
‘மோனப் புல்வெளி’ என்று பெயர் கொண்ட அமெரிக்கப் பண்ணை வீட்டில் அண்ணாவை விருந்தினராகத் தங்க வைத்திருந்தனர் ஜான் டி.பிரிஸ்கோ குடும்பத்தினர். அமெரிக்கர்களின் விருந்தோம்பல் பண்பு எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பதில் அண்ணாவுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

பிரிஸ்கோ தனது மனைவி, இரண்டு மகன்கள், மூத்த மகனின் மனைவி ஆகியோரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தினார். அந்த வீட்டில் இன்னொரு பெண்ணும் இருந்தார்.
“இவரை என் இரண்டாவது மகனுக்கு நிச்சயித்திருக்கிறோம். விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. எங்கள் குடும்ப நடைமுறைகளைப் பழகிக் கொள்ளும் வகையில் வந்திருக்கிறார்” என்றார் பிரிஸ்கோ. வாழ்க்கையை எதிர்கொள்ளும் பக்குவத்தை அமெரிக்க குடும்பச் சூழல் அளிப்பதை அண்ணா கவனித்தார். பிரிஸ்கோ குடும்பத்தினர் மிகுந்த ஆர்வத்துடன் முதலமைச்சர் அண்ணாவை உபசரித்தனர்.
பிரிஸ்கோவின் மகனும் மனைவியும் அண்ணாவுடனான சந்திப்பை தங்களின் தனிச் சிறப்பாகக் கருதினார்கள். மகன் ஏற்கனவே அமெரிக்க அமைதிப்படையின் தொண்டராக மைசூர் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தவர். டாக்டர் பட்டம் பெறுவதற்காக மைசூர் மாநிலத்தின் வரவு-செலவு திட்டம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது அவரது நோக்கம்.
‘பணத்தோட்டம்’ எனும் பொருளாதார அரிச்சுவடி புத்தகம் எழுதிய அண்ணா, தங்களின் பண்ணைத் தோட்ட வீட்டில் விருந்தினராக வந்ததால், அவரிடம் நிறைய தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், மைசூர் சென்றபிறகு தமிழ்நாட்டுடன் தொடர்பு கொள்ளவும் எளிதாக இருக்கும் என்பதுதான் அந்த இணையரின் ஆர்வத்திற்கு காரணம்.
அமெரிக்க இளைஞர்கள் இந்தியாவைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை யேல் பல்கலைக்கழக உரையாடல்களிலும், அதன் பின் நடந்த சந்திப்புகளிலும் அண்ணா உணர்ந்தார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சாதிக்கட்டமைப்பு தடையாக இருப்பதையும், சாதி என்பது இந்திய மனித உறவில் ஆழமாக ஊடுருவியிருப்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தியா மீதான பொதுவானப் பார்வையைக் கடந்து, அதன் உள்விவகாரங்கள் வரை அமெரிக்காவின் கண்கள் ஊடுருவியிருந்தது.

உணவுப் பஞ்சத்தை நோக்கி இந்தியா தள்ளப்படும் என்ற அச்சம் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தன. அதற்கு காரணம், இந்தியாவின் மக்கள் தொகை. அதனைக் கட்டுப்படுத்துவது குறித்த இந்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி அண்ணாவிடம் கேட்டனர். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டினை தமிழ்நாடு முன்னெடுத்திருப்பது பற்றியும் குஜராத், மகராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அவை செயல்படுத்தப்படுவது பற்றியும் சொன்ன அண்ணா, அதே நேரத்தில், உத்தரபிரதேசத்திலும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை அந்த மாநிலங்கள் சரியாக மேற்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். 57 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் அண்ணா சுட்டிக்காட்டிய வேறுபாட்டின் மோசமான விளைவை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவை ஆளுகின்ற கட்சிக்கு எதிரான ஒரு கட்சியின் மாநில முதலமைச்சர் என்பதால் அண்ணாவிடமிருந்து அவர்கள் நிறைய எதிர்வினையை எதிர்பார்த்தார்கள். இந்தியாவின் மூத்த தலைவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள் பிரதமர்கள் ஆகியோர் மீது வெளிநாட்டில் போய்க் குற்றம்சாட்டும் அற்பத்தனமான செயலை அமெரிகாவில் அண்ணா செய்யவில்லை. அமெரிக்கர்களின் கேள்விகளுக்கு அவர் அமைதியாகவே வினையாற்றினார். அண்ணா, இந்திய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக அமெரிக்கர்கள் முன் உயர்ந்து நின்றார்.
அண்ணாவை அமெரிக்கா கவர்ந்தது. ஆனாலும் அவரது அந்தப் பயணத்தில் கண்ட நாடுகளில் ஜப்பான் அவர் மனதில் நிலைத்தது. யேல் பல்கலைக்கழக விழாவுக்குப் பிறகு அவர் பேசும்போதே, அமெரிக்காவில் 200 ஆண்டுகளாக மனித நாகரிகம் தழைத்திருக்கிறது. மிகப் பரந்த இந்த நிலப்பரப்பில் உள்ள இயற்கைச் செல்வங்கள் இந்த 200 ஆண்டுகளில்தான் மனிதத் தேவைக்குப் பயன்படுகின்றன. மக்கள் தொகையும் இந்த நிலத்தில் குறைவு. அதே நேரத்தில் இந்தியா என்பது ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக மனித நாகரிகத்தை கொண்ட நிலப்பரப்பு. அங்குள்ள இயற்கைச் செல்வங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதால், அதன் வளம் குறைவது இயல்பு. இந்தியாவில் 80% பேர் விவசாயத்தை சார்ந்தவர்களாக இருப்பதால், அமெரிக்கா போல நவீன முறையில் 900 ஏக்கரை இரண்டே பேர் பராமரிப்பது என்பது உடனடி சாத்தியமாகாது என்று தெரிவித்த அண்ணா, அமெரிக்காவின் வளர்ச்சியைவிட தனக்கு ஜப்பான் நாட்டின் வளர்ச்சிதான் ஆச்சரியம் தருகிறது என்றார்.

