
மக்களாலேயே மக்களின் வழக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழு. அதுதான் சோவியத் யூனியனில் முதல் கட்ட நீதி வழங்குவதற்கான கொலீஜியம். நீதிபதி, மதிப்பீட்டாளர் உள்ளிட்டவர்கள் அந்தக் கொலீஜியத்தில் இருந்தார்கள். சிவில் கேஸ், கிரிமினல் கேஸ் எதுவாக இருந்தாலும் அதை மக்கள் நீதிமன்றம் விசாரித்தது.
புகார் கொடுத்தவர் தன் தரப்பு நியாயங்களை முன்வைப்பதை பெரியார் கவனித்தார். ஊர்ப் பெரியவரிடம் நம்பிக்கையுடன் உண்மையைச் சொல்லும் கிராமத்து மக்கள் போல அந்தக் காட்சி இருந்தது. யார் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தோ அவர் விசாரிக்கப்பட்டார். அவர், தன் தரப்பு நியாயங்களை அடுக்கினார். புகார் தந்தவர் சில ஆதாரங்களைத் தந்தார் நீதிபதிகளின் கொலீஜியம் அதை சரிபார்த்தது. புகாரை மறுத்தவரும் தன் பக்கமுள்ள ஆவணங்களைக் கொடுத்தார். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, நியாயத் தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினார்கள்.
புகார் கொடுத்தவரும், புகாருக்குள்ளானவரும் கைக் கொடுத்தார்கள். மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு இருதரப்பாலும் ஏற்கப்பட்டிருந்தது. கை கொடுக்காமல் திசைக்கு ஒருவராகத் திரும்பிச் சென்றிருந்தால், தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்று அர்த்தம். அடுத்தகட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். வழக்கு மன்றங்களில் நிறைய வழக்குகள் தேங்கக்கூடாது என்பதற்காகவும், உள்ளூர் அளவிலான சிக்கல்களை அங்கேயே முடிந்தளவு தீர்த்துவிட வேண்டும் என்பதற்காகவும் மக்கள் நீதிமன்றங்களை உருவாக்கியிருந்தது சோவியத் யூனியன் கம்யூனிச அரசு.

கூட்டுறவு அமைப்புகள் ரஷ்யாவிலும் மற்ற பகுதிகளிலும் வலுவான கட்டமைப்புடன் இருப்பதைப் பெரியார் பார்த்தார். மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றித் தருகிறது. அதற்கேற்ப கூட்டுறவு அமைப்புகள் செயல்பட்டு வந்தன. சோவியத் யூனியன் என்பதே ஒரு கூட்டுறவு அமைப்பிலான நாடுகளின் ஒன்றியம்தான். அங்கே கம்யூனிச அரசாங்கம் மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது மனிதர்களின் தனிப்பட்ட அம்சமாக மட்டுமே இருந்தது. கல்வி நிலையங்களுக்கு முன்னுரிமை வழஙகப்பட்டது. மருத்துவ சிகிச்சை முறையில் புதிய ஆராய்ச்சிகளை ரஷ்ய டாக்டர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆய்வுகளை அரசாங்கம் அங்கீகரித்த பிறகு அது மக்களுக்கான மருத்துவமாக மாறியது.
நிலங்கள் அரசாங்கத்தின் சொத்தாக இருந்தால் கூட்டுறவு முறையில் பண்ணை விவசாயம் நடந்து கொண்டிருந்தது. மக்களின் தேவைக்கேற்ற அளவில் உணவு உற்பத்தி செய்யப்பட்டு, சீராக வழங்கப்பட்டது. தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்கிற நிலை ரஷ்யாவில் இல்லை. போக்குவரத்து வசதிகள் தாராளமாகவும் விரைவாகவும் இருந்தன. எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சிகள் வரை அப்போதே சோவியத் யூனியன் வானியல் விஞ்ஞானிகள் தொடங்கியிருப்பதையும் பற்றிக் கேள்விப்பட்ட போது பெரியாருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மாதக்கணக்கில் கப்பலில் பயணம் செய்து இதுபோன்ற நாடுகளுக்கு வரக்கூடிய நிலையில் மனிதர்கள் இருப்பதையும், அந்த நிலையை மாற்றி, வானில் விரைந்து பயணிக்கும் முயற்சிகளையும், அத்தகைய அறிவியல் ஆய்வுகளின் பலன்களை மக்களுக்கு வழங்குவதையும் ஆட்சி நிர்வாகத்தின் திறனாகப் பார்த்தார்.
