
அமெரிக்காவின் டெனோசி மாநிலம். 1931 மார்ச் 25ஆம் நாள். அந்த ரயிலில் வெள்ளைக்காரர்களும் கருப்பினத்தவர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“இவனுங்க அட்ராசிட்டி எல்லா இடத்திலும் அதிகமாயிடிச்சி ஜான்” என்றான் ஒரு வெள்ளைக்கார இளைஞன்.
“அடிமையா வந்தவனுங்க சலுகை கேட்குறானுங்க. உரிமை கேட்குறானுங்க. சரிக்கு சமமா எல்லா இடத்துக்கும் வரானுங்க.”
வெள்ளை இளைஞர்களின் பேச்சும் அதைத் தொடர்ந்து அவர்களின் சீண்டல்களும் கருப்பின இளைஞர்களைக் கோபப்படுத்தியது.
“ரயில் உங்களோடதில்ல.. நாங்களும் டிக்கெட் எடுத்துட்டுத்தான் வரோம்” -கருப்பின இளைஞன் ஒருவனின் பதிலை வெள்ளை இளைஞர்கள் எதிர்பார்க்கவில்லை.
“ரயில் உன்னோடதில்ல.. ஆனா, நாடு எங்களோடது…”
“அமெரிக்கா யாருக்கும் சொந்த நாடு கிடையாது. நாங்க ஆப்பிரிக்காவிலிருந்து வந்தது போல, நீங்க ஐரோப்பாவிலிருந்து வந்தவங்கதான்”
“அடிமை நாயே.. என்னடா வாய் நீளுது?”- கேட்டபடியே வெள்ளைக்கார இளைஞர்கள் கருப்பின இளைஞர்கள் மீது பாய்ந்தார்கள். இரு தரப்புக்கும் கடுமையான சண்டை.
“இது எங்க ரயில். கருப்பனுங்களுக்கு இடமில்லை” என்றபடி ஹேவுட் பேட்டர்சன் என்ற கருப்பின இளைஞரை கீழே தள்ள முயன்றார்கள். அதுபோல மற்ற எட்டு கருப்பின இளைஞர்களையும் கீழே தள்ள முயற்சித்தபோது, உடல் வலிவுகொண்ட கருப்பு இளைஞர்கள் அதை அநாயசமாக எதிர்கொண்டனர். இப்போது வெள்ளை இளைஞர்கள் அவர்கள் பிடியில் இருந்தனர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை மற்ற பயணிகள் பார்த்தனர். சிலர் விழுவதும், சிலர் குதிப்பதுமாக இருந்தது.
அலபமா மாநிலத்தின் பெயின்ட் ராக் என்ற இடம். அங்கிருந்த காவல் அதிகாரியிடம் வெள்ளை இளைஞர்கள் தங்களை கருப்பின இளைஞர்கள் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகப் புகார் தெரிவித்தனர். அதையடுத்து, அடுத்த நிலையத்தில் ரயிலை நிறுத்திய போலீஸ், கருப்பின இளைஞர்களைத் தேடியது. 9 இளைஞர்களைக் கைது செய்தது. அடிதடி வழக்கு, ரயிலில் இருந்து வெள்ளையர்களை கீழே தள்ளிவிட்ட வழக்கு என்பதைத்தாண்டி மற்றொரு கொடூர வழக்கு அந்த இளைஞர்கள் மீது பாய்ந்தது.
அந்த ரயிலில், ஆண்களைப் போல வேடமணிந்திருந்த விக்டோரியா பிரைஸ், ரூபி பேட்ஸ் என்ற இரண்டு வெள்ளைக்காரப் பெண்களை அந்த 9 இளைஞர்களும் வன்புணர்வு செய்தனர் என்பதுதான் அதிரடிக் குற்றச்சாட்டு. அதுதான் முதன்மையான வழக்கு. இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 9 பேரில் 4 பேர் மட்டுமே முன்பின் அறிந்தவர்கள். மற்றவர்கள் ரயில் பயணத்தில் அறிமுகமானவர்கள்.
