
காதும் காதும் வைத்தது மாதிரி பேசிப்பார்த்து பலனில்லை என்று ஆனதால் பொதுவெளியில் பேசினால்தான் பழனிசாமியை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் என்று செங்கோட்டையனிடம் பேசி இருக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.
சரி, பூனைக்கு யார்தான் மணி கட்டுவது? என்று இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. நானே மணியை கட்டி விடுகிறேன். நீங்கள் பின்னால் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுத்தான் பொதுவெளியில் பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார் செங்கோட்டையன்.
10 நாட்களுக்குள் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையை பழனிசாமி மேற்கொள்ளாவிட்டால் நான் அந்த நடவடிக்கையை மேற்கொள்வேன் என்று பேசிவிட்டு திரும்பிப்பார்த்தால், நீங்கள் பேசியதும் பின்னால் வந்துவிடுகிறேன் என்று சொன்ன சீனியர்கள் யாருமே வரவில்லை.

அப்படி சீனியர்கள் பலரும் வரிசையாக வந்து குரல் கொடுத்திருந்தால் பழனிசாமிக்கு ஆட்டம் கண்டிருக்கும். செங்கோட்டையனின் பொறுப்புகளை பறித்திருக்க மாட்டார். சொல்லி வைத்தது மாதிரி யாரும் குரல் கொடுக்காததால், கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் செங்கோட்டையனுக்கு வலு சேர்ந்து தான் வலு இழக்க நேரிடும் என்பதை உணர்ந்த பழனிசாமி, செங்கோட்டையனின் பதவிகளை பறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.
இதில் ஆடிப்போனவர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவாக வந்து நிற்கவில்லை. அவர்கள் எல்லோரும் வருவார்கள் என்ற தைரியத்தில்தான் பழனிசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என் ஒத்த கருத்துள்ளவர்களுடன் இணைந்து நானே நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்திருந்தார் செங்கோட்டையன்.
கட்சி பதவிகளை பறித்ததும் செங்கோட்டையனை உசுப்பேத்தி விட்டவர்கள் அவருடன் போனில் பேசி சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். இத்தனை நடந்தும் இன்னும் வெளியே வரத் தயங்கும் இவர்களை நம்பி பிரயோசனம் இல்லை என்பதை உணர்ந்த செங்கோட்டையன், முழுக்க நனைந்த பின் இனி முக்காடு போட்டுக்கொண்டு இருந்து பயனில்லை என்பதால் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார்.

யாருடனும் ஆலோசிக்காமல் தான் நினைப்பதுதான் கட்சி என்று இருக்கும் பழனிசாமியை கட்சியை விட்டே துரத்தியடிக்க முடிவெடுத்திருக்கிறார் செங்கோட்டையன் என்கிறது அவரது ஆதரவு வட்டாரம்.
கட்சி பதவிகளை பறித்ததால் மன அமைதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு யாருக்கும் அடங்காத பழனிசாமிக்கு டெல்லியில் மூக்கணாங்கயிறு திரிக்கும் வேலையில் இருக்கிறாராம் செங்கோட்டையன்.
ராமேஸ்வரத்தில் ரகசியமாக மோடியை சந்தித்தது போல் டெல்லியில் அமித்ஷா உள்ளிட்டோரை செங்கோட்டையன் சந்தித்து பேசி வரும் தகவல் அறிந்துதான் படு டென்ஷனில் உள்ளாராம் பழனிசாமி. அவரை குளிர்விக்கும் விதமாகத்தான் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சிலரை பழனிசாமி பக்கம் இழுத்து வரப்படுகிறார்கள் என்கிறது ஈரோடு அதிமுக வட்டாரம்.