பெரியார், தான் விரும்புகிற சமுதாய அமைப்பில் ஏறத்தாழ 75% அளவுக்கு சோவியத் யூனியனில் பார்த்தார். அவர் விரும்பாத சில பகுதிகளையும் பார்க்க நேர்ந்தது. லெஃபோர்டோவா என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை இருந்தது. கம்யூனிச நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கான இடம் மிகவும் குறைவு. அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவிக்க முடியும். விமர்சிக்க முடியாது. மாற்றுச் சிந்தனைகளை திரிபுவாதமாகவும் எதிர்ப் புரட்சியாகவும் கருதியது புரட்சியால் உருவாகியிருந்த சோவியத் யூனியன் அரசு. கம்யூனிச சித்தாந்தத்தில் விலகி நிற்பதாக அரசால் கருதப்பட்டவர்கள்- குற்றம்சாட்டப்பட்டவர்கள் லெஃபர்டோவா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
பிப்ரவரி நடுவில் சோவியத் யூனியனுக்கு வந்த பெரியார் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல இடங்களையும் பார்த்து முடித்திருந்தார். ஏப்ரல் இறுதி வாரத்தில் மாஸ்கோவும் மற்ற நகரங்களும் விழாக் கோலமாக இருந்தன. செவ்வண்ணம் எங்கெங்கும் நிறைந்திருந்தது. “மே தினக் கொண்டாட்டங்களுக்கு எங்க அரசாங்கமும் மக்களும் ரெடியாயிட்டாங்க. பத்து நாள் இனி ஒரே கொண்டாட்டம்தான்” என்று பெரியாரிடம் நாத்திக சங்கத்தினர் தெரிவித்தனர். பெரியாரும் இராமநாதனும் முறைப்படி பதிவு செய்திருந்ததால், மே தின கொண்டாட்டங்களுக்கு சிறப்பு விருந்தினரக அழைக்கப்பட்டிருந்தனர்.
சோவியத் யூனியன் உருவானதிலிருந்து பிரிட்டிஷ் இந்தியா சார்பில் யாரும் மேதின விழாவுக்கு விருந்தினராக அனுப்பி வைக்கப்பட்டதில்லை. ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் வருவது வழக்கமாக இருந்தது. மே தின கொண்டாட்டத்தின்போது மாஸ்கோவில் இருந்த இந்தியப் பயணிகளான பெரியாரும் இராமநாதனும் சிறப்பு விருந்தினர்களாகக் கௌரவிக்கப்பட்டனர்.
தலைநகரமான மாஸ்கோ குலுங்கிட மேதினப் பேரணி அணிவகுத்தது. ஜார் மன்னர் காலத்து ரஷ்யாவில் நடந்த கொடூரங்கள், அப்போது தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள், முதலாளிகளின் ஆதிக்கம், லெனின் தலைமையில் நடந்த அக்டோபர்-நவம்பர் மாதப் புரட்சி, சோவியத் யூனியன் அமைந்தபிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் இவையனைத்தும் ஊர்வலப் பாதையெங்கும் காட்சிகளான நடித்துக்காட்டப்பட்டன.
‘ராமநாதன்.. நம்ம ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவுல தீச்சட்டி எடுககிறது, கூழு ஊத்துறது, வேஷம் கட்டி ஆடுறதுன்னு இருக்கும்ல. அதுக்குப் பதிலா ரஷ்யாவுல அவங்க வரலாற்ற வேஷம் கட்டி சொல்றாங்க” என்றார் பெரியார்.
அப்போது, “காம்ரேட் ஈ.வி.ராமசாமி, காம்ரேட் ராமநாதன் ” என்று அறிவிப்பு வெளியானது. “இருவரும் இந்தியாவிலிருந்து நம்முடைய மேதின விழாவுக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள்” என்று அறிவிக்கப்பட்டது. அருகிலிருந்து நாத்திக சங்கத்தினர், “உங்களைத்தான் கௌரவப்படுத்துறாங்க. கையை அசைத்துக் காட்டுங்க” என்றதும் பெரியாரும் இராமநாதனும் கையசைத்து தங்கள் இருப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
மே தினப் பேரணியை ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினும் கம்யூனிஸ்ட் அரசின் நிர்வாகிகளும் மேடையில் இருந்து பார்த்தனர். ஸ்டாலினை தூரத்திலிருந்து பார்த்தார் பெரியார்.
“அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?”- நாத்திக சங்கத்தினரிடம் பெரியார் கேட்டார்.
(சுற்றும்)
-கோவி. லெனின்