
நெடுநேரமாகியும் ஒரு வழியும் தெரியாததால், பொறுமையிழந்து சுருட்டுப் பற்றவைத்தவன், புகையை இழுத்துவிடுவதுபோல, அந்தக் கப்பலிலிருந்து கரும்புகை வந்து கொண்டே இருந்தது. நான்கு திசையிலும் கடல்தான். கரை எங்கே என்பதற்கான வழி தெரியவில்லை.
பயண சலிப்பில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் வசீகரமான மீசையும் வாட்டசாட்டமான தோற்றமும் கொண்ட அந்த மனிதர். “ஆப்பிரிக்காவை சுத்திட்டுப் போனப்ப பல மாதங்கள் கடல் பயணம்தான். இப்ப சூயஸ் கால்வாயை உருவாக்குன பிறகு ஆறு வாரத்தில் போக முடியுது. இலக்கை நோக்கி பயணிக்கிறதும், அதற்கான வழியை உருவாக்குவதும் எளிதான காரியமல்ல. போராட்டமாத்தான் இருக்கும். சலிப்படைஞ்சா காரியம் நடக்காதுஎன்று சொன்னவர், தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து, சில புத்தகங்களைப் புரட்டியபடியே குறிப்பெடுக்கத் தொடங்கினார்.
“அவர்தான் டாக்டர் டி.எம்.நாயர். ஜஸ்டிஸ் பார்ட்டி லீடர். சூத்திரப் பசங்களுக்கு அரசாங்க வேலை கொடுக்கணும்னும், படிப்பு கிடைக்கணும்னும், எலக் ஷனில் போட்டி போட தனித் தொகுதி வேணும்னும் இங்கிலாந்துக்கு போய் வெள்ளைக்காரத் துரைங்ககிட்ட கேட்கப் போறாராம்” என்றார் அவரைப் பற்றி ஒரு பயணி இன்னொரு பயணியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஜஸ்டிஸ் பார்ட்டி-நீதிக் கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதன்மையான மூன்று தலைவர்களில் ஒருவர் தாரவாட் மாதவன் என்கிற டாக்டர் டி.எம்.நாயர். மற்ற இரு தலைவர்களான பிட்டி.தியாகராயரும், டாக்டர் நடேசனாரும் கட்சியின் பிற நிர்வாகிகளும் டி.எம்.நாயரிடம் ஒரு பெரும் பொறுப்பை ஒப்படைத்திருந்தனர்.
நீதிக்கட்சிக்கான அமைப்பு முறை, கொள்கைத் திட்டம் ஆகியவற்றை உருவாக்கியவர் நாயர்தான். அவர் இங்கிலாந்தில் டாக்டராகப் பயிற்சியும் மேற்படிப்பும் முடித்தவர். ஐரோப்பாவின் முற்போக்கு அமைப்புகளையும், இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய காங்கிரஸ் தலைவர்களையும் அறிவார். அங்கேயும் இந்தியர்களிடம் சாதிக் கண்ணோட்டம் இருந்ததால் நேரடியாக பாதிக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் நீதிக்கட்சியின் நோக்கம். அதற்கேற்றபடி இயக்கத்தின் வடிவமைப்பை பிரான்ஸ் நாட்டில் Georgeous Clemenceau என்பவரின் Radical Republican Partyயின் அமைப்பு முறையில் உருவாக்கினார் டி.எம்.நாயர். Georgeous Clemenceau என்பவரும் டி.எம்.நாயரைப் போல ஒரு டாக்டர்தான்.
டி.எம்.நாயர் ஆற்றல்மிக்க பேச்சாளர். ஆதாரப்பூர்வமான வாதங்களை முன்வைத்து எழுதும் கட்டுரையாளர். பத்திரிகை துறையின் நுணுக்கங்களை அறிந்தவர். Antiseptic என்ற பத்திரிகையை நடத்தினார். காலங்காலமாக சாதிப் பாகுபாட்டால் புரையோடிப் போன சமுதாயத்திற்கு டாக்டர் நாயரின் கருத்துகளே Antisepticஆக அமைந்தன.
வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவுக்கு படிப்படியாக அதிகாரங்கள் வழங்குவதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்த இந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் மான்டேகுவும், இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டும் இணைந்து ஒரு திட்டத்தை தந்திருந்தார்கள். அதன்படி, இரட்டை ஆட்சி முறையில் தேர்தலை நடத்தி, மாகாணங்களில் இந்தியர்களே ஆளும் குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட அரசு அமையும். மாகாணத் தேர்தலில் சீக்கியர்கள், முஸ்லிம்கள் பிரதிநிதித்துவத்திற்காகதனித் தொகுதிகளையும் இத்திட்டத்தில் அறிவித்திருந்தனர். அதுபோல, பிராமணரல்லாதவர்களுக்கும் சென்னை மாகாணத்தில் தனித் தொகுதிகள் வேண்டும் என்பது நீதிக்கட்சியின் கோரிக்கை. சென்னைக்கு மாண்டேகும் செம்ஸ்போர்டும் வந்த போது அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க சென்ற நீதிக்கட்சித் தலைவர்கள் குழுவில் நாயர்தான் முதன்மையானவர். ஆனால், அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
கலெக்டரிடம் மனு கொடுத்து வேலை நடக்காவிட்டால் செகரட்டேரியட் போவதுதானே வழக்கம். அதனால்தான், நீதிக்கட்சித் தலைவர்கள் கூடி முடிவெடுத்து, டி.எம்.நாயரை இங்கிலாந்துக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தனர். கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட டி.எம்.நாயர், தன் சொந்த செலவில் கப்பல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
பல வாரங்கள் கப்பலில் பயணித்து இங்கிலாந்து சென்றதும், ரயிலில் பயணம் தொடர்ந்தது. லிவர்பூல் ரயில் நிலையத்தில் நாயர் இறங்கினார். மிடுக்கான அவர் முன்பாக, விறைப்பான ஒரு ராணுவ அதிகாரி வந்த நின்றார்.
“டாக்டர் நாயர்.. பிரிட்டிஷ் அரசின் கட்டளையை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.“
“சொல்லுங்க.. என்ன கட்டளை?”
“இங்கிலாந்தில் எந்த பொது இடத்திலும் எதைப் பற்றியும் நீங்கள் பேசக்கூடாது. இதுதான் அரசாங்கத்தின் கட்டளை” என்று சொல்லி அரசின் உத்தரவை கொடுத்தார் ராணுவ அதிகாரி.
“எதிர்பார்த்ததுதான் சார். உங்க அரசாங்கத்துக்கும், குறிப்பா இந்திய விவகாரத்துறை அமைச்சருக்கும் என் நன்றியை சொல்லிடுங்க’‘ என்றார், நக்கல் பிடித்தவரான நாயர்.
