
“இந்திய அரசியல் முன்னேற்றத்திற்கும் அதன் பாதுகாப்பிற்கும் ஏற்றதொரு திட்டத்தை பிரிட்டன் அரசு தயாரிப்பது பெரிய செயல் அல்ல. இந்திய அரசியல்வாதிகள் பலரையும், அரசியல் கட்சியினர் பலரையும் நேருக்கு நேர் சந்தித்து, பகிரங்கமாக விசாரித்து அவர்களுடைய கருத்துகளையும் யோசனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்” என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் டாக்டர் டி.எம். நாயர் பேசியதுடன், அது பற்றி அங்கிருந்து வெளியாகும் பத்திரிகைகளிலும் கட்டுரைகளாக எழுதினார்.
சென்னை மாகாணத்திலிருந்து இங்கிலாந்துக்கு சென்ற திராவிடத் தலைவர் டாக்டர் டி.எம்.நாயரின் கருத்துகளை அந்நாட்டு அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், வல்லுநர்கள் விவாதிக்கத் தொடங்கினர். டி.எம்.நாயரின பேச்சைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை அரவணைத்துக் கொண்டதுடன், அவரது கருத்துகளை ஆதரித்து பேச ஆரம்பித்தனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றத்தை உண்டாக்கியிருந்தது டி.எம்.நாயரின் இங்கிலாந்து பயணம்.

1918 ஆகஸ்ட் 5 அன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற கூட்டங்களில் இந்திய அரசியல் சீர்திருத்தம் பற்றி விவாதிக்கப்பட்டது. நீதிக்கட்சி சார்பில் வைக்கப்பட்ட வகுப்புவாரி உரிமை, இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலை ஆகியவை குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டங்களில் எம்.பி.க்கள் பேசினார்கள். அந்த விவாதங்கள் பத்திரிகைகளில் வெளியாகவே, பிரிட்டிஷ் மக்களும் இந்தியாவின் அரசியல்-சமுதாய சூழலைப் புரிந்துகொள்ள முடிந்தது.
நாயருடன் சென்னை மாகாணத்தில் நடந்த சந்திப்பின் போது திராவிடத்தின் குரலை வெள்ளைக்கார அமைச்சரும் வைசிராயும் புறக்கணித்தபோதும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அது எதிரொலித்தது. மக்கள் மன்றங்களிலும் பேசப்பட்டது. அதற்கு காரணம், டாக்டர் தாரவாட் மாதவன் நாயர் எனும் ஒற்றைப் பேராளுமையின் உறுதியான செயல்பாடுகள்தான். தன்னிடம் என்ன பொறுப்பு அளிக்கப்பட்டதோ அதை இங்கிலாந்து நாடாளுமன்றம் வரை கொண்டு சென்ற டி.எம்.நாயர், 1918ஆம் ஆண்டின் கடைசியில் சென்னைக்குத் திரும்பினர். மவுண்ட் ரோட்டில் மக்கள் கூடி நின்று அவருக்கு பெரும் வரவேற்பளித்தனர்.
தென்னிந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கு தனித் தொகுதி என்ற நீதிக் கட்சியின் கோரிக்கை, பிரிட்டிஷ் ஆட்சியில் செல்வாக்காக இருந்த இந்திய உயர் சாதியினருக்கும், காங்கிரஸ் கட்சியில் இருந்த பிராமணர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களுக்கு இணையாக மற்ற சமூகத்தினர் வந்து விடுவார்கள் என்பதால், ‘தனித்தொகுதி, வகுப்புவாரி உரிமை இவையெல்லாம் மக்களை பிரிக்கும் சதி’ என்று பிரிட்டிஷார் காதுவரை கொண்டு சென்று அதனை நிறைவேறவிடாமல் தடுக்க முயன்றனர்.
மாண்டேகு-செம்ஸ்போர்டு முன்வைத்த இந்தியாவுக்கான அரசியல் சீர்திருத்தம் குறித்து இங்கிலாந்தில் தங்கியிருந்த பாலகங்காதர திலகர் முதல் அன்னிபெசன்ட் அம்மையார் வரை பலரும் அங்கே பல கூட்டங்களில் பேசி வந்தனர். டி.எம்.நாயர் திரும்பவும் இங்கிலாந்து சென்றால்தான் நமக்கான உரிமையைப் பெற முடியும் என நீதிக்கட்சித் தலைவர்கள் தீர்மானித்தனர். இம்முறை, நாயருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.
