
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும்போது, ‘சூப்பர் ஸ்டார் ’ என்று விஜயை புகழ்ந்து தள்ளி ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானார் சரத்குமார். போகுற இடமெல்லாம் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.
தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தது முதல், பாஜகவை விமர்சித்து வரும் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகிறார் சரத்குமார். இதனால் விஜய் ரசிகர்கள் சரத்குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை தவெக மாநில மாநாட்டில் பேசிய விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்றும், பிரதமர் மோடியை மிஸ்டர் என்றும் சொல்லி பேசி இருந்தார். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் பேசிய சரத்குமார் இதை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

’’அண்மையில், கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார். நீங்க கொடநாட்டிலே தெருவிலே நின்று கொண்டிருக்கும்போது, ’மிஸ் ஜெயலலிதா ஜெயராம்’ என்று சொல்லி இருப்பீர்களா?’’ என்று கேட்கிறார்.
‘தலைவா’ பட ரிலீசாவதில் சிக்கல் இருந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சிக்கலை தீர்க்கலாமென்று அவரை சந்திக்க கொடநாடு சென்று சந்திக்க அனுமதி கிடைக்காமல் திரும்ப வந்தார் விஜய். இதைத்தான் கொடநாடு தெருவில் நின்ற விஜய் என்று குத்திக்காட்டுகிறார்.
மேலும் தனது பேச்சில், ‘’இன்னைக்கு சொல்லிப் பாருங்கய்யா. புரட்சித்தலைவி அம்மாவைப் பற்றி சுட்டிக்காட்ட வேண்டும் என்கிறபோது மிஸ் ஜெயலலிதா ஜெயராமன் என்று சொல்லிப்பாருங்கள். முதலமைச்சரை தாய்மானம் என்கிறார். அவரை அங்கிள் என்று சொல்கிறார். தரம் என்று ஒன்று இருக்கிறது. பிரதமரும் முதல்வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்த மனிதருக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ இல்லையோ அந்த பதவிக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அந்த தரத்தை கற்றுக்கொள்ளுங்கள் விஜய் அவர்களே..சிங்கம் வேட்டைக்கு மட்டும் போகுமாம். வந்து தூங்கிடுமாம். வேட்டைக்கு மட்டும்தான் வீட்டை விட்டு வெளியே வருமாம். மத்த நேரத்துல எல்லாம் சாப்பிட்டுவிட்டு தூங்கிடுமாம். தன்மையற்று பேசியதால் அவரைப்பற்றி நான் பேசுகிறேன்.

சூப்பர் ஸ்டார் என்று சொன்னபோது பாராட்டுறீங்க. வேறு கருத்து சொன்னா என் மனைவி, பிள்ளைகள் பற்றி கமெண்ட் போடுறீங்க. இதையெல்லாம் கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல. தைரியம் இருந்தா என்கிட்ட வந்து பேசிப்பாருங்க. உன் தலையை எடுத்துடுவேன் என்று டுவிட்டரில் வந்து சொன்னார்கள். எடுப்பதாக இருந்தால் என் வீட்டில் வந்து எடுங்கள். ரோட்டுல எடுத்தா தலை தனியா உடல் தனியா கிடக்கும் என்று தைரியமாகச் சொன்னேன். நானும் கல்லூரியில் படிச்சிருக்கிறேன். கல்லூரியில் ரவுடியிசத்தை பார்த்தவன்’’ என்றார்.
பாசிச பாஜக என்று தொடர்ந்து விஜய் விமர்சித்து வருவது குறித்து, ‘’பாசிசம் என்றால் விஜய்க்கு என்னவென்று தெரியாது என்று எனக்கு தெரியும்’’ என்கிறார்.