
தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் பயன் பெறும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தகுதியுள்ளவர்களுக்குப் பெரும் பயனளித்து வருகிறது. இவை போக, ஆதிதிராவிட சமுதாயத்தினரின் கல்வி-வேலைவாய்ப்பு-தொழில் முயற்சிகளுக்கானத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர் சமூகத்திற்கானத் திட்டங்கள் எனப் பலவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய தமிழ்நாடு அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன.
மிகக் குறிப்பாக, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாத விடியல் பயணம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க நிலைப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை என்ற வாக்குறுதியை தி.மு.கவின் கொள்கை எதிரியும், தமிழ்நாட்டில் இலவச கலாச்சாரம் (ரேவடி கல்ச்சர்) நிலவுவதாக விமர்சனம் செய்கின்ற கட்சியுமான பா.ஜ.க., 4 மாநிலங்களில் இதே வாக்குறுதியை வழங்கி ஆட்சியையும் பிடித்திருக்கிறது என்பதுதான் இன்றைய உண்மை நிலவரம்.
பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பேருந்து திட்டத்தை ஓசிப் பேருந்து என்று அமைச்சர்களும் பஸ் டிரைவர்-கண்டக்டர்களும் விமர்சிப்பதாக கருத்துகள் வெளிப்பட்டன. அந்தப் பேருந்துகளின் முன்புறம் பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டபோது லிப்ஸ்டிக் பஸ் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவரும் விமர்சனம் செய்தார். தமிழ்நாடு அரசு அதற்கு விடியல் பயணம் என்று பெயர் வைத்தது. அந்த விடியல் பயணத்தால் தமிழ்நாடு முழுவதும் பயன் பெறும் கோடிக்கணக்கானப் பெண்கள் அந்தத் திட்டத்திற்கு வைத்த பெயர், ஸ்டாலின் பஸ்.
மக்களுக்கு நேரடியாகப் பயன் தரும் திட்டங்களை, அதை செயல்படுத்தியவர் பெயரில் வெளிப்படுத்துவது மக்களின் இயல்பு. கலைஞர் டி.வி, மோடி வீடு, ஸ்டாலின் பஸ் என்பதெல்லாம் அத்தகைய பெயர்கள்தான். இதில் கட்சி வேறுபாடின்றி, மக்கள் தங்களின் பயன்களை மட்டுமே கருத்தில் கொண்டு அதனை அழைப்பது வழக்கம். இது எளிமையான மக்களுக்கே தெரிந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சி செய்த கட்சியான அ.தி.மு.க.வுக்குத் தெரியாமல் போனது பலத்த அதிர்ச்சியாகவும், பரவலான அதிர்ச்சியாகவும் அமைந்தது.
தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு துறைகளின் சார்பிலான தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் தாலுகா, வட்டம் வாரியாக நடத்தப்படும் அரசு சார்பிலான முகாம்களுக்கு முதலமைச்சரின் பெயரில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயர் வைக்கப்பட்டது. அதுபோலவே, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கான முகாம்களுக்கு, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்று பெயர் வைக்கப்பட்டது. இதற்குத் தடை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.கவின் சார்பில் சி.வி. சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குப்போட, அரசின் திட்டங்களுக்கானப் பெயர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இது குறித்து அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையிடு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர்களின் பெயர்களில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஜெ.ஜெ (ஜெ.ஜெயலலிதா) அரசு போக்குவரத்துக் கழகம், (பின்னர் அது ராஜீவ் காந்தி அரசு போக்குவரத்துக் கழகமாக மாற்றப்பட்டது), ஜெயலலிதாவின் ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா பாட்டில் குடிநீர், அம்மா உப்பு உள்ளிட்ட அனைத்தும் ஜெயலலிதாவின் படத்துடன் செயல்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சியில் அவரது அம்மா பெயரில் அன்னை சத்யா போக்குவரத்துக் கழகம் இயங்கியது. கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மா பெயரிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.சண்முகத்திற்கு இதெல்லாம் நிதானமான நிலையில் தெரிந்திருக்கக்கூடும். எனினும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தன்னுடன் புதிதாக ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எம்.பி.யாகியிருக்கும் வழக்கறிஞர் இன்பதுரையின் ஆலோசனையின் பேரில், முதலமைச்சர் ஸ்டாலின் பெயரிலான திட்டங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார் சண்முகம். உச்சநீதிமன்றமோ தி.மு.க. அரசின் மனுவை விசாரித்து, சண்முகத்தின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்ததுடன், சி.வி.சண்முகத்திற்கு 10 இலட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?