
மகாகவி பாரதியார் பாடியது போல தமிழ்நாடு கல்வியில் சிறப்பாகத் திகழும் மாநிலமாக உள்ளது. பாரதி பாடிய காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரே கல்வி கற்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். சனாதன-வருணாசிரமக் கோட்பாட்டின்படி அவரவர் வருணத்திற்கேற்ற வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியல் இன-பழங்குடி மக்கள் பலர் கல்வி பெறும் வாய்ப்பின்றி இருந்தனர். அவர்களில் சிலர் பெரும் முயற்சியால் கல்வி பெற்றபோது அறிவாற்றலில் எவருக்கும் நாங்கள் சளைத்தவர்களல்லர் என்பதை நிரூபித்தனர்.
ஜஸ்டிஸ் பார்ட்டி என்கிற நீதிக்கட்சி ஆட்சியில் கல்வி-வேலைவாய்ப்பு உரிமைகள் அனைத்து சமூகங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதற்கான வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமைக்கான அரசாணை 1921ல் வெளியிடப்பட்டது. பின்னர் 7 ஆண்டுகள் கழித்து அது நடைமுறைக்கு வந்தது. அப்போது முதல் தமிழ்நாட்டில் எல்லாருக்குமான கல்வி என்கிற சிந்தனை வலுப்பெற்றது. கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்நாட்டில் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வி, அதன்பிறகு அமைந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் கல்லூரிக்கல்வி, மருத்துவம்-பொறியியல்-சட்டம்-வேளாண்மை-வணிகம் உள்ளிட்ட தொழிற்கல்வி ஆகியவை பெருமளவில் மேம்பட்டன. மாவட்டங்கள்தோறும் மருத்துவக்கல்லூரி என்கிற கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத் திட்டம் மருத்துவக் கல்வியை மட்டுமின்றி, குக்கிராமங்கள் வரையிலான மருத்துவக் கட்டமைப்பையும் மேம்படுத்தியது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் சுயநிதிக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டன். கடந்த 60 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் பல தொடங்கப்பட்டுள்ளன.
பி.ஹெச்.டி எனும் ஆய்வுப்பட்டம் பெறுவதில் தமிழ்நாட்டு மாணவர்கள் முனைப்பாக உள்ளனர். இந்தியாவில் பி.ஹெச்.டி முனைவர் பட்டம் பெற்ற பெண்கள் அதிகமுள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டினரும் இந்தியாவில் தங்களின் உயர்கல்விக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான மாநிலம் தமிழ்நாடுதான்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி சேர்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியைவிட தமிழ்நாடு பல கட்டங்கள் முன்னேறியிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கை 2020ல் நிர்ணயித்திருக்கின்ற இலக்கை தமிழ்நாடு எப்போதோ அடைந்து, மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதனால்தான், மும்மொழிக்கொள்கை-நவீன குலக்கல்வி முறை ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுக்கிறது. தனக்கான கல்விக் கொள்கையை தனித்து உருவாக்கி, மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடுகிறது. கல்விக்கான நிதியை மத்திய அரசு தர மறுத்துவருகிற நிலையில், அதற்கான சட்டவழியிலானப் போராட்டத்தை ஒருபுறம் நடத்தியபடியே, மாநில அரசின் சார்பில் கல்விக்கான நிதியை ஒதுக்கி பள்ளிக்கல்வி-உயர்கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களை இந்த நான் முதல்வன் திட்டம் மூலம் எளிதாகப் பெறுகின்றன. சொந்த ஊரிலேயே இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, தூத்துக்குடியில் அமைந்துள்ள மின்வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட், 200 இளம் தொழில்நுட்பத் திறனாளர்களை நான்முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வு செய்து, பணியில் சேர்த்துள்ளது.
மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கப்படுத்த, அரசுப்பள்ளியில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெற அதே தொகையை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா, கலைத் திறன்களை வெளிப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள், தொடக்கக்கல்வி பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை தமிழ்நாட்டில் கல்வி மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னோடி திட்டங்களாகும்.
கல்விக் கட்டமைப்பை இன்னும் மேம்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. குறிப்பாக, உயர்கல்வித்துறையில் விரிவுரையாளர்கள் பணியிடங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. 4000 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு எப்போது நடைபெறும், எப்போது வேலை கிடைக்கும் என அதற்குரிய தகுதியுடன் காத்திருப்பவர்களுக்கு நரை விழுந்துவிட்டது.
கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கான ஊதிய நிலுவை, ஊதிய உயர்வு போன்றவை தொடர்ந்து கவனிக்கப்படாமலேயே இருக்கின்றன. இவற்றின் மீது அக்கறை செலுத்தி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டதாக தமிழ்நாடு அரசு செப்டம்பர் 25 அன்று முன்னெடுக்கும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்வு அமையட்டும். தெலங்கானா முதல்வர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டின் கல்வித் தரத்தையும் கட்டமைப்பையும் இந்திய மாநிலங்கள் பின்பற்றுவதற்கு இந்த விழா பயனுள்ளதாக அமையட்டும்.