
சினிமா என்பது அறிவியல் உருவாக்கித் தந்த அருமையான கலை வடிவம். நாடகம், தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற காலம் காலமாக பழகி வந்த கலைவடிவங்களைக் காட்டிலும், எதையும் பிரம்மாண்டமாக சித்தரித்து, மக்களை ஈர்க்கும் வலிமை சினிமாவுக்கு உண்டு. இந்தியத் திரையுலகில் தமிழ் சினிமாவுக்கென ஒரு தனி இடம் உண்டு. அதில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு தனித்துவமான இடம் உண்டு.
பஸ் கண்டக்ராக இருந்து சூப்பர் ஸ்டாரானவர் என்பது சிவாஜிராவ் ரஜினிகாந்த்தான நிஜ வாழ்க்கையின் ஒன்லைன். தமிழ் சினிமாவில்தான் ரஜினி அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு அவரை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலசந்தர் அந்தப் படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தை ரஜினிக்குத் தந்துவிடவில்லை. ஆனால், முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தை தந்தார். ‘சுருதிபேதம்’ என்ற அடைமொழியுடன் திரையில் ரஜினி அறிமுகமானார். ஆனால், 50 ஆண்டுகள் கழித்து அவர்தான் சினிமா தயாரிப்பாளர்களின் ஆதார சுருதி என்ற நிலைக்கு உயர்ந்து நிற்கிறார்.

ரஜினிக்கு முன்பு திரைப்படங்களில் மக்களைக் கவரக் கூடிய நாயகர்கள் வெளுத்த நிறமாக இருக்கவேண்டும். ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்று மக்கள் நம்பிய காலம் அது. அதை நம்பி நடிகர்களிடம் ஆட்சியை ஒப்படைத்த மக்கள் தென்மாநிலங்களில் உண்டு. ரஜினி என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு இரவு என்று பெயர். இரவு கருப்பாகவே இருக்கும். ரஜினிகாந்த் கருப்பு நிறக் காந்தமாக ரசிகர்களை ஈர்த்தார். அவருக்கு முந்தைய நாடக பாணி நடிப்பிலிருந்து மாறுபட்டு, தனது தலைமுறை ரசிக்கக்கூடிய விறுவிறுப்பான ஸ்டைலுடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தினார். தனது சமகாலத்து நடிகர்களுடன் பல படங்களில் நடித்து, அதில் தனது தனித்துவத்தை நிலைநாட்டி, தமிழ்த் திரையுலகில் தனக்கான இடத்தை உருவாக்கி, ‘பைரவி’ என்ற படம் வெளியான போது சூப்பர் ஸ்டார் ஆனார்.
1980ஆம் ஆண்டு வெளியான முரட்டுக் காளை தொடங்கி, 2025ல் வெளியாகியுள்ள கூலி படம் வரை ஏறத்தாழ 45 ஆண்டுகளாக கதாநாயகனாகவும் சூப்பர் ஸ்டாராகவும் நிரூபித்து வருகிறார். இந்த 45 ஆண்டுகளில் அவருடைய வணிகரீதியான தோல்விப் படங்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவுதான். அதில் அவர் தனது ஆத்மதிருப்திக்காக நடித்த 100வது படமான ராகவேந்திரா, அவரது நேரடி முதல் தயாரிப்பான மாவீரன் (1986), அவரே கதையை உருவாக்கி தயாரித்த வள்ளி போன்றவையும் அடங்கும். எனினும், அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எவரும் வணிகரீதியாக பாதிக்கப்பட்டதில்லை. சினிமா துறையின் முதலீட்டைப் புரிந்துகொண்டு, அந்தத் துறைக்கே முதலாளியானவர் ரஜினிகாந்த்.

சினிமாவில் கிடைக்கும் புகழும் பிரபலமும் அரசியலை நோக்கித் தள்ளுவது தமிழ்நாட்டில் வழக்கமாகிவிட்டது. நேரடியாக முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு சினிமா ஹீரோ என்பதே தகுதி என தானும் நம்பி, தன் ரசிகர்களையும் நம்ப வைத்திருக்கும் கூட்டத்திற்கு நடுவே, தனக்கு வந்த அரசியல் வாய்ப்பை மறுத்து, ஒதுங்கிச் சென்றவர் ரஜினி. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவும் வெளிப்படையாக குரல் கொடுத்தார். அது ரஜினி வாய்ஸ் என அப்போது புகழ் பெற்றது.
அதன்பிறகு ஒரு சில தேர்தல்களில் கூட்டணி மாறி அவர் கொடுத்த வாய்ஸ் எடுபடவில்லை. கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதாக பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ். கூட்டம் சொன்னதை நம்பிய ரஜினி, சொந்தக் கட்சித் தொடங்குவதாக அறிவித்து, பிறகு கள நிலவரம் உணர்ந்து, தன் உடல்நிலையைக் காரணம் காட்டி , அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார்.

சினிமாவில் தமிழ்நாட்டு ரசிகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்து வெற்றி பெற்ற ரஜினி, அரசியல் சார்ந்து எடுத்த முடிவுகளையெல்லாம் தமிழ்நாட்டு அரசியலுடனும் தமிழர்களின் பண்பாட்டுடனும் சற்றும் தொடர்பில்லாத ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட நபர்களின் ஆலோசனையின்படியே மேற்கொண்டார். துக்ளக் சோ, ஆடிட்டர் குருமூர்த்தி வகையறாக்களின் கட்டுப்பாட்டிலேயே முடிவுகளை எடுத்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போன்றவற்றில் ரஜினி கடும் விமர்சனத்திற்குள்ளானதற்கு இதுவே முதன்மையான காரணம்.
அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்காதது அவரது ஒரு சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். தமிழ் சினிமாவில் ஆறு முதல் அறுபது வயது கடந்தவர்கள் வரை ஆண்-பெண், ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம் என்ற பேதமில்லாமல் அனைவர் நெஞ்சங்களிலும் சூப்பர் ஸ்டாராக நிலைத்திருக்கும் ரஜினியின் கலைப்பணி தொடரட்டும்.