UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் மற்றும் அறிவிப்புகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் (NPCI) டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை செய்யும் வகையில் UPI (Unified Payment Interface) என்கிற இணையவழி பணப் பரிமாற்ற கட்டமைப்பை உருவாக்கி அறிமுகப்படுத்தியது.
UPI பணப் பரிமாற்ற முறை இப்போது நாட்டில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான மக்களின் முதன்மை தேர்வாக உருவெடுத்துள்ளது.
இந்த சூழலில், UPI பரிவர்த்தனைகளை சுலபமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த பல்வேறு புதிய அம்சங்களை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது.
அந்த வகையில் இந்தாண்டு ஜனவரி 1 முதல் சில புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய விதிமுறைகள் மற்றும் அறிவிப்புகள்:
- ஓராண்டுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாது இருக்கும் UPI ஐடிகளை செயலிழக்கச் செய்ய Google Pay, PayTM, PhonePay உள்ளிட்ட பணப்பரிவர்த்தணை செயலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு இனி 2,000 ரூபாய்க்கும் அதிகமாக செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்படும்.
- இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான UPI பரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், இனி 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் இணைந்து இணைந்து நாடு முழுவதும் UPI ஏடிஎம்களை ரிசர்வ் வங்கி திறக்க உள்ளது. அதில், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து QR Codeஐ ஸ்கேன் செய்து பணத்தை எடுக்கலாம்.
- ஆன்லைன் Walletகள் போன்ற ப்ரீபெய்டு பேமண்ட் கருவி (Prepaid Payment Instruments) மூலம் 2,000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீத பரிமாற்ற கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
- இனி UPI ஆப்களை பயன்படுத்தி பணம் செலுத்தும்போது, பணம் பெறுவோர் நபரின் வங்கி கணக்கின் உண்மையான பெயர் திரையில் காட்டப்படும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.