
’’இப்போது இருக்கின்ற அரசியல் தலைவர்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஒரே தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். இதுவரை அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டே யாராலும் சுமத்த முடியவில்லை. சும்மாவாவது அவர் மீது யாரும் புகார் தரவில்லை. யாராலும் தர முடிவதில்லை. தர முடியாத அளவிற்கு அவரது அரசியல் பயணம் அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரையிலும் வந்திருக்கிறது’’ என்கிறார் அ.அன்வர் ராஜா.
அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் திமுகவில் இருந்தாலும் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து அக்கட்சியில் இருந்து ஜெயலலிதாவுக்கு நிகரான பொறுப்புகளில் இருந்து, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த மூத்த அரசியல்வாதி அ.அன்வர் ராஜா, அதிமுக பாஜகவிடம் கூட்டணி அமைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அவர் முதல்வர் ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஒரே தலைவர் என்பது குறித்து மேலும், ‘’சென்னை மாநாகராட்சி மேயராக இருந்தார், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார், அவரது தந்தை முதலமைச்சராக இருந்தார். அவர் நினைத்தால் என்னென்னமோ செய்திருக்கலாம். ஆனால் எந்த குற்றச்சாட்டுகளும் அவர் மீது இதுவரை வைக்கப்படவில்லை. இன்று வரை இல்லை என்பது ஒரு மிகப்பெரிய சிறப்பு. ஒரு சிறப்புக்குரிய மனிதராகவே நான் அவரை பார்க்கிறேன்.
இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறபோது அவருக்கு இன்னும் முதலமைச்சராக தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்’’ என்கிறார்.

அதிமுகவில் இருந்து விலகிய தான் திமுகவில் இணைந்தது ஏன்? என்பது குறித்து, ‘’ஸ்டாலினிடம் கவர்ந்தது அவரின் தீர்க்கதரிசனமான ஞானம். எந்த முடிவு எடுத்தாலும் ஆழ்ந்து சிந்தித்து எடுக்கின்ற பக்குவம். ஒரு அரசியல் தலைவருக்கு என்னென்ன இருக்க வேண்டுமோ அந்த குணாதிசியங்கள் எல்லாம் அவரிடம் இருப்பதை நான் நேரடியாக பார்த்தேன். பல விசயங்களில் அவர் எடுக்கின்ற முடிவு அவருடைய கொள்கையில் இருந்து விலகாமலும், தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையாக நன்மை பயக்கின்ற வகையிலும் அமைந்திருக்கின்ற விதம் என்னை பெரிதும் கவர்ந்தது.
இன்றைய நிலையில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை காப்பாற்றுவதற்கு உரிய தலைவராக விளங்குகிறார். அதுமட்டுமல்லாது இந்தியாவில் இருக்கின்ற மற்ற மாநிலங்களும் பின்பற்றத்தக்க வகையில் மாநில உரிமைகளுக்கு எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று எல்லோருக்கும் முனைப்பாக இருந்து செயல்படுகின்ற ஒரு முதிர்ந்த தலைவராக நான் பார்க்கிறேன்.
ஆளுநர் விவகாரத்திலும், மொழிக்கொள்கையிலும் இந்தியாவுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்தவர்கள் எல்லோரின் கருத்துருவாக்கம் இந்த ஆட்சியில் இருக்கிறது என்பதை அடிக்கடி நிலைநாட்டி வருவதோடு, அதில் வெற்றியும் கண்டவராக மிகவும் ரசிக்கத்தக்க முதல்வராக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்’’ என்கிறார்.
முதல்வர் முன்னிலையில் தான் திமுகவில் இணைந்தபோது, ‘’வாங்க’’ என்று தன்னை வரவேற்ற முதலமைச்சர், ‘’ரொம்ப காலத்திற்கு முன்பே வந்திருக்கணும் என்றார். அது உண்மைதான்’’என்கிறார் அன்வர் ராஜா.