
திராவிட மாதம் எனப்படும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா நடத்துவது தி.மு.க.வின் வழக்கம். பெரியார்-அண்ணா- தி.மு.க. மூன்றும் பிறந்தது செப்டம்பர் மாதம்தான் என்பதாலும் திராவிட இயக்க ஆட்சியில் பல திட்டங்கள், சட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்ட மாதம் என்பதாலும் செப்டம்பரை திராவிட மாதம் என்கின்றனர். அதில் முப்பெரும் விழா தனிச் சிறப்பு. செப்டம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாள் விழாவாக கலைஞர் மு.கருணாநிதி காலத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் ஒரு நாள் விழாவாகக் கடைப்பிடிக்கப்பட்டு, தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்குவது முப்பெரும் விழாவின் முத்தாய்ப்பு.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் முப்பெரும் விழாவை சென்னைக்கு வெளியே நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. இந்த 2025ல் கரூரில் நடத்தப்பட்டுள்ளது. தி.மு.கவின் முதல் பொதுக்கூட்டம் அண்ணா தலைமையில் 1949 செப்டம்பரில் ராபின்சன் பூங்காவில் நடைபெற்றபோது எப்படி மழைக்கிடையே நடந்ததோ, அதுபோலவே 75 ஆண்டுகள் கழித்து 2025 செப்டம்பரில் கரூரில் முப்பெரும் விழா மழைக்கிடையே நடந்து முடிந்துள்ளது. அப்போது போலவே இப்போதும் தி.மு.க தொண்டர்கள் மழையில் நனைந்தபடி கூட்டத்தில் பங்கேற்றதுதான் தி.மு.க.வின் வலிமை.

75 ஆண்டுகால வரலாற்றில் 25 ஆண்டுகள்தான் ஆட்சியில் இருந்துள்ளது தி.மு.க. அது பல நேரங்களில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், கட்டுக்கோப்பான இயக்கமாக இருப்பதற்கு காரணம் அதன் தொண்டர்கள். அண்ணா, கலைஞர், ஸ்டாலின் என தி.மு.க. மூன்று தலைமையைக் கண்டுள்ளது. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்ற அண்ணாவுடன் பழகிய அரசியல் தலைவர்கள் தி.மு.க.வின் பொதுச்செயலாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கழகத் தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதில் தி.மு.க. தொண்டர்கள் சளைத்தவர்களல்ல.
மிசா, தடா போன்ற கொடூர சட்டங்களின் கீழ் சிறைவாசம், சிறை நிரப்பும் போராட்டம், சட்ட எரிப்பு போராட்டம், நீதி கேட்டு நெடும்பயணம் எனப் பலவகை போராட்டங்களை எதிர்கொண்டவர்கள். இன்றைய அரசியலில் சிறைக்குப் போக வேண்டிய அவசியமில்லை. காலையில் கைது செய்தால், மண்டபத்தில் கொண்டு போய்வைத்து, மதியம் பிரியாணி கொடுத்து, மாலையில் போலீசார் அனுப்பி விடுவார்கள். அதற்கே பழைய-புதிய கட்சியினர் தெறித்து ஓடும் நிலையில், தி.மு.க தொண்டர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுங்கட்சியினர் என்பதை மறந்து எதிர்க்கட்சியினர் போல இடைவிடாமல் களச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க வெற்றிபெற்றே ஆகவேண்டும் என உயிரைக் கொடுத்து உழைத்தவர்கள் தொண்டர்கள். அவர்கள் விரும்பியபடியே, தி.மு.க. அரசு ஆறாவது முறையாக ஆட்சியமைத்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்கிற இலக்கை நிர்ணயித்தது தி.மு.க .தலைமை. இதெல்லாம் நடக்குமா என்று பலரும் யோசித்த நிலையில், என் தொகுதியில், என் வார்டில், என் பூத்தில் தி.மு.க.கூட்டணியை ஜெயிக்க வைப்பேன் என தொண்டர்கள் சளைக்காமல் செயல்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக சொன்னபடி 40க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
அண்மையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற செயல்திட்டத்தின்படி, வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து அவர்களை தி.மு.கவுக்கு ஆதரவான வாக்காளர்களாக உறுதி செய்யும் பெரும்பணியை தமிழ்நாட்டில் உள்ள 68ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில் தி.மு.க. தொண்டர்கள் மேற்கொண்டனர். இதற்கென மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலி வடிவமைக்கப்பட்டு, அதில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகள் கழித்து, ஆளுங்கட்சி வீடுவீடாக செல்வது என்பது ரிஸ்க்கான டாஸ்க். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களால் கிடைத்துள்ள பயன்கள்தான், மக்களிடம் கட்சியினரை எளிதாகவும் எதிர்ப்பின்றியும் கொண்டு சென்றது.
இப்போது அடுத்தகட்டமாக பூத்கமிட்டிகள், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கவனம் செலுத்துதல் என தி.மு.க தலைமை 2026 தேர்தலுக்கான பணிகளைத் தொண்டர்களிடம் ஒப்படைத்துள்ளது. தொண்டர்கள் உழைப்பதற்குத் தயங்குவதில்லை. அதே நேரத்தில் அவர்களுக்கென்று தலைமையிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அவை நிறைவேறுதில் மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர் அளவில் குறுக்கீடுகள் உள்ளன. தேர்தலுக்கு முன்பு தலைமை சரிசெய்யயும் என்பதுதான் கரூரில் கொட்டும் மழையில் தலைவருக்காக நின்ற தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கை.