”கப்பல் பயணம் என்பது உங்கள் உடலுக்கு சரியாக இருக்காது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும்” என்று சக டாக்டர்கள் எச்சரித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற அமைப்பினர் இங்கிலாந்தில் முகாமிட்டிருக்கும் நேரத்தில், நீதிக்கட்சி சார்பில் யாரும் இல்லாமல் போய்விட்டால், கோரிக்கையைப் புறக்கணித்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த நாயர், தன் உடல்நிலையப் பற்றிக் கவலைப்படாமல் 1919ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்குப் பயணம் செய்தார்.
“இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் நீதிக்கட்சியின் கோரிக்கைகளை முன்வைத்தால்தான் வகுப்புவாரி உரிமை, தனித்தொகுதி ஆகியவை கிடைக்கும்” என்பதை கப்பல் பயணத்தில் கிடைத்த நேரங்களில் சிந்தித்து, அது பற்றிய தெளிவான வியூகத்தையும் நாயர் வகுத்து வைத்தார். இங்கிலாந்து சென்றதும் தனது நண்பர்களிடம் இது பற்றி பேசினார். மாலை நேர கூட்டங்களிலும் சந்திப்புகளிலும் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது. வேலை தொடர்ந்து கொண்டே இருந்தது.

அவர் லண்டன் சென்று 20 நாட்கள் கழித்து, நீதிக்கட்சியின் சார்பிலான குழு அங்கு வந்து சேர்ந்தது. இந்திய நண்பர்களிடம், “நாயர் எந்த இடத்தில் தங்கியிருக்கிறார்?” என்று அவர்கள் கேட்டார்கள். “ஹாஸ்பிடலில் இருக்கிறார்” என்று பதில் வந்தது. நீதிக்கட்சி குழுவினர் அதிர்ந்து போனார்கள்.
லண்டனில் நாயர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவனைக்குச் சென்றார்கள். டாக்டர் நாயரின் உடல்நிலை மோசமாக இருந்தது. டயாபடீஸ் பாதிப்பு, சக டாக்டர்களின் அறிவுரையை மீறிய கப்பல் பயணம், இங்கிலாந்தில் இந்திய உயர் சாதியினர் கொடுத்த நெருக்கடிகள் அத்தனையையும் தாங்கித் தாங்கி அவரது மனதும் உடலும் பாதிக்கப்பட்டிருந்தது.
நீதிக்கட்சி நண்பர்களை உட்காரச் சொன்னார் நாயர். அந்த சமயத்தில் அவருடைய இங்கிலாந்து நண்பர்களும், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நலன் விசாரிக்க வந்திருந்தனர். அவர்களிடம் நீதிக் கட்சி நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார் நாயர்.
“மிஸ்டர் நாயர் நீங்க ரெஸ்ட் எடுங்க’‘ என்றனர் இங்கிலாந்து நண்பர்கள். ஒரு டாக்டராக தன் உடல்நிலையைப் பற்றி டி.எம்.நாயர் அறிந்திருந்தார்.
“ஜென்டில்மென்.. எங்க மண்ணில் சாதி ஒடுக்குமுறை ஆயிரக்கணக்கான ஆண்டாக இருக்குது. நான் நாயர். ஆனால், எங்கள் ஊரில் உள்ள நம்பூதிரி, நான் டாக்டராக இருந்தாலும், “அடே..மாதவா இங்கே வாடா” என்றுதான் கூப்பிடுவார். அப்படியென்றால் ஆதிதிராவிட மக்கள், மற்ற திராவிட சமுதாயத்து மக்களின் நிலையை யோசியுங்கள். ஆதிக்கம் செலுத்தும் சாதியினரோடு, இவர்கள் சரிசமமாக போட்டி போட முடியுமா? கல்வி கிடைக்கலை. வேலை கிடைக்கலை. தெருவில் நடக்க-கோவிலுக்கு போக உரிமை கிடைக்கல. அதனால்தான் தனித் தொகுதி கேட்கிறோம். இங்கிலாந்து அரசாங்கம் இதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக வாக்குமூலம் கொடுக்க விரும்புறேன். அதற்காகத்தான் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்..” என்ற டி.எம்.நாயரின் உருக்கமான வார்த்தைகள் அவர்களை உலுக்கியது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் லார்டு செல்போர்னை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தார்கள். “டாக்டர் நாயரின் ஹெல்த் கண்டிஷன் மோசமா இருக்கு. இந்தியாவுக்கான அரசியல் சீர்திருத்தத்தில் தென்னிந்திய மக்களுக்கு என்ன தேவைன்னு அவரிடம் தெளிவான திட்டம் இருக்கு. அதனால, ஹாஸ்பிடலுக்கு கூட்டுக்குழு வந்து நாயரோட ஸ்டேட்மென்ட்டை பதிவு செய்ய முடியுமா?”
