
இலங்கைத் தலைநகர் கொழும்பில், கெயிட்டி தியேட்டரில் படம் பார்க்க பெரியார் வருகிறார் என்றதுமே அங்கே கூட்டம் கூடிவிட்டது. தமிழ் இளைஞர்கள் திரண்டிருந்தனர். சிங்கள இளைஞர்கள் இந்தத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மௌனப் படங்கள் என்ற நிலை மாறி, திரைப்படங்கள் பேசத் தொடங்கியிருந்த காலம் அது. காளிதாசன், ஹரிசந்திரா, இராமாயணம் எனப் புராணங்களே திரைப்படங்களாகி பல மொழிகளிலும் வெளியிடப்பட்டன.
சினிமா திரையிடப்படும் தியேட்டர்கள் மீது பெரியார் அப்படியொன்றும் ஆர்வம் காட்டுபவரில்லை. அறிவியல் உருவாக்கிய முக்கியமான பொழுதுபோக்கு சினிமா என்பதை பெரியார் அறிவார். அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கும் எந்தவொன்றும் மனிதகுல நன்மைக்காக இருக்க வேண்டும். எளிய மக்களின் பயன்பாட்டிற்குரியதாக அமைய வேண்டும். புதிய முற்போக்கான சிந்தனைகளை உருவாக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பதுதான் பெரியாரின் எண்ணம்.
திரையிட்டவர்களை மதித்து படத்தைப் பெரியார் பார்த்தார். இதே கதைகளை அவர் நாடகமாக, தெருக்கூத்தாகப் பார்த்திருக்கிறார். கதாகாலட்சேபமாக கேட்டிருக்கிறார். ஈரோட்டில் அவர் வீட்டுக்கு வந்தே காலட்சேபம் செய்து, அவரது அப்பாவிடம் பெருந்தொகை வாங்கிச் சென்றவர்களை அறிவார். ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ரஷ்யாவிலும் திரைப்படங்கள் கதையிலும் தொழில்நுட்பத்திலும் புதுமையாக இருந்ததை அவர் பார்த்துவிட்டுத்தான் இலங்கைக்கு வந்திருந்தார்.

படம் முடிந்ததும் பெரியாருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்து வழங்கப்பட்டது. அதன்பிறகு பெரியார் பேசினார். “இந்த சினிமா காட்சியைப் பார்ப்பதற்கு மிக அதிசயமாகவும் ரம்மியமாகவும் காணப்பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன், மூடநம்பிக்கையும் அடிமைத்தனமும் தவிர வேறொன்றுமில்லை. இந்த மூடநம்பிக்கையையும் அடிமைத்தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு, ஏழைகளை வருத்தி, செல்வம் பெருக்கிக்கொள்ளத்தான் பயன்படுகிறது. இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்படவேண்டும். பகுத்தறிவும் சுதந்திரமும் ஏற்படக்கூடிய விஷயங்களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்தத் தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டும். உண்மையான சுதந்திர-சமத்துவ தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றன” என்று பெரியார் சொன்னதும் மொத்த கூட்டமும் கைத்தட்டி ஆரவாரம் செய்தது.
மேற்குலக நாடுகளில் அவர் பார்த்த முன்னேற்றங்களும் முற்போக்கு சிந்தனைகளும் தமிழ் மக்கள் வாழும் நிலங்களிலும் பரவிட வேண்டுமானால், மூடநம்பிக்கையும் அடிமைத்தன்மையும் ஒழிந்தாக வேண்டும் என்பதே பெரியாரின் பார்வை. அது இலங்கை வாழ் தமிழர்களை ஈர்ததது. பலரும் அவரைத் தங்கள் பகுதிக்கு வந்து பேசவேண்டும் என்று அழைத்தனர். கொழும்பு நகரில் சுயமரியாதை சங்கத்தினர், மகம்மதிய சங்கத்தினர், ஆதிராவிடர் சங்கத்தினர், வணிகர்கள், இளைஞர்கள் எனப் பல தரப்பினரும் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியபின், கொழும்பு கடற்கரை கால்பேஸ் மைதானத்தில் பத்தாயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேசினார். ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள மக்களின் நன்மைக்கான செய்திகளைப் பெரியார் பகிர்ந்துகொண்டதுடன் எல்லா இடத்திலும் ஒரு சேதியை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
“தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்பவைகளின் உட்கருத்தை ஊன்றிக் கவனித்தால், தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழி தானாகவே தோன்றும். எப்படி எனில், குறிப்பிட்ட எந்தவிதமான அபிமானத்தை எடுத்துக்கொண்ட போதிலும் அநேகமாக அந்த அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகளே நடைபெறுகின்றன.
