
கிரெம்ளின் என்பது அப்போது சோவியத் அரசின் தலைமைச் செயலகமாக இருந்தது. கிரெம்ளின் என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் அரண்மனைக் கோட்டை என்று அர்த்தம். ஜார் மன்னர்கள் ஆட்சி செய்தது மாஸ்கோவில் இருந்த இந்த அரண்மனையிலிருந்துதான். ரஷ்ய கட்டடக் கலையும் இத்தாலியக் கட்டடக் கலையும் இணைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான கட்டட அமைப்பு கிரெம்ளின். ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த அரச குடும்பத்தினருக்கேற்ற பிரம்மாண்ட அறைகள், உல்லாச பொழுதுபோக்கு இடங்கள், நினைவுச் சின்னங்கள், தேவாலயங்கள் எனப் பலவும் அரண்மனைக் கோட்டைக்குள் இருந்தன. அதுவே ஒரு தனி உலகமாக இயங்கிக் கொண்டிருந்தது.
லெனின் தலைமையில் நடந்த புரட்சியின் உச்சகட்டமாக கிரெம்ளின், கம்யூனிஸ்ட்டுகள் (போல்ஷ்விக்) வசம் வந்தது. அதன்பின், கிரெம்ளின் என்பது மக்களுக்கானத் திட்டங்களைத் தீட்டும் தலைமை அலுவலகமானது. தேவையற்ற கட்டடங்கள்-நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட்டன. பல கட்டடங்கள் மருத்துவமனைகளாக, கல்வி நிலையங்களாக மாறின. கிரெம்ளினில் லெனினும் அவரைத் தொடர்ந்து ரஷ்ய அதிபரான ஸ்டாலினும் தங்கள் அலுவலகப் பணிக்கான இடங்களைத் தேர்வு செய்து பயன்படுத்தி வந்தனர். இப்போதும் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது மாஸ்கோ கிரெம்ளின்.
அங்குதான் 1932 மே தின விழாவையொட்டிய வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான வரவேற்பு விருந்துக்கு பெரியாரும் இராமநாதனும் இந்தியப் பிரதிநிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். பழைய போல்ஷ்விக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்தில் பெரியார் கலந்து கொண்டார். சோவியத் புரட்சி பற்றியும், புரட்சிக்குப் பிறகான சோவியத் யூனியன் பற்றியும், இந்தியாவின் சமூக நிலை குறித்தும் அங்கிருந்தவர்களுடன் பெரியார் கலந்துரையாடினார். சோவியத் பிரதமர் காலினின் அங்கு வந்தார். அவரிடம் பெரியாரை அறிமுகப்படுத்தி வைத்தனர். இருவரும் கைக்குலுக்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். மாஸ்கோவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர் அபானி முகர்ஜியையும் பெரியார் சந்தித்தார்.

சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்கு பெரியார் விருப்பம் தெரிவித்திருந்தாலும் அது நிறைவேறவில்லை. அவருக்காக முயற்சி செய்த நண்பர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். அரசின் கெடுபிடி நிலவரங்கள் பற்றியும் தெரிவித்தனர்.
“அதனால் என்னங்க.. ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவில் நான் பார்க்க வேண்டியதையெல்லாம் பார்த்துட்டேன். இப்படி ஒரு நாடு எங்களுக்கு அமையணும்ங்கிறதுதான் என் விருப்பம். நாங்க இன்னும் அதுக்கு பல வருசங்கள் போராடணும். எங்க மக்களுக்கு கல்வியைக் கொடுக்கணும். சாதி ஏற்றத்தாழ்வை ஒழிக்கணும். மூடநம்பிக்கைகளிலிருந்து அவங்கள் மீட்கணும். பெண்களுக்கு உரிமைகளைத் தரணும். இதெல்லாம் நிச்சயம் எங்க மண்ணிலும் எதிர்காலத்தில் நடக்கும்னு நம்புறேன்” என்றார் சுயமரியாதை இயக்கத் தலைவரான பெரியார்.
