
“யாருக்காக இத்தனை இந்தியர்கள் காத்திருக்கிறார்கள்? அதுவும் பெரும்பாலும் தென்னிந்தியர்கள்?” -நியூயார்க் கென்னடி விமான நிலையத்தில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 19ந் தேதி திரண்டிருந்தவர்களைப் பார்த்தபோது அமெரிக்கர்களுக்கு இந்தக் கேள்விதான் எழுந்தது.
தங்களுக்கு அறிமுகமான அமெரிக்கர்களிடம், “எங்க அண்ணா வருகிறார்..” என்றார்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள். வரும் வழியெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை அமெரிக்கர்கள் கவனிக்கத் தவறவில்லை. பத்திரிகையின் முகப்பு பக்கத்திலும், ‘அண்ணாதுரையின் வருகை’ பற்றிய செய்திகள் இடம்பெற்றிருந்ததைப் படித்திருந்தனர். “ஓ.. அண்ணாதுரை” என்றார் ஓர் அமெரிக்கர்.
“யெஸ்.. அண்ணா என்பது எங்களுக்கு மந்திரச் சொல்” என்றார் ஒரு தென்னிந்தியர். “நான் நம்புகிறேன்” என்றார் அவர் முன் இருந்த அமெரிக்கர்.

நியூயார்க்கில் அண்ணா தரையிறங்கினார். எளிமையான தோற்றம். உறுதியான பார்வை. தெளிவான சிந்தனையுடன் வெளிப்பட்ட சொற்கள். ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஜி.பார்த்தசாரதி, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி குப்தா உள்ளிட்ட பலரும் அண்ணாவை வரவேற்கிறார்கள். இந்தியர்கள் அவரைப் பார்த்ததும் ஆர்ப்பரிக்கிறார்கள். முதல் பார்வையிலேயே, அண்ணா ஒரு மந்திரச் சொல் என்பதை அங்கிருந்த அமெரிக்கர்கள் புரிந்துகொண்டனர் என்பதை தன் கட்டுரை மூலம் விளக்கியிருக்கிறார் அன்றைய அமெரிக்க வாழ் தமிழரும் பின்னாளில் மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கியவருமான எம்.எஸ்.உதயமூர்த்தி.
நியூயார்க் மான்ஹட்டன் துணை மேயர் பெர்ஸி ஸ்ட்டனை அண்ணா சந்திக்கிறார். கருப்பினத்தைச் சேர்ந்த துணை மேயரைப் பார்க்கையில் அண்ணாவுக்கு மகிழ்ச்சி. புகழ்பெற்ற எழுத்தாளர் இர்விங் வாலேஸ் எழுதிய The Man என்ற புதினத்தைப் படித்தவர் அண்ணா. அதன் தாக்கத்தில், ‘வெள்ளை மாளிகையில்’ என்ற படைப்பையும் தந்தார். வெள்ளை மாளிகை என்ற பெயருடன் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் மாளிகையில் வெள்ளைக்காரர்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்து வந்து சூழலில், கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த இடத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அந்த படைப்பு. ஜனாதிபதி மாளிகையில் உண்மையாகவே அந்த நிலை வரும் காலத்தை நேரில் பார்ப்பதற்கு முன், துணை மேயரை சந்தித்ததில் அண்ணாவுக்கு அளவிலா இன்பம்.
பிறப்பின் அடிப்படையில் சாதியை உருவாக்கி மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கும் நாட்டிலிருந்து, நிறத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் நாட்டிற்கு அண்ணா வந்திருந்தார். துணை மேயருடன் அவர் நியூயார்க் நகரத்தை சுற்றிப் பார்த்தார். அழகான நகரம். அங்குள்ள மக்களின் வாழ்வியல், கருப்பினத்தவர் வாழுமிடங்கள், பொருளாதாரச் சூழல்கள் எல்லாவற்றையும் அண்ணா உற்றுக் கவனித்தார். சுதந்திர தேவி சிலை, எம்பயர் ஸ்டேட் கட்டடம் ஆகியவற்றை ரசித்தார். நயாகரா அருவியின் பிரம்மாண்டத்தில் மனதை பறிகொடுத்தார். அமெரிக்கா பற்றிய குறுக்கு வெட்டுத் தோற்றம் ஒன்று அண்ணாவின் மனதில் பதிந்தது.

