
அரியலூர் மாவட்டத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா – கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா – தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ராஜேந்திர சோழன் படையெடுத்து சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு ஆகிய முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் சிதம்பரம் தொகுதி எம்.பி. , விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் மோடி பங்கேற்ற மோடியில் ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் பங்கேற்றதால்,

’’பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை’’ என்று கூறியிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. மேலும், ‘’பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது வைத்திருக்கின்ற புகழையும், பெருமையையும் தெரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பாரதப் பிரதமரை வரவேற்றது சிறப்புக்குரியது, போற்றுதலுக்குரியது’’ என்று கூறியிருக்கிறார்.
அதாவது, என்.டி.ஏ. கூட்டணியை திருமாவளவன் ஆதரிப்பது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.

இதை மறுத்திருக்கிறது விசிக. அக்கட்சியின் தரப்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில்,
’’சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் நரேந்திர மோடி பங்கேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எமது விடுதலைச் சிறுத்தைகள் பேரியக்கத்தின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை.
தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும் நாகரீக அரசியலாகவுமே விடுதலைச் சிறுத்தைகள் பார்க்கிறோம். ஆனால்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை” என்று சொல்லியிருக்கிறார். இதில் எந்த திருப்புமுனையும் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம். சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம் என எமது தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும்
ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலிலே அதிமுக இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார்.
எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம். 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு
அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி’’ என்கிறார்.
தவிர, ‘’தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக- பாஜகவை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்றும் பதிவு செய்திருக்கிறார் வன்னி அரசு.