
பெரியார் தன் ஐரோப்பிய பயணத்திற்காக கப்பலில் ஏறி ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழித்து, அதே ஐரோப்பாவுக்கும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் பயணிக்கவிருந்த தன் அரசியல் மாணவனை அன்புடன் வாழ்த்தினர். அவரிடம் வாழ்த்து பெற்றவர், முத்தமிழறிஞர் கலைஞர். அப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
எந்தப் பதவியிலும் இல்லாதவரான பெரியாரின் முன் தலைதாழ்ததி, உடல் வளைத்து நின்று வாழ்த்துகளைப் பெற்றார் தமிழ்நாட்டின் முதலமைச்சர். இது பற்றி நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் குறிப்பிடும்போது, “வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் பெரியார் அவர்கள் கலந்து கொண்டு என்னை வழியனுப்பி வைத்தார்கள். அவர் வழியனுப்பி வைத்தார் என்று சொல்வதைவிட அந்த விழாவில் நான் பெரியார் அவர்களைத் தாள் பணிந்து வணங்கி விடைபெற்றேன்” என்பதுதான் பொருத்தம்” என்கிறார்.
அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட சீரணிப் படை, கலைஞர் ஆட்சியிலும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அந்த சீரணியினர் சார்பில் முதலமைச்சரை வெளிநாட்டுக்கு வழியனுப்பும் விழா ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் கலைஞரை ஆரத்தழுவி அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கலைஞருக்கு அதுதான் முதல் வெளிநாட்டுப் பயணம். அது ஐரோப்பிய-அமெரிக்க பயணமாக அமைந்துவிட்டது. கலைஞர் முதலில் பயணித்திருக்க வேண்டிய நாடு, இலங்கை.
தி.மு.க. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட காலத்தில், இலங்கை வாழ் தமிழர்கள் அதிலும் திராவிட உணர்வு கொண்டவர்கள், இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்தி ஆதிக்கம்- மத்திய அரசின் பாரபட்சம் இவற்றை எதிர்த்து தமிழ்நாட்டில் தி.மு.க. போராடியதுபோல, இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிங்கள ஆதிக்கம்-இலங்கை அரசாங்கத்தால் தமிழர்களின் உரிமை பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக களம் கண்டது. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் இ.தி.மு.க.வின் கிளைகள் பல தொடங்கப்பட்டன. மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது. 1956ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டின் ஊர்வலம் பற்றி திராவிட நாடு இதழில் இராம.அரங்கண்ணல் எழுதிய கட்டுரையின் பகுதிகளை திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தனது தி.மு.க. வரலாறு இரண்டாவது பாகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் இலங்கை தி.மு.க. பிரதிநிதிகள் கலந்துகொண்டது பதிவாகியுள்ளது.
இலங்கை தி.மு.க.வின் செயல்பாடுகளை சிங்களர்களும் இலங்கை அரசும் உன்னிப்பாகக் கவனித்தன. உளவுத்துறை மோப்பம் பிடித்தது. உண்மையில், இலங்கை தி.மு.க. என்று பெயர் இருந்தாலும், வேற்று நாட்டில் தி.மு.க.வின் கொள்கைவிதிகளை பின்பற்ற முடியாது. தமிழர் என்ற உணர்வு அடிப்படையில் ஆதரவான போக்கு இருந்தது. செயல்பாடுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்பவே அமைந்தன. தமிழ்நாட்டிலிருந்து திராவிட இயக்கத் தலைவர்களை அழைத்து இலங்கைத் தமிழர்களிடம் பேச வைக்க வேண்டும் என்ற விருப்பம் இலங்கை தி.மு.க.வினரிடம் இருந்தது. அவர்கள் அதிகம் விரும்பியது, அண்ணாவையும் கலைரையும்.
1956ல் சிதம்பரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கலைஞர். அதனால் அவர் இலங்கைக்கு வர வேண்டும் என விரும்பினர். அதன்பின் நாவலர், என்.வி.நடராசன், மதியழகன் போன்ற மூத்த தலைவர்களை அழைத்திட விரும்பினர். தி.மு.க தொடர்ச்சியாக இலங்கை மற்றும் பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை இந்திய அரசிடம் தொடர்ந்து முன் வைத்தது. 1957ல் தி.மு.க. களம் கண்ட முதல் தேர்தலுக்கான அறிக்கையில்கூட, தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்திய ஹைகமிஷனர் ஒருவர் தமிழராக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தது. தொடர்ந்து அந்த கோரிக்கையை முன்வைத்தது.

அன்றைய ஆளுங்கட்சியினர் இந்தக் கோரிக்கையை திசை திருப்பி, திராவிட நாடு கேட்கும் தி.மு.க, இலங்கையிலும் பிரிவினையை உண்டாக்குகிறது எனப் பரப்பி வந்தனர். இலங்கையின் ஆளுங்கட்சியினருக்கு, இலங்கை தி.மு.க. ஒரு பிரிவினை கட்சியாகவே தெரிந்தது. சிங்கள அமைப்புகளின் தலைவர்கள் இலங்கை நாடாளுமன்றத்திலேயே இ.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். “தி.மு.கவின் தலைமை நிலையம் சென்னையில் உள்ளது. அதன் பெருந்தலைவர் சி.என்.அண்ணாதுரை ஆவார். தி.மு.க.வின் நோக்கம் இந்த (இலங்கை) நாட்டைக் கைப்பற்றி, அதனை தமிழ்நாட்டோடு இணைப்பதே ஆகும்” என்று சிங்கள் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
இப்படியொரு கற்பனையான ‘அகண்ட திராவிடநாடு’ குற்றச்சாட்டு வைக்கப்படும் என்பதை தி.மு.க.வும் இலங்கை திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை தி.மு.க.வைத் தூண்டிவிடுவது தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க.தான் என்று இலங்கை ஆட்சியாளர்களும் உளவுத்துறையினரும் கருதியதாலும், தி.மு.க.வுக்கு எதிரான தேசிய அரசியல் கட்சியினர் இதையே பரப்புரையாக மேற்கொண்டதாலும் இலங்கைக்குள் நுழைவதற்கு கலைஞருக்கு அனுமதியில்லை.
சுயமரியாதை இயக்கத் தலைவராக 1932ல் ஐரோப்பாவிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு வந்த பெரியார் கண்டி, யாழ்ப்பாணம் எனப் பல பகுதிகளுக்கும் சென்று தமிழர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்தியாவும் இலங்கையும் சுதந்திர நாடுகளான நிலையில், பிரிவினை என்ற காரணம் காட்டி, தி.மு.க. தலைவர்கள் பலருக்கும் இலங்கை அரசு தடை விதித்தது.
இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடர்ந்து இலங்கை வாழ் தமிழர்களுக்காகப் பேராடியது. 1977க்குப் பிறகு அது அங்குள்ள மற்ற தமிழர் அமைப்புகளுடனான கூட்டணியில் இணைந்தது. பின்னர், இனக்கலவரம் வெடித்த பிறகு இலங்கையின் அரசியல் சூழலே மாறியது.
1950கள், 60களில் இலங்கைக்குப் போக முடியாத கலைஞர், 1970ல் முதலமைச்சராக ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பயணமானார். அரசு முறை சுற்றுப்பயணம் என்பதுடன் அவரது கண்ணில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புக்கான உயர்சிகிச்சைக்கும் அந்தப் பயணம் அவசியமாக இருந்தது.

1.7.1970 அன்று கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் மலர்வளையம் வைத்து வணங்கிவிட்டு கலைஞர் தன் பயணத்தைத் தொடங்கினார். பெருங்கூட்டமாக தி.மு.க.வினர் திரண்டு அவரை வழியனுப்பினர். கலைஞரை கட்டி அணைத்து வாழ்த்தியவர் அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர்.
கலைஞருடன் தயாளு அம்மையார், நிதிச் செயலாளர் வெங்கட்ரமணன், தனிச் செயலாளர் வைத்தியலிங்கம், டாக்டர் ஆபிரகாம் ஆகியோர் உடன் சென்றனர். சென்னையிலிருந்து பம்பாய் (மும்பை)க்கு விமானப் பயணம்.
பம்பாய் தி.மு.க.வினர் திரண்டிருந்து கலைஞரை வரவேற்றனர். அங்கே கழகப் பொதுக்கூட்டமும் நடந்தது. அதில் உரையாற்றிவிட்டு, இரவு 1 மணி விமானத்திற்கு வந்தார்கள் கலைஞரும் மற்றவர்களும்.
பெரியாரால் வாழ்த்தி வழியனுப்பப்பட்ட கலைஞர், சென்ற முதல் வெளிநாட்டு நகரம் இத்தாலியின் ரோம். அண்ணாவைப் போலவே கலைஞரும் வாட்டிகனில் போப்பை சந்தித்தார்.
(சுற்றும்)
-கோவி. லெனின்