நியூ ஹெவன் நகரில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் டிமோத்தி டுவைட் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக அண்ணா தங்கினார். யேல் பல்கலைக்கழகத்தின் புகழ்மிக்க Chubb Fellowship அண்ணாவுக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவம் பெற்றவர்கள் ஐந்து நாட்கள் அங்கேயே தங்கி மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோருடன் பேசலாம். விவாதிக்கலாம்.
அண்ணா ஒரு மலர் என்றால் மாணவர்களும் ஆசிரியர்களும் தேனீக்கள். ஒட்டுமொத்தமாக மொய்த்துக் கொண்டார்கள். கேள்விக் குழல்களால் அவர்கள் அண்ணாவை உறிஞ்ச, அண்ணா கருத்துத் தேனை வழங்கிக் கொண்டே இருந்தார். அரசுகள் பற்றி அண்ணா பேசுகிறார். ஆட்சியைப் பற்றிக் கேட்கிறார்கள். கூட்டாட்சி பற்றி அண்ணா விளக்குகிறார். மாநில உரிமைகள், தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சிறப்புகள், திருக்குறள், தொல்காப்பியம் என அண்ணா விளக்கிக் கொண்டே போக அவருடைய ஆங்கிலத் தேனில் சொக்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள். யேல் பல்கலைக்கழகத்தில் அண்ணாவுடன் பத்திரிகையாளர்கள் நடத்திய சந்திப்பு, அங்கு நடந்த வானொலி பேட்டி உள்பட எல்லாவற்றிலும் அண்ணாவின் ஆங்கில மொழிநடை மேலோங்கி நிற்கிறது.
“அண்ணாதுரை இந்தளவுக்கு இங்கிலீஷ் பேச எங்கே கற்றுக்கொண்டார்?” என ஒரு நிருபர் கேட்க, அவரிடம் எம்.எஸ்.உதயமூர்த்தி, “அவர் எம்.ஏ.பட்டதாரி” என்பதை எடுத்துரைக்கிறார். சக்கரவியூகம் போல கேள்விக்கணைகள் பாய்கின்றன. உள்ளத்தின் யதார்த்தமான சொற்களாலும், சாதுர்யமான பதில்களாலும் எல்லாவற்றையும் அண்ணா எதிர்கொள்கிறார். கென்னடி விமான நிலையத்திலேயே அண்ணாவை பத்திரிகைகளில் பார்த்திருந்த ஓர் அமெரிக்கர் அடையாளம் கண்டுகொண்டு, “உங்களிடம் திட்டமிட்டே நிறைய கேள்விகள் கேட்பார்கள். Go to hell என்று பதில் சொல்லிவிடுங்கள்” என்றார். சொர்க்கவாசல் எழுதிய அண்ணா புன்னகைத்தார்.

இந்தியா என்கிற பெரிய சுதந்திர நிலப்பரப்பின் கடைக்கோடி மாநிலத்தின் முதலமைச்சராக அவர் அமெரிக்கா வந்திருந்தார். அமெரிக்கர்களோ அவரை இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகப் பார்த்தனர். யேல் பல்கலைக்கழகத்தில் நடந்த சந்திப்புகள் மற்றும் விவாதங்களில் வியட்நாம் போர் பற்றி கேள்வி வருகிறது. திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டது பற்றிக் கேட்கிறார்கள். இருமொழிக் கொள்கை-மாணவர்களின் போராட்டம் பற்றிக் கேட்கிறார்கள். எல்லவாற்றுக்கும் பதில் சொல்கிறார், பதற்றமில்லாமல். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு பாதிப்பில்லாத சொற்கள் வந்து விழுகின்றன. பாயாசத்தில் முந்திரி பருப்பு போல பதில்களில் நகைச்சுவை நயம்.
