
மோடி, அமித்ஷாவை குறிப்பிடும்போது பிரதமர், உள்துறை அமைச்சர் என்று சொல்லும் விஜய், மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் போது முதலமைச்சர் என்று சொல்லாமல், ‘அங்கிள்’ என்றும், ‘சி.எம். சார்’ என்றும் நக்கலாக பேசுவது அகந்தை என்கிறார் சபாநாயகர் அப்பாவு. இந்த அகந்தைக்கு பாஜகதான் காரணம் என்கிறார் அப்பாவு.
அவர் மேலும், விஜய்யை அமித்ஷா இயக்குவதாகவும் கூறியிருக்கிறார். பின்புலத்தில் பாஜக இருக்கும் தைரியத்தில்தான் இப்படி அகந்தையுடன் பேசுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லித்தான் புஸ்ஸி ஆனந்த் மூலமாக கட்சி தொடங்கி இருக்கிறார் விஜய். முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே அவருக்கு பின்னரிந்து பாஜக இயக்குகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது என்கிறார்.

ஆனால் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையோ இதை மறுக்கிறார். ‘’தமிழ்நாட்டில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் உடனே பிஜேபி பி டீம் என்று சொல்லிவிடுகிறார்கள். முதலில் இதிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். விஜய்க்கு தொண்டைக்குழி இருக்கிறது, அவருக்கு நாக்கு இருக்கிறது, வாய் இருக்கிறது, அவர் பேசுவார். பாரதிய ஜனதா கட்சி வாடகை வாயை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’’என்கிறார்.