச்சை முடிந்ததும் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்கள். திரும்ப ஊருக்கு போவதற்கு பணம் இல்லாமல் மீண்டும் தலையை சொறிந்துகொண்டு நிற்பார்கள். அதற்கும் பணம் கொடுத்து அனுப்புவேன். அவர்களின் இந்த நிலையைக் கண்டு இதற்கு ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றுதான் அரசியல் களத்தில் புகுந்தேன் என்று சொல்லுவார் ராமதாஸ்.

ராமதாசின் அரசியல் வரலாற்றில் 1987 காலகட்டம் என்பது மிக முக்கியமானது. அதைத்தான் ‘அய்யா’ படத்தின் போஸ்டர்களில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் சேரன்.
ராமதாசின் இட ஒதுக்கீடு போராட்டம் அய்யாவில் முக்கிய இடம் வகிக்கப்போகிறது என்கிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ படம் வருகிறது. இட ஒதுக்கீடு போராட்டத்தை மையமாக வைத்து ராமதாசின் வாழ்க்கை வரலாறு படம் அய்யா வருகிறது.
’இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ என்று சப் டைட்டில் போட்டிருக்கிறார் சேரன். இதிலிருந்தே தெரிகிறது இப்படம் என்ன சொல்லப் போகிறது என்பது.
இப்படம் என்ன சொல்லப் போகிறது? என்பது குறித்து பாமகவினர், ‘’1987 செப் 17-23 போராட்டம், சமூக மாற்றத்திற்காக எப்படி ஒன்றிணைந்து, உறுதியுடன் போராட வேண்டும் என்பதை வருங்காலத் தலைமுறைகளுக்குப் போதிக்கும் ஒரு சரித்திரப் பாடம். அய்யாவின் தலைமை அதைச் சாத்தியமாக்கியது. செப்டம்பர் 17 முதல் 23 வரை தமிழகம் முழுவதும் சாலைகள் ஸ்தம்பித்தன. டாக்டர் அய்யாவின் தலைமையின் கீழ் மக்கள் காட்டிய கட்டுக்கோப்பும், உறுதிப்பாடும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். இந்தப் போராட்டம் வெறும் ஒரு சாதியின் போராட்டம் மட்டுமல்ல. அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்யும் சமூக நீதிக்கான ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது’’ என்கிறார்கள்.
இதைத்தான் அய்யா உரக்க சொல்லப்போகிறார் என்று தெரிகிறது.