“நேருவுக்கு பிறகு இந்தியாவில் உருவாகியுள்ள சிறந்த தலைவர்களில் ஒருவர் அண்ணாதுரை” என்றது யேல் பல்கலைக்கழகத்தின் செய்தி ஏடு. மாணவர்களிடம் அண்ணா உரையாடியபோதே அவர்களிடமிருந்து எதிர்காலத் தலைமுறையின் நோக்கம் என்ன என்பதையும் அவர் கற்றும் கொண்டார். அமெரிக்கப் பயணமே அவருக்கு ஓர் பல்கலைக்கழகமாகத்தான் இருந்தது.
இந்திய மாணவர்கள் சங்கம் அளித்த வரவேற்பில், இந்தியாவின் பண்பாட்டுப் பெருமையயும், அமெரிக்காவின் அறிவியல் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி, இந்தியாவைவிட பரப்பளவில் மூன்று மடங்கு அதிகமாகவும், மக்கள்தொகையில் மூன்று மடங்கு குறைவாகவும் உள்ள அமெரிக்காவின் மேம்பட்ட ஜனநாயகம் பற்றி எடுத்துரைத்தார்.
வாஷிங்டன், கோஸ்டாரிகோ தீவு என பல இடங்களுக்கும் அண்ணா பயணித்தார். ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட ஃபோர்டு நாடக அரங்கை சென்று பார்த்தார் அண்ணா. அவர் சுடப்பட்ட இடம் நினைவகமாக இருந்தது. கொலையாளி எப்படி உள்ளே வந்தான்? லிங்கன் எங்கே இருந்தார்? கொலையாளி எப்படி சுட்டான்? என்பதை அங்கே விளக்குவதற்கு ஆள் இருந்தார்கள். கால இயந்திரத்தில் செல்வது போன்ற உணர்வில் அண்ணா அதை கவனமாகக் கேட்டார். புதுப்பிக்கப்பட்ட நாடக அரங்கில் நடந்த ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும் ரசித்தார், தென்னாட்டு பெர்னாட்ஷாவான அண்ணா.

லாஸ்ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் படங்கள் எடுக்கப்படும் அரங்குகளைக் கண்டார். டிஸ்னிலேண்டை ரசித்தார். கண்களைக் கவரும் அமெரிக்காவின் இடங்களை மட்டுமல்ல, அங்குள்ள வயல்வெளிகள், பண்ணைகள் ஆகியவற்றை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதையும் பார்த்தார். கன்டிக்கட் மாநிலத்தில் லேக்வில் என்ற இடத்தில் வசிக்கும் ஜான் பிரிஸ்கோ என்பவர் தனது பண்ணை இல்லத்தில் அண்ணாவை விருந்தாளியாகத் தங்கவைத்து, தனது பால்பண்ணையின் வளர்ச்சியைக் காட்டினார். ரோமன்ட் பைன் என்பவர் 900 ஏக்கர் நிலத்தை நவீனத் தொழில்நுட்பம் மூலம் தானும் தன் மகனும் மட்டுமே கவனித்துக் கொள்வதை நேரில் அழைத்துச் சென்று அண்ணாவிடம் காட்டினார்.
இரண்டு ஏக்கர் நிலமிருந்தாலே அதை நான்கு பங்காளிகள் பிரித்துக்கொள்ளும் இந்திய நிலவுடைமுறையில், நவீனத் தொழில்நுட்பத்திலான விவசாயம், கால்நடை வளர்ப்பு இவற்றை சாத்தியப்படுத்துவது குறித்து அண்ணாவின் மூளை சிந்திக்கத் தொடங்கியது. அண்ணா சரசரி உயரம் கொண்ட மனிதர்தான். ஆனால், சிந்தனையில் உயர்ந்திருந்த அந்த மாமனிதரை அண்ணாந்து பார்த்தது அமெரிக்கா.
(சுற்றும்)
-கோவி. லெனின்