சென்னையில் மாண்டேகுவையும் செம்ஸ்போர்டையும் நீதிக்கட்சிக் குழு சந்தித்தபோது அவர்களிடம் டி.எம்.நாயர், தனித் தொகுதிக்கான தேவையையும், வகுப்புவாரி உரிமைக்கான காரணத்தையும் சொல்லி, குறைந்தபட்ச காலத்திற்காவது கொடுக்க வேண்டும் என்றார். மாண்டேகு அவரைப் பார்த்தார், நாயர் உறுதியான குரலில் சொன்னார், “இயற்கை விபத்துகளை எதிர்கொண்டு வாழ்ந்துவிடலாம். பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எதிர்கொண்டு வாழவே முடியாது. சமத்துவம் கிடைக்காது”
அவர் சொன்னதை மாண்டேகு மறக்கவில்லை. 1917 டிசம்பர் 21 தேதியிட்ட தனது ‘இந்தியா டைரி’யில் இப்படி எழுதியிருந்தார் மாண்டேகு. “டி.எம்.நாயர் இனிமையாகவும் அழகாகவும் பேசினார். கேட்போர் மனதில் நன்கு பதியும்படி தெளிவாகப் பேசினார். பார்ப்போர் ஒரு வித அச்சம் கொள்ளும் தோற்றமும் உடற்கட்டும் அவருக்கு இருந்தது”
இந்தியாவை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த இங்கிலாந்து அமைச்சரையே அச்சம் கொள்ள வைத்திருக்கிறது டி.எம்.நாயரின் நேரடியான-நேர்மையான-உண்மை நிலையைப் போட்டுடைத்த சொற்கள். அந்த பயம் இருக்கணும்ல… அதனால்தான் டி.எம்.நாயருக்கு இங்கிலாந்து அரசு வாய்ப்பூட்டு போட்டது. ஏற்கனவே பாலகங்காதர திலகருக்கும் காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படி செய்திருந்ததால், டி.எம்.நாயர் அலட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு டயாபடீஸ் இருந்தது. இங்கிலாந்தில் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டபடி, கட்சி சொன்ன வேலையை தனது இங்கிலாந்து நண்பர்களிடம் சொல்லி அனுப்பினார்.
பேசத்தானே தடை? எழுதினால்..? எழுதினார். இந்திய சமூகத்தின் சாதிக் கட்டுமானத்தையும் அது எப்படி குறிப்பிட்ட சாதியினருக்க மட்டும் சாதகமாகவும், பெரும்பான்மையான மக்களின் கல்வி-வேலை உள்ளிட்ட உரிமைகளை காலம் காலமாக மறுத்து வருகிறது என்பதையும் இங்கிலாந்திலிருந்து வெளிவந்த Spectator, Nineteenth century and after, Daily Telegraph, Edinburgh Review உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதினார். மாண்டேகு-செம்ஸ்போர்ட் திட்டத்தை மான்ட்போர்ட் என்று முதலில் குறிப்பிட்டவர் டி.எம்.நாயர்தான் என்றும் பின்னர் அதுவே அரசின் சார்பில் பயன்படுத்தப்பட்டது என்றும் திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தனது நீதிக்கட்சி வரலாறு நூலில் குறிப்பிடுகிறார்.
டி.எம்.நாயருடைய எழுத்தின் தாக்கம் போலவே பேச்சும் பெருந்தாக்கம் ஏற்படுத்தும் என்பது அவரது நண்பர்களுக்குத் தெரியும். அவருக்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் லார்டு சைடன்காம், லார்டு செல்போர்ன் ஆகியோர் பேசினர். நாயருக்குப் போடப்பட்டிருந்த வாய்ப்பூட்டு விலகியது. எம்.பி.க்கள் அவரை நாடாளுமன்றத்திற்கு வந்து பேச அழைத்தார்கள். பிரிட்டன் நாடாளுமன்ற அரங்கில் திராவிட இனத்தின் நிலையையும் நீதிக்கட்சியின் நோக்கங்களையும் விளக்கி டி.எம்.நாயர் ஒரு மணி நேரம் பேசினர். நாடாளுமன்ற எம்.பிக்கள் அவரது பேச்சை கைத்தட்டி வரவேற்றனர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஏடுகளான Guardian London Times போன்றவற்றில் டி.எம்.நாயரின் அனல் தெறிக்கும் பேச்சு பற்றியும் அவர் முன்வைக்கும் வாதங்கள் குறித்தும் செய்திகள் வெளியாயின.
டாக்டர் தாரவாட் மாதவன் நாயருக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்பிய குரல் திலகருக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் போடப்பட்டிருந்த பேச்சுரிமைத் தடையையும் சேர்த்தே நீக்கியது.
திராவிடம் தொடங்கும். இந்தியாவுக்கே விடியும். அப்போதும் இப்போதும் அப்படித்தான்.
(சுற்றும்)
-கோவி. லெனின்