
பிரிட்டிஷ் அரசிடம் நீதிக் கட்சித் தலைவரான டி.எம்.நாயர் பதித்த திராவிடத் தடங்கள் அழுத்தமானவை. அவர் இங்கிலாந்தில் இருந்தபோது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவராக இருந்தவர் கே.எம்.பணிக்கர். பின்னாளில் இந்தியத் தூதராக எகிப்து, சீனா போன்ற நாடுகளில் இருந்தவர். கேரளாக்காரரான பணிக்கருக்கு நாயரின் பேச்சுகள்-எழுத்துகள் மீது ஈர்ப்பு உண்டு. அதனால் லண்டனில் அவரை சந்தித்துப் பேசுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
மான்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் பற்றிய டி.எம்.நாயரின் பார்வையில் பணிக்கருக்கு பெரிய உடன்பாடில்லை என்றாலும், ஆளுமைத்திறன் கொண்ட அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென்று முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தி டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த சர் ஃப்ராங்க் பிரவுன் என்பவர் மூலம் நாயரை முதன்முதலாக சந்தித்தபோது ரொம்பவே மகிழ்ந்தார் பணிக்கர். அந்த சந்திப்பின் ஈர்ப்பு, அதன்பிறகு பல முறை இருவரையும் தொடர்ந்து சந்திக்க வைத்திருக்கிறது.
பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிரில் இருப்பவர்களைக் கவர்ந்துவிடும் ஆற்றல் டி.எம்.நாயருக்கு இருந்தது என்று தன்னுடைய சுயசரிதையில் எழுதியுள்ள பணிக்கர், “நாயரின் அறிவார்ந்த சிந்தனையும் அதை வெளிப்படுத்தும் விதமும் இங்கிலாந்தில் இருந்த இந்தியர்களில் வேறெவரிடமும் கிடையாது. எனக்குத் தெரிந்து, இந்தியர்களில் நாயருடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு யாருடைய பேச்சும் எழுத்தும் இல்லை. ஒரு இன்ஜினியருடன் அவருடைய துறையைப் பற்றியும், ஒரு வக்கீலிடம் சட்டங்கள் பற்றியும் பேசவும் வாதிடவும் கூடியவராக நாயர் இருந்தார். எல்லாத் தரப்பினரிடமும் பழகுவார். சமூக அக்கறையுடன் செயல்படுவார். அவருடைய மனதைப் போலவே கைகளும் பரந்துபட்டவை. பலருக்கும் உதவியிருக்கிறார்” என்று எழுதியிருக்கிறார்.
டி.எம்.நாயரை ‘திராவிட லெனின்’ என்று எழுதியவர் தந்தை பெரியார். சோவியத் யூனியனை கட்டியமைத்த லெனினைப் போல, திராவிட இயக்கத்தைக் கட்டமைப்பதில் நாயருக்கு இருந்த துணிவும் தெளிவும், இயக்கம் உருவானதற்கான காரணங்களையும் அதற்கான தேவைகளையும் ஆள்வோரிடம் எடுத்துரைத்த நாயரின் ஆற்றலும் பெரியாரைக் கவர்ந்தன. அப்போது பெரியார் காங்கிரசில் இருந்தார். காங்கிரஸ் விருப்பப்படி சென்னை மகாஜன சங்கத்தில் செயல்பட்டார். அதில் உள்ள திராவிடர்கள் நம் பக்கம் வருவார்கள் என்று டி.எம்.நாயர் தெளிவாகக் கணித்தார். அவர் மறைவுக்குப் பிறகு அதுதான் நடந்தது.
திராவிட இயக்கத்தில் பெரியாருக்கு முந்தைய வெர்ஷன்தான் தாரவாட் மாதவன் நாயர். அவர் விட்டுச் சென்ற பணிகளை பெரியார் தன் தோள் மீது போட்டுக் கொண்டு தொடர்ந்தார். பேசினார். எழுதினார். பத்திரிகை நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். நாயரைப் போலவே வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொண்டார் பெரியார்.
சென்னை துறைமுகத்திலிருந்து Ambosie என்ற பிரெஞ்சு கப்பல் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புறப்பட்டது. அதில் பெரியார் பயணித்தார். அவருடன் சுயமரியாதை இயக்கத்தின் பிரமுகரான இராமநாதன் சென்றார்.

“ஏங்க.. ஈ.வெ.ரா? உங்க உடல்நிலை காரணமா பயணத்தை ஒத்தி வைக்கலாம்னு சொன்னா கேட்க மாட்டேங்குறீங்க.அதுவும் நான்காம் வகுப்பு பிரயாணம். உடம்புக்கு ஒத்துக்குமா?”
“அதெல்லாம் பாக்க முடியுங்களா ராமநாதன். ஐரோப்பா கண்டத்துல இருக்கிற இங்கிலாந்து போன்ற தேசங்களிலும் சோவியத் ரஷ்யாவிலும் மக்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கு? நம்ம ஊரு சாதி-மதம்-சடங்கு மாதிரி அந்த சேதங்களில் மக்கள்கிட்ட ஏற்றத்தாழ்வு இருக்கா? தீண்டாமை இருக்கா? அங்குள்ள பொதுநல சங்கங்கள் எப்படி செயல்படுது? நம்ம இயக்கத்தை வளர்ச்சிப் பாதையில கொண்டு போறதுக்கு என்னென்ன செய்யணும்? நம்ம மக்களோட சமுதாய விடுதலைக்கு என்ன செஞ்சா அந்த நாடுகள் போல நம்ம ஆளுங்களும் முன்னேற்றம் அடைவாங்க? இதெல்லாம்தான் ராமநாதன் என்னோட பயணத்தோட நோக்கம்” என்று தெளிவாக சொன்னார் பெரியார்.
