அகமதாபாத்: ஆள் கடத்தல் என்கிற சந்தேகத்தின் பேரில் பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் இருந்த குஜராத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல ஏஜன்ட்களுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கொடுக்க ஒப்புக்கொண்டது தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 260 இந்தியர்கள் உட்பட 303 பயணிகளை ஏற்றிக்கொண்டு துபாயில் இருந்து நிக்கராகுவா நாட்டுக்கு செல்ல முயன்ற AIRBU A340 விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸில் தரையிறங்கியது. ஆள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 4 நாட்களுக்கு அந்த விமானத்தை சிறைப்பிடித்து பிரான்ஸ் அரசு விசாரணை செய்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணையில் ஒழுங்கற்ற நிலை இருப்பதாகக் கூறி விமானத்தை விடுவிக்க பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டிசம்பர் 26 அதிகாலை அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியது.
குஜராத்தில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிஐடி-குற்றம் மற்றும் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் காரத் கூறுகையில், விமானத்தில் பயணித்த சில சிறார்கள் உட்பட 66 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், முக்கியமாக மெஹ்சானா, அகமதாபாத், காந்திநகர் மற்றும் ஆனந்த் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அவர்களில் 55 பேரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்ததில் அவர்களில் பெரும்பாலோர் 8 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்பதும் ஒவ்வொருவரும் உள்ளூர் ஏஜன்ட்களிடம் ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணம் கொடுக்க ஒப்புக்கொண்டதும் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
துபாய் வழியாக தென் அமெரிக்காவின் நிக்கராகுவா நாட்டை அடைந்த பிறகு சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய திட்டமிட்டு இருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய இந்த 55 நபர்களுக்கு உதவுவதாக உறுதியளித்த கிட்டத்தட்ட 15 ஏஜன்ட்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களை மாநில சிஐடி இதுவரை பெற்றுள்ளது. அமெரிக்கா சென்ற பின்னரே பணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஏஜன்ட்கள் 55 பயணிகளிடம் கூறியுள்ளனர்.
மேலும், தங்கள் ஆட்கள் நிகரகுவாவில் இருந்து அமெரிக்க எல்லைக்கு அழைத்துச் செல்ல உதவுவார்கள் என்றும், பின்னர் எல்லையை கடக்க உதவுவார்கள் என்றும் ஏஜன்ட்கள் கூறியுள்ளனர். இந்த பயணிகளுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததோடு, அவசரகால சூழ்நிலையை சமாளிக்க ஒவ்வொரு பயணிக்கும் 1,000 முதல் 3,000 அமெரிக்க டாலர்களை ஏஜன்ட்கள் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏஜன்ட்கள் வகுத்த திட்டத்தின்படி, இந்த 66 பயணிகளும் டிசம்பர் 10 முதல் 20 வரை அகமதாபாத், மும்பை மற்றும் டெல்லியில் இருந்து துபாய் சென்றடைந்தனர். ஏஜன்ட்களின் வழிகாட்டுதலின்படி, இந்த பயணிகள் புஜைரா சர்வதேச விமான நிலையத்தில், நிக்கராகுவா செல்ல இருந்த ரோமானிய நாட்டைச் சேர்ந்த விமானத்தில் டிசம்பர் 1ஆம் தேதி ஏறினர்.
இந்த பயணிகளின் துபாய் விசாவை ஏஜன்ட்கள் எப்படி பெற்றனர், பயணிகளின் விசா கட்டணத்தைச் செலுத்திய ஏஜன்ட்களின் வங்கி விவரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்க உதவுமாறு குஜராத் சிஐடி மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) கடிதம் எழுதியுள்ளது.
மேலும், ஏஜன்ட்கள் துபாயிலிருந்து நிகரகுவாவின் விசாவை எப்படிப் பெற்றனர் மற்றும் துபாயிலிருந்து விமானத்தை முன்பதிவு செய்து பயணிகளின் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தியவர்கள் யார் என்பது குறித்தும் குஜராத் சிஐடி கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறது.