
இன்றைய இளைய தலைமுறையினர் எதுவாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, எதையும் அவர்களால் விரைந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தெரிந்து கொண்ட வேகத்தில் அடைந்துவிட வேண்டும் என்பது மனித இயல்பு. இளையோரிடம் அது அதிகமாகவே உள்ளது. உடனே கிடைப்பதுடன், உறுதியான வாய்ப்பாக அது கிடைத்தால் அதுவே வாழ்நாள் முழுவதும் பயன்படக்கூடிய செல்வமாக இருக்கும். அண்மையில் அப்படி இரண்டு வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளன.
ஒன்று, நான் முதல்வன் திட்டம். தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பட்ட அக்கறையுடன் கூடிய திட்டங்களில் நான் முதல்வன் திட்டம் முதன்மையானது. அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை நியமனம் கிடைக்கச் செய்வதுதான் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமாகும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் ஒன்றான காக்னிஸன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு பணி வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், ஐ.டி.ஐ.கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, பணிவாய்ப்புகளை வழங்கியுள்ளது. காக்னிஸன்ட் போலவே புகழ்பெற்ற பல நிறுவனங்களும் இதுவரை அளித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் வாயிலாக ஏறத்தாழ 42 இலட்சம் மாணவ-மாணவியர் பயன் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள மின்வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் தனது நிறுவனத்திற்கு வேண்டிய பொறியாளர்களை பிற மாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் தேர்வு செய்ய நினைத்த நிலையில், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தினை அறிந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அதிலிருந்து 200க்கும் அதிகமானவர்களைத் தேர்வு செய்து, பணி ஆணை வழங்கியுள்ளது. உலகளாவிய நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைப்பதுடன், அதில் உள்ளூரைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு என்பது ஒரு திருப்புமுனையாகும். நான் முதல்வன் என்பது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்புகளில் ஒன்று.
இரண்டு, தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள இதழியல் கல்வி நிறுவனம். கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல், சட்டம், வணிகம், வேளாண்மை ஆகிய துறைகளில் படிப்பதற்கு அரசு சார்பிலான நிறுவனங்கள் உள்ளன. இதழியல் துறைக்கு பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் இருந்தாலும், அரசு சார்ந்த தனிப்பட்ட கல்வி நிறுவனத்தின் தேவை இருப்பதை இதழியல் துறையில் உள்ள மூத்தவர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இதழியலில் மூத்த நிறுவனமான இந்து குழுமத்தைச் சேர்ந்த ரவி அவர்களையும், இந்து ஆங்கில நாளிதழில் வாசகர் ஆசியராகவும், திராவிட இயக்கத்தின் சமூகத் தாக்கங்கள் குறித்து ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியவரும், மூத்த பத்திரிகையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களையும் கொண்டு தொடங்கிப்பட்டுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
அச்சு இதுழ்கள், தொலைக்காட்சி சேனல்கள், வானொலி, இணைய இதழ் என அனைத்து வகை ஊடகங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியளித்து அவர்கள் பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றித் தங்களின் திறமையை வெளிப்படுத்திடும் வகையில் இதழியல் கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் உண்மைகளும் பொய்களும் அடையாளம் காண முடியாத அளவிற்கு இரண்டறக் கலந்துள்ள நிலையில், தொழில் முறையிலான இதழாளர்கள்-ஊடகளாலர்கள்தான் உண்மையான-உறுதியான செய்திகளை மக்களுக்குத் தரக்கூடியவர்களாக உள்ளனர். இதழியல் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
ஜூலை 27 முதல் இதழியல் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி https://cij.tn.gov.in/ta/newapplication இணையதளம் வாயிலாகத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 3 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். இதழியல்-ஊடகத்துறை என்பது வெறும் வேலை மட்டுமல்ல, அது பொதுமக்களுக்கான சேவையும்கூட. ஊடக சேவையில் ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் இதழியல் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.