
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்றதும், அவரை கன்னடர் என்றும், வேற்று மொழிக்காரர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்து வந்த நாம் தமிழர் கட்சியின் சீமான், ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் அவரை விமர்சனம் செய்வதை நிறுத்தி இருந்தார்.
வேட்டையன் படத்தை பாரட்டி மூன்று பக்கம் பாராட்டு மடலையும் சீமான் வெளியிட்ட நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி அவரை அழைத்து நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி ரஜினி நடிப்பில் கூலி படம் வெளியாகி இருக்கும் நிலையில், ரஜினியின் திரையலக வாழ்க்கை 50ம் ஆண்டு பொன்விழாவினை முன்னிட்டும் பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதற்கு நேற்று காலை 11.37 மணிக்கு ’’அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று மதியம் 3.05 மணிக்கு, நாம் தமிழர் கட்சி சீமான் ’’தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லா உச்சநட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது!
நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக
உச்சநட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும்!
இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் ரசித்து கொண்டாடப்படும் அவருடைய நடிப்புத்திறன் வியந்து போற்றத்தக்கதாகும்.
1975 ஆம் ஆண்டு நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கியபோது இருந்த ஆர்வமும், வேகமும், தேடலும் கொண்டு துடிப்புடன் நடித்து, ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தாரோ, இன்றளவும் சற்றும் குறைவின்றி உழைப்பினைச் செலுத்தும் அவருடைய அர்ப்பணிப்புதான், அவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் இமாலய வெற்றிகள் பெறச் செய்தன. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவருடைய புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும்!

எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச்சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்ட தமிழ்த்திரையின் உச்சநட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, என்னுடைய நெஞ்சம் நிறைந்த பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
ஐயா ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, ‘கூலி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!’’ என்று ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் பிரதமர் மோடியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கு தனித்தனியாக ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.
சீமானுக்கு நன்றி தெரிவிக்காததால் அந்த ஆத்திரத்தில்தான் இன்று துப்புரவு பணியாளர்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ‘’அந்த கூலியும் காலி இந்தக் கூலியும் காலி’’ என்று பதிலளித்துள்ளார் சீமான் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
எல்லோரும் வாழ்த்து சொன்ன நாளில் சீமானும் வாழ்த்து சொல்லி இருந்தால் அவருக்கும் சேர்த்து நன்றி சொல்லி இருப்பார் ரஜினி. பிரதமர் , முதல்வர் என்பதால் தாமதமாக சொன்னாலும் தனித்தனியாக அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார். சீமான் தவிர்த்து ஓபிஎஸ்சும் கூட தாமதமாக வாழ்த்து சொல்லி இருக்கிறார். இதில் சீமான் ஆத்திரப்பட வேண்டியதில் நியாயமில்லை என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
அதே நேரம், எல்லோரும் வாழ்த்து சொன்னபோது அமைதியாக இருந்த சீமான், ரஜினி எல்லோருக்கும் நன்றி சொன்ன பிறகு வாழ்த்து சொன்னதில் கூட ஏதோ அரசியல் இருக்கிறது என்கிறார்கள்.