ஸ்காட்ஸ்பரோ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியதால், ‘ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ்‘ வழக்கு என்று பரபரப்பானது. அமெரிக்காவின் அலபமா மாநிலத்தில் சட்டமும் நீதியும் நிற வேறுபாடுகளுடன் இருந்த காலம் அது. கருப்பினத்தவர்கள் மீதான குற்றங்களில் அவர்களுக்கு சாதகமாக வாதாடுவதற்கு வக்கீல் கிடைப்பதே பெரும்பாடு. அதுவும், வெள்ளைக்காரப் பெண்களை கருப்பினத்தவர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கினால் மரணதண்டனை நிச்சயம் என்கிற நிலையில், அந்த 9 இளைஞர்களுக்கும் சட்ட உதவி கிடைக்கவில்லை. 9 பேரில் 13 வயது இளைஞனைத் தவிர மற்ற 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் குற்றச்சாட்டை நிரூபிக்கும் மருத்துவ பரிசோதனைகள் கிடையாது. ரயில் பயணத்தில் நடந்தது தொடர்பாக சாட்சிகள் கிடையாது. சட்டத்தின் சாதகங்களை எடுத்துரைக்க சரியான வழக்கறிஞர்கள் கிடையாது. மரண தண்டனை தீர்ப்பு மட்டும் விரைவாக அளிக்கப்பட்ட நிலையில், அந்த 9 கருப்பின இளைஞர்களின் நீதிக்காக களமிறங்கினார்கள் அமெரிக்க கம்யூனிஸ்ட்டுகள். அவர்களுடன் கருப்பின உரிமைக்கான அமைப்புகளும் இணைந்தன. நியாயமான விசாரணைக்கும், உண்மையான நீதிக்குமான சட்டப் போராட்டங்களும், மக்கள் ஆதரவைத் திரட்டும் போராட்டங்களும், உலக நாடுகளின் கவனங்களை ஈர்க்கும் செயல்பாடுகளும் தொடங்கின.
9 கருப்பின இளைஞர்களில் ஆன்டி ரைட், ராய் ரைட் இருவரும் சகோதரர்கள். அவர்களின் விதவைத் தாய் அடா ரைட்டை கம்யூனிஸ்ட்டுகள் சந்தித்தார்கள். சட்டப் போராட்டக் களத்தில் துணை நிற்க வேண்டினர். தன்னுடைய பாட்டி ஒரு வீட்டில் அடிமையாக வேலை செய்ததை சிறுவயதில் கவனித்தவர் அடா. தன் மகன்களுடன் தண்டிக்கப்பட்ட மற்ற இளைஞர்களையும் மகன்களாகக் கருதி களத்தில் இறங்கினார். உலகளாவிய ஆதரவைத் திரட்டுவதற்காக 1932 கோடையில் ஐரோப்பாவுக்கு வந்தார் அடா ரைட். அந்த கோடைக் காலத்தில்தான் பெரியாரும் ஐரோப்பாவில் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இங்கிலாந்தில் பெரியாருக்குத் துணையாக இருந்த கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சக்லத்வாலாவும், நிறுவன உறுப்பினர் கிளமன்ஸ் தத்தும் அடா ரைட் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவது குறித்து தங்களின் கம்யூனிஸ்ட் கட்சி நாளேடான Daily Worker இதழில் முன்கூட்டியே அறிவிப்பினை வெளியிட்டிருந்தனர். இங்கிலாந்து போலீஸின் கடுமையான கெடுபிடிகளுக்கிடையே பாரீசிலிருந்து இலண்டனுக்கு அதா ரைட் வந்த 1932 ஜூன் 28 அன்று கிளர்க்கென்வெல் அரங்கில் , ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ் பக்கம் ஒன்றுபட்டு நின்று நீதியை நிலைநாட்டுவது தொடர்பான கூட்டம் நடந்தது.