அவர் நம்பியது போலவே, இங்கும் ஒரு ஸ்டாலின் தலைமையில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற இன்றைய திராவிட மாடல் அரசும், அதற்கு 1967ல் அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணாவும், அவரைத் தொடர்ந்து அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டு அரசியலை நகர்த்தி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த முத்தமிழறிஞர் கலைஞரும் இருக்கிறார்கள். ரஷ்யாவில் பெரியார் பார்த்ததும் விரும்பியதும்போலவே, மருத்துவமனை வசதிகள், உயர்கல்வி வசதிகள், அறிவியல் முன்னேற்றங்கள், போக்குவரத்து வசதிகள், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் இன்று இந்தியாவிலேயே சிறப்பாக உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதும், திராவிட மாடல் ஆட்சியை பெரியாரின் ஆட்சி என்று முதலமைச்சர்கள் சொல்வதுமே பெரியாரின் சோவியத் யூனியன் பயணத்தின் வெற்றியாகும்.
1932 மே 17 அன்று மாஸ்கோவிலிருந்து பெர்லினுக்குப் பெரியார் புறப்பட்டார் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி. அதன்பிறகுதான் நாம் ஏற்கனவே விளக்கியிருந்த ஜெர்மனி, ஸ்பெய்ன், இங்கிலாந்து நாடுகளுக்கான பெரியாரின் பயணங்கள் தொடர்ந்தன. தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலில் புறப்பட்டார் பெரியார். அவருடன் இராமநாதன் வரவில்லை. அவர் மேலும் சில காலம் ஐரோப்பாவில் தங்கியிருக்க விரும்பிவிட்டார்.
தன் உறவினரான உதவியாளருடன் பெரியார் இலங்கையை நோக்கி ஜப்பான் நாட்டின் ஹரூனாமாரு என்ற கப்பலில் பயணத்தை மேற்கொண்டார். ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு பெரியார் இலங்கைக்கு வருவதை அறிந்த அங்குள்ள சுயமரியாதை இயக்கத்தினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். 1931 டிசம்பரில் சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பெரியார் எட்டு மாதங்களுக்குப் பிறகு 1932 அக்டோபரில் ஐரோப்பாவிலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடைய குடிஅரசு பத்திரிகைப் பணிகளை முழுமையாகக் கவனித்து வந்தவர் நாகம்மையார். அவருடன் பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் குடிஅரசு ஏட்டின் வளர்ச்சிக்கும் சுயமரியாதை இயக்கத்தின் பணிகளுக்கும் துணையாக நின்றார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சாமி சிதம்பரனார் போன்றோர் குடிஅரசு இதழில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தனர்.
பெரியார் இலங்கைக்கு வருவதையறிந்ததும் நாகம்மையாரும் மாயவரம் சி.நடராசனும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டனர். ஐரோப்பாவிலிருந்து புறப்பட்ட ஹரூனாமாரு கப்பல் 1932 அக்டோபர் 17 அன்று இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வந்து சேர்ந்தது. துறைமுகத்திலிருந்து தூரத்திலேயே கப்பலைப் பார்த்த நாகம்மையார், மாயவரம் நடரசான், அ.இராகவன், கொழும்பு நகரத்தின் பிரபல வியாபாரி ஹமீது, கொழும்பு இந்திய சுயமரியாதை சங்கத் தலைவர் ஆறுமுகம், ஆதிதிராவிட அமைப்பினர், இளைஞர்கள் பலரும் ஸ்டீம் போட்களில் நேரே கப்பல் அருகே சென்று, பெரியாரை வரவேற்றனர். துறைமுகத்தைக் கடந்து வெளியே வந்தபோது மக்கள் கூட்டமாக நின்று பெரியாரையும் நாகம்மையாரையும் மாலை அணிவித்து வரவேற்றனர்.
அரசாங்க உறுப்பினர்கள் பெரியாரை சந்தித்தனர். சிலோன் டெய்லி நியூஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் பேட்டி எடுத்தன. கொழும்பிலும் பிற பகுதிகளிலும் பெரியாரை வரவேற்கும் வகையில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகியிருந்தன. பெர்ஷியன் ஹோட்டலில் சாரனாதன் என்பவரும் அவரது தோழர்களும் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தொழில் மந்திரி பெரி.சுந்தரம், “திரு.இராமசாமியை எனக்கு பல வருஷங்களாகவே தெரியும். அவருடைய இயக்கத்தின் பணி இங்குள்ள ஏழைகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் மிகுந்த பயன் தரும்’‘ என்றார்.
கொழும்பு கெயிட்டி தியேட்டரில் பெரியாருக்காக ஒரு படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியேட்டர் உரிமையாளர் பெரியார் வருகையை மிகவும் எதிர்பார்த்தார். பெரும் கூட்டம் அங்கே திரண்டிருந்தது. பெரியார் வந்தார்.
(சுற்றும்)