
கலைஞரின் அமெரிக்கப் பயணத்திற்கான காரணம், கண் சிகிச்சை. இரண்டு முறை கார் விபத்தினால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருந்த கலைஞருக்கு, 1971ல் தாங்க முடியாத வலி தொடர்ந்து இருந்தது. லண்டன் டாக்டர்கள் ஓராண்டுக்கு முன் பரிசோதித்து, ஆபரேஷன் தேவையில்லை என்று சொல்லியிருந்தாலும், அதன்பின் தொடர்ச்சியான வலியின் காரணமாக அவர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளலாம் என சென்னையில் உள்ள கண் டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்டது.
அவர் அமெரிக்கா புறப்பட்ட நேரத்தில் வங்கதேச பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. கிழக்கு பாகிஸ்தான் என அப்போது அழைக்கப்பட்ட இன்றைய பங்களாதேஷில், தனிநாடு கிளர்ச்சி நடைபெற்றது. இந்திய பிரதமர் இந்திராகாந்தி வங்கதேசத்திற்கு ஆதரவாக இருந்தார். அதனால் இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிக் கொண்டிருந்தது. இந்திய ராணுவத்தை அனுப்பி, பாகிஸ்தானை முறியடித்து, வங்கதேசம் என்கிற தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தா இந்திராகாந்தி.
கலைஞருடன் முரசொலி மாறன் எம்.பி, நிதித்துறை செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் பம்பாய் வழியாக அமெரிக்காவுக்குப் பயணமானார்கள். நவம்பர் 10ந் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அவர்கள் தரையிறங்கியபோது இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலைஞரை வரவேற்றனர். நவம்பர் 12 அன்று அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் வங்கதேச பிரச்சினை குறித்தும், அதில் இந்தியாவின் சரியான நிலைப்பாடு குறித்தும் இந்திய மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் கலைஞர் விளக்கினார்.

மாலையில் எட்வர்ட் கென்னடி வந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் சகோதரர் எட்வர்ட். அமெரிக்காவில் இரண்டு கட்சிகள்தான் முக்கியமானவை. ஒன்று, குடியரசு கட்சி. டிரம்ப் அந்தக் கட்சியைச் சேர்ந்தனர். மற்றொன்று, ஜனநாயக கட்சி. அது ஒபாமா கட்சி. இந்தியர்களுக்கு ஜனநாயக கட்சித் தலைவர்கள்-ஜனாதிபதிகள் என்றால் அபிமானம் உண்டு. ஜான் கென்னடியும் ஜனநாயகக் கட்சிதான். அவர் சுட்டுககொல்லப்பட்டபோது இந்தியர்கள் பலர் தங்கள் சொந்த நாட்டில் ஒரு துக்கம் நடந்தது போல நினைத்தார்கள். கென்னடி என்று 1970களில் தமிழ்நாட்டில் பலருக்கு பெயர் வைக்கப்பட்டன.
எட்வர்ட் கென்னடி அப்போது செனட் சபை உறுப்பினராக இருந்தார். அவரும் மேலும் சில செனட் சபை உறுப்பினர்களும் கலைஞரை சந்தித்து உரையாடினர். ஆசிய விவகாரங்களுக்கான துணைக் குழுவின் தலைவர் கல்லாகர் என்பவரும் கலைஞரை சந்தித்தார்.
மறுநாள், அமெரிக்காவின் மிகப் பெரிய விவசாய பண்ணையான ‘பெல்டஸ் வில்லி’ என்ற பண்ணையை நேரில் பார்வையிட்டு, விவசாயத்தின் பயன்படுத்தப்படும் நவீன முறைகளை கலைஞர் தெரிந்துகொண்டார். அதன்பின், பால்டிமோர் நகரில் அவருக்கு கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போதிருந்த நவீன வசதிகளைக் கொண்டு, அமெரிக்க டாக்டரும், இந்திய டாக்டர்களும் துணையாக இருந்து மேற்கொண்ட சிகிச்சைக்குப்பின், கலைஞரின் கண்ணில் இருந்த நீண்டகால வலி நின்றது. சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவின் பல இடங்களுக்கும் சென்றார்.
கென்னடி முனை எனப்படும் ராக்கெட் ஏவுதளத்திற்கு சென்று அதனைப் பார்வையிட்டார் கலைஞர். டிஸ்னி லேண்டுக்கு சென்றார். நியூயார்க்கில் பிரம்மாண்டமான பங்குச்சந்தை அலுவலகத்திற்கு கலைஞரை அழைத்துச் சென்றார் முரசொலி மாறன். அங்கு கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டில் இருந்தன. அதன் மூலமாக கணக்கீடுகள் விரைவாக நடப்பதை கலைஞர் கவனித்தார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்கா நம்மைவிட வெகுதூரத்தில் இருப்பதை புரிந்துகொண்டார். அவர் மனதிற்குள் அப்போதே ஒரு திட்டம் உருவானது.