சுயமரியாதை இயக்கத்தின் மேடைகளிலும் மாநாடுகளிலும் பொதுவுடைமைக் கொள்கை-சமதர்மக் கருத்துகள் பேசப்பட்டன. அதனால் பெரியார் ஒரு முறையாவது ஐரோப்பா போய்விட்டு வரவேண்டும் என்பது இயக்கத்தவர்கள் மற்றும் நண்பர்களின் கோரிக்கையாக இருந்தது. புறப்பட்டுவிட்டார் பெரியார்.
Ambosie கப்பல் பிரான்சு நாட்டு கப்பல் என்பதால் பிரெஞ்ச் இந்திய பகுதியான புதுச்சேரி துறைமுகத்திற்கு மறுநாள் வந்து நின்றது. அப்போது அது பாண்டிச்சேரி. அதன் பிரமுகர்கள் பலர் படகுகளில் ஏறி, “ஈ.வெ.ராமசாமிக்கு ஜே.. ராமநாதனுக்கு ஜே” என்று முழக்கமிட்டபடி கப்பலை நோக்கி வந்தனர். Ambosie கப்பலில் இருந்த பெரியாரை சந்தித்த பாண்டிச்சேரி பிரமுகர்களில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் ஒருவர்.
கப்பலில் இருந்த அதிகாரிகளிடம் பெரியாரை அறிமுகப்படுத்தினார்கள். இத்தனை பேர் படகில் வந்து வரவேற்பதைப் பார்த்த அதிகாரிகளுக்கு பெரியாரின் தொண்டும் முக்கியத்துவமும் புரிந்துவிட்டது. நான்காவது வகுப்பு பிரயாணத்திற்குப் பதில் மூன்றாவது வகுப்புக்கு மாறலாமா என அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு, பாண்டிச்சேரி டாக்டர் ஒருவரின் ஆலோசனையின் பேரில், மருந்து மாத்திரைகளுடன் நான்காவது வகுப்பிலேயே தொடர்ந்து பயணித்தார் தனக்கான செலவுகளை எப்போதும் குறைத்துக் கொள்ளும் பெரியார்.
கப்பலில் வாரக்கணக்கில் பயணம் செய்தாக வேண்டும் என்பதால் ஈரோட்டில் குடிஅரசு பத்திரிகையை நாகம்மையார் பொறுப்பேற்று பார்த்துக் கொண்டார். இயக்கத்தினருக்கும் பத்திரிகை ஆபீசுக்கும் கடிதம் எழுதிப் போட்டுவிட்டால், அதன்பிறகு ஐரோப்பா கண்டத்தில் கரை சேரும் வரை வேலைகள் இடையூறு இல்லாமல் நடக்கும் என்பது பெரியாரின் கணக்கு. தகவல் தொடர்பில் தொய்வு இருக்கக்கூடாது என்பதில் பெரியார் கவனமாக இருப்பார்.
டிசம்பர் 16 அன்று இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நின்றது. கடிதம் எழுதிப் போடலாம் என்று நினைத்துதான் பெரியார் அந்தத் துறைமுகத்தில் இறங்கினார். “ராமசாமி.. அங்கே பாருங்க” என்றார் இராமநாதன். கொழும்பில் வணிகம் செய்யும் ஜனாப் பி.எம்.ஷாகுல் ஹமீது வந்திருந்தார். அவர் தனது காரில் இருவரையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய வியாபார ஸ்தலத்திற்குப் போனார். பெரியார் விரும்பியபடி கொழும்பில் உள்ள புத்த மதக் கோயில்களையும் காட்டினார். ஒரு தேநீர் விருந்தும் கொடுத்தார். அப்படியே வழியனுப்பு விழாவுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.

சுமார் 1500 பேர் கூடிய அந்த விழாவில் ஒரு மணி நேர அளவிற்கு சுயமரியாதை இயக்க கருத்துகள் பற்றி பெரியார் பேசினார். கொழும்பில் உள்ள இந்திய சுயமரியாதை சங்கத்தின் சார்பில் ஒரு பாராட்டுக் கூட்டமும் நடைபெற்றது. இந்த வைபவங்களுக்கிடையே கடிதங்களையும் எழுதி அஞ்சல் செய்துவிட்டு, கொழும்பு துறைமுகத்தில் Ambosie கப்பலில் மீண்டும் ஏறினார்கள் பெரியார் ஈ.வெ.ரா.வும் இராமநாதனும்.
நான்காம் வகுப்பு பயணம் என்பதால் தங்களுடைய மூட்டை முடிச்சுகளை ஏற்றி இறக்கி பயணிக்க வேண்டியிருந்தது. இடவசதியும் குறைவுதான். முதல் 3 நாட்கள் கப்பல் பயணம் பெரும் அவஸ்தையாக இருந்தது. அது பற்றி பெரியார், “நாங்கள் மூட்டைகளைவிட கேவலமாக நடத்தப்பட்டோம். ஆனாலும் 4வது நாள் ஒரு கீழ்த்தட்டில் சாமான்களை வைத்துக்கொள்ள கப்பல் கமிஷனர் அனுமதி கொடுத்தார்” என்று எழுதியிருக்கிறார்.
அந்தப் பகுதியில் பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்கள் இருந்தார்கள். ஆட்களைப் பார்த்ததும் பெரியாருக்கு உற்சாகம் வந்துவிட்டது. அதில் பிரான்ஸ் ராணுவத்தில் உள்ள இந்தியர்கள்-புதுச்சேரிக்காரர்கள் இருந்ததும் பேச்சு சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. அப்புறமென்ன, கப்பல் பயணத்திலும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் பெரியார்.
(சுற்றும்)
-கோவி. லெனின்