நிகழ்வை ஒருங்கிணைத்த சக்லத்வாலாவின் நண்பராக பெரியார் அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்தார். அடா ரைட் மேடைக்கு வந்தபோது அவருக்கு பாதுகாப்பாக கருப்பினத்தவர்களுடன் இந்தியத் தொழிலாளர்களும் இருந்தனர். திரண்டிருந்த கூட்டம் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றது. விடுதலைப் பாடலை பாடியது. ஒரு தாயின் மனதிலிருந்து வெளிப்படும் குரலாக அதாவின் பேச்சு இருந்தது.
எளிமையும் போராட்டமுமான தன்னுடைய குடும்ப வாழ்க்கை, ஓரளவாவது நிம்மதி கிடைக்கும் என்று வேலை தேடிச் சென்ற தன்னுடைய இரண்டு மகன்கள், எதிர்பாராத வழக்கு, சிறையில் படும் அவஸ்தை, மின்சார நாற்காலியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் கொடூரம் எல்லாவற்றையும் மென்மையான குரலில் சொல்லிவிட்டு, “என்னுடைய இரண்டு மகன்களையும் மற்ற இளைஞர்களையும் விடுதலை செய்ய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஸ்காட்ஸ்பரோ பையன்களுக்காக நீங்கள் போராடுவது உலக நாடுகள் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டமாகும்” என்றார்.
சக்லத்வாலா பேசும்போது, ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ்போல இந்தியாவில் பலர் துன்பப்படுகிறார்கள் என்பதை நினைவுபடுத்தினார். பெரியார் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டார். தொழிற்சங்கங்கள் மூலமாக இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்த நடைமுறை சாத்தியங்களை விளக்கிப் பேசிய பன்னாட்டு தொழிலாளர்களுக்கான நிவாரண அமைப்பின் இசபெல் பிரவுன் உரை பெரியாரை அதிகம் ஈர்த்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப குழு அமைக்கப்பட்டது.
ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ் விடுதலை கூட்டத்துக்கு தலைமை வகித்த லண்டன் கடல் பணியாளர் அமைப்பின் ஜிம் ஹெட்லி, விடுதலைப் போராட்டத்திற்கான நன்கொடை வழங்குமாறு கூட்டத்தினரிடம் கோரிக்கை வைத்தார். பல பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அந்தத் தொகை நன்கொடையாக சேர்க்கப்பட்டது. ஒரு ஜெர்மன் வெள்ளிச் சங்கிலியை அரை பவுண்டுக்கு ஏலம் எடுத்தார் பெரியார். கருப்பின இளைஞர்களின் விடுதலைக்கானத் தன் பங்களிப்பை செலுத்தினார்.
ஒடுக்குமுறைக்கு எதிரான உலக முற்போக்கு இயக்கங்களின் போராட்டங்களை நேரில் கண்ட பெரியாரின் மனதில், “இதைத்தான் நாங்கள் சுயமரியாதை என்கிறோம். அதற்காகத்தான் இயக்கத்தை நடத்துகிறோம்” என்று தோன்றியது.
(இந்த விவரங்களை ஆய்வாளர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி பல நூல்களை மேற்கோள் காட்டி கட்டுரையாக எழுதியுள்ளார். 1960ல் வெளியான To kill a mocking bird என்ற புகழ்பெற்ற நாவல் இந்த ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ் வழக்கின் தாக்கத்தில் உருவானது என்பதையும் குறிப்பிடுகிறார்)
ஸ்காட்ஸ்பரோ பாய்ஸ் வழக்கு, பல கட்ட விசாரணைகளைக் கடந்தது. பாலியல் புகார் சொன்ன இரண்டு வெள்ளைக்காரப் பெண்களும் அப்பட்டமாக பொய் சொல்லியிருப்பதும், அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. கருப்பின இளைஞர்கள் யாரும் மரண தண்டனையை எதிர்கொள்ளவில்லை என்றாலும், நீண்டகாலம் நீடித்த விசாரணை, சிறைத் தண்டனை இவற்றால் அவர்கள் தங்கள் வாழ்வின் வசந்த காலத்தையே இழந்தனர்.
(சுற்றும்)
-கோவி. லெனின்