அரசியல் தலைவர்- முதலமைச்சர்- சிறந்த நிர்வாகி-சிறப்பான சொழ்பொழிவாளர்-கவிஞர்-நாடக ஆசிரியர்-சிறுகதை,புதினங்கள் படைத்த எழுத்தாளர்-திரைப்பட வசனகர்த்தா எனப் பன்முகத்திறன் கலைஞருக்கு உண்டு. அதில் முதன்மையானது, அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதுதான். “என்னிடமிருந்து செங்கோலை பறிக்கலாம். எழுதுகோலை எவரும் பறிக்க முடியாது” என்று கலைஞர் உறுதியாகச் சொன்னதற்கு காரணம், முரசொலியில் தன் எழுத்துகளால் அவர் எப்போதும் தன் உடன்பிறப்புகளுடன் உரையாடிக்கொண்டே இருந்ததுதான்.
அமெரிக்கா சென்றபோதும் கலைஞருக்குள் இருந்த பத்திரிகையாளர் தன் பணியைச் செய்தார். சிகாகோவில் உள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் வாரன் உன்னா என்பவரை சந்தித்தார். பால்டிமோர்சன் பத்திரிகையை சேர்ந்த ஆடம்பிளேமேர் என்பவரையும் சந்தித்தார். அமெரிக்காவில் பத்திரிகையுலகம் எப்படி இருக்கிறது என்பதை கேட்டறிந்தார். அவர்கள் இருவரும், கலைஞரிடம் கேள்விகள் கேட்டு நேர்காணல் செய்தனர்.
அமெரிக்காவில் இருந்த பல்வேறு தமிழ்ச் சங்கங்களில் கலைஞரை அழைத்து உரையாற்றச் சொன்னார்கள். இலக்கிய சுவைமிக்க உரையுடன், தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டிய அவசியத்தையும், தமிழின் பழம் பெருமையுடன், இன்றைய அறிவியல் உலகத்திற்கேற்றபடி நம் தாய்மொழியை வளர்க்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்த தவறவில்லை.
ஆர்லண்டோ என்ற நகரம் இயற்கை எழில் சூழ்ந்த, ஏரிகள் நிறைந்த நகரம். அங்கே ஒரு பண்பாட்டுத் திருவிழா நடந்தது. அதற்கு கலைஞரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களைப் போன்ற உடைகளை அணிந்துகொண்டு ஆர்லண்டோ நகரின் முக்கிய பிரமுகர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டதை கலைஞர் ரசித்துப் பார்த்தார். விழாவும் விருந்தும் நடந்த இடத்தில் ஒரு நீரூற்று இருந்தது. வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த அந்த நீரூற்றைப் பார்த்ததும் கலைஞருக்குள் இருந்த கவிஞர் விழித்தார். கவிதை ஊற்றெடுத்தது.
ஆர்லந்தோ எனும் நகரில் அரியதோர் ஏரியிலே
அழகிய மத்தாப்பூ ஊற்றொன்று கண்டேன்
ஒரு லயமும் பிசகாமல் ஆடுகின்ற
நீரூற்று ஆட்டக்காரி நாட்டியத்தின்
நேர்த்தியென்ன சொல்வேன்.
-எனத் தொடங்கிய அந்தக் கவிதையில்
இப்படித்தான் இங்குள்ள ‘அப்போலோ’ கிளம்பிற்றென்று
இருள்கிழித்து வானேறும் நீரின் கரங்கள்.
கடவுளர் சந்நிதியில்
காவுக்கு ஓர் உயிரை வெட்டும்போது
பீறிட்டுக் கிளம்புகின்ற ரத்தம் போல
சீறித்தான் தாவுதய்யோ சிவப்பு வண்ணம்
-எனத் தொடர்ந்த வரிகளை அங்குள்ளவர்கள் மிகவும் ரசித்தார்கள்.
பண்பாட்டு விழா தலைவர் அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விழாவுக்கு வந்தவர்களுக்கெல்லாம் வழங்கி மகிழ்ந்தார்.
கலைஞரின் எழுதுகோல் அமெரிக்காவையும் அசத்தியது. அவரது செங்கோலோ ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கண்டதை தமிழ்நாட்டில் செயல்படுத்தின. சென்னை அண்ணா மேம்பாலம், நெல்லை ஈரடுக்கு மேம்பாலம், எளிய மக்களுக்கான கண்ணொளித் திட்டம், கூரைக்கு வழியில்லா ஏழைகளை அடுக்குமாடியில் குடியிருக்க வைத்த குடிசை மாற்று வாரியம், கிராமங்கள் வரை மின்வசதி, போக்குவரத்து, மெட்ரோ ரயில், டைடல் பார்க், உழவர் சந்தை, மாநிலம் முழுவதுமான நவீன மருத்துவக் கட்டமைப்பு, இன்னும்.. இன்னும்… அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஐரோப்பாவில் பெரியார் பயணித்தபோது இவையெல்லாம் நம் மண்ணுக்கு எப்போது வரும் என நினைத்தார். அவர் நினைத்த வளர்ச்சியையும், சமுதாய-பாலின சமத்துவத்தையும் அவரது ஈரோடு குருகுல மாணவர் கலைஞர் தன் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிக் காட்டினார்.
(சுற்றும்)
-கோவி. லெனின்