
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி இரண்டு முறை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, கர்நாடகம், மகராராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் எந்தெந்த வகையில் வாக்காளர் பட்டியல் மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். ஒரே நபரை இரண்டு, மூன்று வாக்குச்சாவடிகளில் சேர்ப்பது, ஒருவரை நீக்குவதற்கு இன்னொருவர் மூலம் விண்ணப்பிப்பது, முறையான முகவரி இல்லாமல் பெயர்களை சேர்ப்பது, தந்தை அல்லது கணவர் பெயர் என எதையோ எழுதி வாக்காளராக சேர்ப்பது, ஒரே வீட்டில் 100 பேர் அளவுக்கு வாக்காளர்களாக இருப்பது என வாக்காளர் பட்டியல் மோசடிகளை ராகுல்காந்தி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.
விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அவர்கள் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியிருப்பதை அறிந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்தன. வாக்குத் திருட்டைக் கண்டித்து ராகுல்காந்தி பெரும் பேரணி நடத்தினார். அதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான அணுகுமுறையையும், மத்திய பா.ஜ.க. அரசின் விருப்பத்திற்கேற்ப தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செயல்படுவதையும் மக்களிடம் தெளிவாக விளக்கினர்.

பீகார் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் நடைபெறும். இதில் அசாம், புதுச்சேரி இரண்டும் தற்போது பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளது. மற்ற மூன்று மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறுகிறது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் ஆய்வு குறித்து அறிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எத்தனை பேருடைய வாக்குரிமை பாதுகாக்கப்படும், எத்தனை பேருக்கு வாக்குரிமை பறிபோகும் என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, குடிமகன்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
ராகுல்காந்தியும் மற்றவர்களும் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் பற்றிக் குறிப்பிடும்போது, அங்குள்ள முஸ்லிம் சமுதாயத்தினர், பட்டியல் இன மக்கள், ஏழைகள் இவர்களின் பெயர்கள்தான் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதாவது, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இல்லாத வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களிலும் இதே நடைமுறையை தேர்தல் ஆணையம் கையாளக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, 2005ஆம் ஆண்டில் வாக்களித்தவராக இருந்தால் அவர்களுடைய பெயர் நீக்கப்படாது என்றும், அதன்பிறகு பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்களின் வாக்குரிமைக்கான சான்றுகளைக் கொடுத்து உறுதிப்படுத்தி பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்களில் ஒன்றாக ஆதார் அட்டையை ஏற்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் பிடிவாதமாக நிற்பது ஏன் என்பது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. ஆதார் அட்டையை பான் அட்டையுடன் இணைக்கக் கோரியும், வங்கிக் கணக்கு, வருமான வரிக் கணக்கு, கேஸ் சிலிண்டர் புக்கிங் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதாரமாக ஆதார் அட்டையை அரசாங்கமே கோரும்போது, தேர்தல் ஆணையம் ஏன் அதை ஏற்க மறுக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை.
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிலும் ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற கடினமான சான்றுகளையே முன்வைக்கிறது தேர்தல் ஆணையம். இதன் நோக்கம் என்னவென்பதைத்தான் எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன. ஏழைகள், பட்டியல் இன மக்கள் உள்ளிட்டோரிடம் இத்தகைய சான்றுகள் இருக்காது. அதற்காக அவர்கள் உரிய அலுவலகங்களுக்கு அலைய முடியாது. தங்களின் வேலைகளுக்காக செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட பலரால் உறுதிப்படுத்த முடியாது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அவர்களிடம் சான்றுகள் இல்லை என பெயர் நீக்கம் செய்துவிடுவது தேர்தல் ஆணையத்திற்கு எளிதான வேலையாகிவிடும்.
இந்தியாவில் 18 வயது நிறைந்த ஆண்-பெண்-மாற்று பாலினத்தவர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கான வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டியதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் பணி. அவர்கள் இரண்டு இடத்தில் பெயர் பதிவு செய்திருந்தால் அதை நீக்கலாம். ஒரு இடத்தில் அவருக்கு வாக்குரிமை இருக்கிறதென்றால், அதை உறுதி செய்து தரவேண்டிய வேலையை செய்ய வேண்டிய வேலை தேர்தல் ஆணையத்திற்குரியது.
ஆனால், பா.ஜ.க அரசுக்கு ஏற்றபடி ஆடும் தேர்தல் ஆணையம் நேர்மாறாக செயல்படுகிறது