இயற்கை வளங்கள் சூழ்ந்த-பாதுகாப்பு நிறைந்த அமெரிக்காவின் வளர்ச்சியையும், இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு-போர்ச் சூழல்களையும் சந்தித்து மீண்டுள்ள ஜப்பான் நாடு 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அடைந்த முன்னேற்றம் அண்ணாவை வியக்க வைத்தது. தனது பயணத்தில், மே 8ஆம் நாள் அவர் ஜப்பான் சென்றபோது, தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மிகி என்பவரோடு அண்ணா உரையாடினார்.
சாதி, மொழி, பண்பாடு சார்ந்த பிரச்சினைகள் எப்படி இருக்கின்றன என்று ஜப்பான் அமைச்சர் மிகி கேட்டதற்கு அண்ணா, “உங்கள் ஜப்பான் நாடு நெடுங்காலமாக எவ்வளவோ எரிமலைகளின் சீற்றங்களுக்கிடையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. உங்கள் நாட்டில் உள்ள எரிமலைகளைப் போல எங்கள் நாட்டில் மனித எரிமலைகள் உள்ளன. நாங்களும் அதை எதிர்கொண்டு சமாளிப்போம்” என்று உவமையுடன் கூறினார். ஹைகூ போன்ற அண்ணாவின் சொல்லாற்றல் ஜப்பான் அமைச்சரை ஈர்த்தது.
இந்தியா அளவுக்கு ஜப்பானில் பெரியளவில் மக்கள்தொகை இல்லை. தமிழ்நாட்டைவிட கொஞ்சம் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நாடு. அங்கே மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாட்டினால் தொழிலாளர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக ஜப்பான் அமைச்சர் மிகி சொன்னபோது, முதலமைச்சர் அண்ணா, இந்தியாவின் பல்வேறு சிக்கல்களின் இயல்புத் தன்மை பற்றி அவருக்குத் தெளிவாக விளக்கினார். அவற்றை உன்னிப்பாகக் கேட்ட மிகி, “இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?” என்று அண்ணாவிடம் கேட்டார்.
“இந்தியாவில் பெரிய பிரச்சினைகள் உள்ளபோதிலும் அவற்றை நாங்கள் சமாளித்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது” என்றார் அண்ணா. அந்த அண்ணா மீது முழு நம்பிக்கை வைத்து ஜப்பானின் அரசுத் துறையினரும் வணிகத் துறையினரும் கலந்துரையாடினர். தலைநகர் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சேலம் இரும்பாலை, மீனவளத் திட்டம், வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அண்ணா பேசினார்.
1968 மே 10ஆம் நாள் ஹாங்காங்கில் செய்தியாளர்களை அண்ணா சந்தித்தபோது, அவரது தொடர்ச்சியான பயணம் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். “நான் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று புன்னகைத்தபடி கேட்டார் அண்ணா.
ஜப்பான் அரசுடனான ஒப்பந்தங்கள் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்தியா என்பது கூட்டாட்சி அரசு. மைய அரசுக்கு எங்கள் மாநிலத்தின் விருப்பத்தைத் தெரிவிப்போம்” என்றார்.
நிருபர்கள் விடவில்லை. “இப்போது தனி திராவிட நாடு கேட்கவில்லையா?” என்று கேட்டனர். “நாங்கள் அதை கைவிட்டு நெடுங்காலம் ஆகிவிட்டது” என்ற அண்ணா, அமெரிக்கர்களிடம் சொன்னதுபோலவே ஹாங்காங்கிலும் புன்சிரிப்புடன், “என் பழைய ஆசைகளைக் கிளப்பாதீர்கள். நான் அவற்றால் இழுத்துச்செல்லப்பட வேண்டாம் என நினைக்கிறேன். இந்திய அரசுக்கு எந்த குந்தகமும் விளையாத வகையில், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக்க முடியும் என நம்புகிறேன்” என்றார் அண்ணா உறுதியான குரலில்.
இந்திய மாநிலங்களிலேயே முன்னோடியான பல திட்டங்களை செயல்படுத்தி, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடனன் கல்வி-மருத்துவம்-பெண்கள் முன்னேற்றம்-மதநல்லிணக்கம் என பல இலக்குகளிலும் முன்னணியில் நிற்கிறது அண்ணா வழியில் அயராது உழைக்கும் தலைவரைக் கொண்ட இன்றைய தமிழ்நாடு.
(சுற்றும்)
-கோவி. லெனின்