
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அனலைக் கிளப்பியது பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலும் அதற்கு பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான நடவடிக்கைகளும். இவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது, நிபந்தனைகளை விதித்து ஒப்புக்கொண்டது ஆளுங்கட்சியான பா.ஜ.க.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன்னுடைய உரையில், ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும், இந்தியா சார்பில் எந்த இழப்புமின்றி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தேவைப்பட்டால் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடரும் என்றும் தெரிவித்தார். அவருடைய கருத்துகள் அனைத்தும் கொண்டாட்ட மனநிலையில் இருந்ததே தவிர, காஷ்மீரில் பலியான சுற்றுலாப் பயணிகள் மீதான இரக்கம் துளியளவுகூட வெளிப்படவில்லை.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் ஒரு தாக்குதல் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டதாகவும், அதில் காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகளைக் கொன்ற 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
காஷ்மீரின் பாதுகாப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் தற்போது யூனியன் பிரதேசமாக இருப்பதால் மக்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது மத்திய உள்துறை அமைச்சகம்தான். அந்த பாதுகாப்பு முறையாக இல்லாததால்தான், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் இந்திய சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றனர். அது குறித்த விளக்கத்தையும், தற்போது உள்நாட்டுப் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் எந்தளவும் மேம்படுத்தியுள்ளது என்றும் அமித்ஷா பேசுவார் என்று எதிர்பார்த்தால், அவரோ வழக்கம்போல பா.ஜ.க.வுக்கேயுரிய பாணியில், காஷ்மீர் பிரச்சினைக்கு நேருதான் காரணம், பாகிஸ்தான் பிரிந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம், மன்மோகன் சிங் ஆட்சியில் என்ன நடந்தது தெரியுமா என்று பிரதான எதிர்க்கட்சியை சீண்டுவதிலேயேதான் இருந்தாரே தவிர, காஷ்மீரில் உள்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடைசி வரை வாய் திறக்கவில்லை.
சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அடையாளங்களைக் கேட்கும் காங்கிரசுக்கு தேசபக்தி இல்லையா என்று கேட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் பாகிஸ்தான் அடையாள அட்டைகள் இருந்ததாகவும், அவர்களிடம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் இருந்ததாகவும் ‘பயங்கரமான’ ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி.யான பிரியங்கா காந்தி பேசும்போது, இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தைப் பாராட்டுவதாகவும், உளவு அமைப்புகள் என்ன செய்தன என்று கேட்டதுடன், கடந்த இரண்டாண்டுகளில் 21 முறை காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பா.ஜ.க. என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் கேட்டார்.
தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தன்னுடைய உரையில், பா.ஜ.க. தரப்பில் பேசியவர்களிடம் சத்தம் இருந்ததே தவிர, சாரம் இல்லை என்பதைச் சொல்லி, எதற்கெடுத்தாலும் நேரு, இந்திராகாந்தி, காங்கிரஸ் என்று பழிபோடும் பா.ஜ.க.வின் செயல் தேசத்தின் அவமானமாக இருக்கிறது என்றார். 1962ல் சீனாவுடனான போரின்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலைமைகளுக்குப் பொறுப்பேற்று, நாடாளுமன்றத்தில் அதை வெளிப்படையாகத் தெரிவித்தவர் நேரு. ஆனால், காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஆளுங்கட்சியான பா.ஜ.க.வில் யாரேனும் ஒருவராவது தங்கள் உரையில் பொறுப்பேற்றுக் கொண்டார்களா என்று ஆ.ராசா கேட்டார்.
பா.ஜ.க. அரசின் உளவுத்துறை தோல்வியையும், வெளியுறவுத் துறை தோல்வியையும் ஆதாரங்களுடன் அவர் எடுத்துரைத்ததுடன், பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைக்கு பிரிக்ஸ், ஜி20, ஜி7 போன்ற உலக நாடுகளின் அமைப்புகளில் ஒன்றுகூட கண்டனம் தெரிவிக்கவில்லையே? இது நிர்வாகத் திறனற்ற அரசு என்பதைத்தானே காட்டுகிறது எனக் கடுமையாக விமர்சித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வியை சுட்டிக்காட்டி, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் எனபதை வலியுறுத்தினார்.
பெஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்காமல், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தினரின் தாக்குதலை தங்களின் வெற்றியாக பா.ஜ.க அரசு செயல்படுவது பச்சையான அரசியல் மட்டுமே. இது தேசபக்தி அல்ல. வெறும் தேர்தல் கண்ணோட்டம்தான். அதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.
அதற்காக அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படும் அவலம் நேர்ந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்கிற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொடர்ச்சியான பேச்சுகளுக்கு வாய்ப்பூட்டு போட முடியாத பா.ஜ.க. அரசு, நாடாளுமன்றத்தில் தேசபக்தியைக் கூறு கட்டி விற்பனை செய்கிறது.