“ஓ..யெஸ்..ஜூலை 18 பதிவு பண்ணிக்கலாம். ஜாயின்ட் கமிட்டியோட மற்ற மெம்பர்ஸ்கிட்ட சொல்லிடுறேன்” என்றார் செல்போர்ன். இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அதுவரை இப்படி யாருக்கும் ஒரு வாய்ப்பை தந்ததில்லை. டாக்டர் நாயரின் அறிவாற்றலும், உறுதியான முயற்சிகளும்தான் இதற்கு காரணம் என்று நீதிக்கட்சிக் குழுவினரும் இங்கிலாந்து நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜூலை 17 அன்று மருத்துவமனையில் நாயரை சந்தித்து, மறுநாள் கூட்டுக்குழு நேரில் வந்து வாக்குமூலம் பெற இருப்பதைத் தெரிவித்தனர். “ஸ்டேட்மெண்ட் கொடுத்ததும் உங்க ஹெல்த்தும் நல்லாகிவிடும் டாக்டர் நாயர்” என்றார்கள்.
1919 ஜூலை 18. கூட்டுக்குழு வாக்குமூலம் பெறுகிற நாள். அவர்களுக்கு முன்பாக நீதிக்கட்சியினர் மருத்துவமனைக்கு வந்தனர்.
‘’Sorry.. Nair is no more’’ என்றார்கள் அங்கிருந்த டாக்டர்கள்.
சற்று முன்தான் நாயரின் உயிர் பிரிந்திருந்தது. மரணப்படுக்கையிலும் சமூக நீதிக்காகப் போராடிய அந்த மாவீரரின் உடலைப் பார்த்து நீதிக்கட்சியினரும் இங்கிலாந்து நண்பர்களும் கண்ணீர் விட்டார்கள்.
டாக்டர் நாயரின் மரணச் செய்தி இங்கிலாந்தின் பிரபல பத்திரிகைகள் அனைத்திலும் வெளியாகி, கோல்டன் க்ரீன் என்ற இடத்தில் தகனம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
திராவிட இயக்கத்தின் தலைமகன்களில் ஒருவரின் மரணத்தில் இங்கிலாந்து நாட்டினரும் ஐரோப்பாவின் மற்ற நாட்டினரும் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக வந்தனர். பிரபல பத்திரிகைகள் ஒவ்வொன்றின் சார்பிலும் பிரதிநிதிகள் வந்து இறுதிமரியாதை செலுத்தினர்.
சமூக நீதிக்கான அறப்போர்க் களத்தில் டாக்டர் டி.எம்.நாயர் தன் உயிரையே தந்தார். அவர் இறப்பிற்குப் பிறகு, 1920ல் சென்னை மாகாணத்திற்கான தேர்தல் நடந்தது. அதில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தத. வகுப்புவாரி உரிமை அரசாணையை வெளியிட்டு செயல்படுத்தியது. அனைத்து சமுதாயத்தினருக்குமான கல்வி உரிமை, பொது உரிமை, இந்து அறநிலையச் சட்டம், பெண்களுக்கு சட்டமன்றப் பிரதிநிதித்துவம்-வாக்குரிமை என சமூக நீதிக்கான அனைத்திற்கும் அடித்தளமிட்டது.
அந்த அடித்தளத்தில்தான் இன்றும் தொடர்கிற திராவிட மாடல் அரசு, எந்த இங்கிலாந்தில் டி.எம்.நாயர் திராவிட இனத்தின் சமூக நீதிக்காக பாடுபட்டாரோ அந்த இங்கிலாந்தில் திராவிடத்தை முழங்கியுள்ளது. உயிர் கொடுத்து உயர்ந்து நிற்கிறார் டாக்டர் டி.எம்.நாயர்.
(சுற்றும்)
-கோவி. லெனின்