நான் சாதாரண மனிதரில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். யாவரும் என் அபிப்பிராயப்படியே தான் நடக்க வேண்டுமென்பது என் கொள்கைக்கு முற்றிலும் மாறானது. நீங்கள் கேட்டு, நீங்களே சிந்தித்து, நன்மையானதைச் செய்ய வேண்டுமேயல்லாமல் ஒருவர் கூறுகிறபடி செய்யக்கூடாது. மனிதர்கள் சுய அறிவில் நம்பிக்கை வைக்க வேண்டும். 100க்கு 99 பேர் ஒப்புக்கொண்டாலும் நீங்கள் அலசிப் பார்க்க வேண்டும்” என்பதை எல்லாக் கூட்டங்களிலும் பெரியார் வலியுறுத்தினார்.
கொழும்பு நகரில் இராமாநுஜம்புதூர் ஸ்ரீ சரஸ்வதி சங்கீத வாலிபர் கழகம் பெரியாருக்கு வரவேற்பளித்தது. கொழும்பு நிகழ்வுகளுக்குப் பின் கண்டி நகருக்கு சென்றார் பெரியார். கண்டி மருத்துவ சங்கத்தினரின் ஆதரவில் அந்த நகரில் மூன்று நாள் தங்கியிருந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நாவல்பிட்டியில் மக்களை சந்தித்துப் பேசினார். ஹட்டன் என்ற இடத்தில் தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த கூட்டத்தில் பெரியார் பேசியபோது, எளியமக்கள் அதனை உன்னிப்பாகக் கேட்டனர். யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்றார். கொடிகாமம் வரை ரயிலில் பயணித்து, அங்கிருந்து பருத்தித்துறை சென்றார். அவர் தங்கவைக்கப்பட்டிருந்த விஸ்வலிங்கம் என்பவர் வீட்டுக்கு ஆட்கள் வந்துகொண்டே இருந்தார்கள். பெரியார் எல்லாருடனும் பேசினார். விவாதம் செய்தவர்களுக்குப் பதில் அளித்தார். பிறகு, பருத்தித்துறை பள்ளிக்கூட மைதானத்தில் ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசினார்.
எப்போதுமே விவாதங்களை விரும்புகிறவர் பெரியார். அதுவும் தன் கருத்துகள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் தருவது பெரியாருக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய இலங்கைப் பயணத்தின்போது ஒரு கூட்டத்தில், கடைசியாக ஒரு உபதேசியார் எழுந்தார்.
“ராமசாமி அவர்களின் உழைப்பையும் உபதேசத்தையும் நான் பல வருஷங்களாகப் பார்த்து வருகிறேன். அவர் மூலம் மக்களின் கஷ்டங்கள் ஒழியக்கூடும். ஆனால், அவர் கடவுளை நம்பவில்லை என்று சொல்வது எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது” என்றார்.
பெரியார் நிதானமாக பதில் சொன்னார், “கடவுளை நம்பியே ஆகவேண்டும் என்று வலியுறுத்துவது ஒரு அடக்குமுறை. அது அவனவன் சொந்த விஷயம் என்ற அளவில்தான் பாவிக்கவேண்டும். கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்பவர்கள், இந்த ராமசாமியால், கடவுள் இல்லாமல் போய்விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை” என்றார். மொத்த கூட்டமும் சிரிப்பால் அதிர்ந்தது. உபதேசியாரும் புரிந்துகொண்டார். அதைத் தொடர்ந்து கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களையும் பெரியார் விளக்குவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
யாழ்ப்பாணம் பகுதியில் நடந்த கூட்டங்களில் எதிர்வாதம் செய்பவர்களால் கலவரம் வருமோ என்று விழா ஏற்பாட்டாளர்கள் பயந்திருந்த நிலை மாறி, கூட்டம் முடிந்தபிறகு பலரும் பெரியாரிடம் வந்து, “நாங்கள் இதுவரை தப்பா நினைச்சிருந்தோம். இப்படி விளக்கம் கொடுக்க இதுவரை இங்கே யாரும் இல்லாததால் தப்பான அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது” என்று சொன்னதுடன், தங்கள் ஊர்களிலும் வந்து பேசவேண்டும் என்று அழைத்தனர்.
ஏறத்தாழ ஓராண்டுகாலம் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த பெரியார், இன்னொரு சமயம் வருவதாகக் கூறிவிட்டு விடைபெற்றார். கொழுப்பிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு அவரது கப்பல் பயணித்தது. 8-12-1932 அன்று பெரியார், நாகம்மையார், மாயவரம் நடராசன், அ.இராகவன் ஆகியோரை தூத்துக்குடி துறைமுகத்தில் சுயமரியாதை இயக்கத்தினர் வரவேற்றனர்.
உலகளாவிய அனுபவத்துடன் தாய் மண்ணுக்குத் திரும்பிய பெரியார் அதன்பிறகு செய்த சம்பவங்கள் ஏராளம்.
(சுற்றும்)
-கோவி. லெனின்