செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிகாபிட் ஃபைபர் சேவை (Gigabit fibre service) எனப்படும் இணையதள சேவையை, Reliance Jio நிறுவனம் விரைவில் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தில் (IN-SPAce) இந்த முயற்சிக்கு தேவையான அனைத்து திட்ட நகல்களையும் Reliance Jio சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
IN-SPAce அமைப்பின் ஒப்புதல் பெறப்பட்டப்பின்னர் இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணையத் தொடர்பு சேவைகளை Reliance Jio தொடங்க திட்டமிட்டுள்ளது.
Reliance Jio நிறுவனம் தனது செயற்கைக்கோள் தொழில்நுட்பத் திட்டத்தை, கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, விரைவில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்கும் முயற்சியில் Reliance Jio ஈடுபட்டு வந்தது.
செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளைத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஒப்புதல்களையும் அங்கீகாரங்களையும் IN-SPACe அமைப்பிடம் இருந்து Reliance Jio விரைவில் பெற உள்ளதாக The Economic Times கூறியுள்ளது.
இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைகளை வழங்குவதற்கு ஒப்புதல் பெற, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய இணைப்புக்கான அணுகலை வழங்குவதற்காக, லக்சம்பேர்க் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிறுவனமான Société Européenne des Satellites (SES) உடன் Reliance Jio நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜியோவின் செயற்கைக்கோள் சேவைகள், எலோன் மஸ்க்கின் Starlink, Eutelsat குழுமத்தின் OneWeb மற்றும் Amazon நிறுவனத்தின் Kuiper ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.