
மலேயா பயணத்தின்போது அங்கிருந்த தமிழர்கள், தொழிலாளர்கள் பெரியாரின் பிரச்சாரத்தால் புதிய சிந்தனை விழிப்புணர்வைப் பெற்றனர். இந்தப் பயணத்தில் பெரியார் புதிதாகப் பெற்றது, பின்னாளில் அவரது நிரந்தர அடையாளமாக மாறிவிட்ட அந்த தாடி.
1929ஆம் ஆண்டு மலேயாவுக்கு புறப்படுவதற்கு முன்பு வரை பெரியாருக்கு பெரிய மீசை இருந்தது. மலேயாவுக்குப் போய் திரும்பிய கப்பல் பயணத்தில், ஷேவிங் செய்து கொள்வதற்காக பெரியார் போனபோது, அவரைப் போலவே பல ஆண் பயணிகள் காத்திருந்தனர். ஷேவிங் செய்வதற்கு பெரிய க்யூ இருந்தது. நீண்ட நேரமாகும் எனத் தெரிந்தது. எதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று கப்பலில் தன் இடத்திற்குத் திரும்பி, புத்தகங்கள் படிப்பது, மலேயா நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுவது என்று தன் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடத் தொடங்கினார். ஷேவிங் செய்யப்படாத முகத்தில் தாடி வளரத் தொடங்கியது. தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகு அதுவே அவருக்குப் பொருத்தமாகிவிட்டது. அதன்பின் தாடியும் தடியும் பெரியாரின் அடையாளங்களாயின.

இன்றைய மியான்மர் அன்றைய பர்மா. அங்கே தமிழர்கள் அதிகளவில் இருந்தனர். 1954ஆம் ஆண்டு உலக புத்த மத மாநாடு அங்கே நடைபெற்றது. பெரியார் அதில் கலந்து கொண்டார். அவருடன் அன்னை மணியம்மையாரும் பயணித்தார். புத்த மத மாநாட்டில் அண்ணல் அம்பேத்கரும் கலந்து கொண்டார். பெரியாரும் அம்பேத்கரும் சந்தித்து உரையாடினர். பின்னர், அம்பேத்கரும் அவருடைய இலட்சக்கணக்கான தொண்டர்களும் புத்த மதத்தை ஏற்றனர். “இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக சாக மாட்டேன்” என்று சனாதன-வருணாசிரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக ஏற்ற உறுதியை அம்பேத்கர் நிறைவேற்றிக் காட்டினார்.
பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கிய பெரியாரும் அவருடைய இயக்கத்தினரும் இந்து மதம் என்ற பெயரில் ஆரியம் புகுத்திய மூடநம்பிக்கைகளை எதிர்த்து, சாதிக்கொடுமைகளைத் தகர்க்கும் சமூக நீதிப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டனர். பெரியாரின் தீர்மானங்களும், அம்பேத்கரின் எண்ணங்களும் திராவிட இயக்க ஆட்சியில் சட்டங்களாயின.
பர்மா புத்த மாநாட்டுக்குப் பயணித்த பெரியார் அங்கே இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். அங்கிருந்த தமிழர்களை சந்தித்து, வழக்கமான தன்னுடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பர்மா தலைநகர் ரங்கூனிலிருந்து 11-12-1954 அன்று சங்கோலா என்ற கப்பலில் மீண்டும் மலேயாவுக்குப் புறப்பட்டார். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகு மலேயா தமிழர்கள் பெரியாரை வரவேற்க ஆர்வமாகத் திரண்டிருந்தனர்.
14-12-1954 அன்று அவர் மலேயா சென்றார். முதல் முறை பரப்புரை செய்தது போலவே பினாங்கு, ஈப்போ, சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களிலும் பெரியார் பல கூட்டங்களில் கலந்து கொண்டார். அவர் பங்கேற்ற இடங்களில் வாழ்த்து மடல்கள் வாசித்து அளிக்கப்பட்டன. மலேயா தமிழர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடம் வாழ்த்துக் கவிதை கேட்டிருந்தனர். அவர் எழுதிய கவிதையில்,
‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழ்க மலைவள நாடு’ -எனத் தொடங்கிய அந்த கவிதையில் பெரியார் ஈ.வெ.ரா. எப்படிப்பட்டவர் என்று புரட்சிக்கவிஞர் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
பயிர் போன்றார் உழவருக்கு.. பால் போன்றார் குழந்தைகளுக்கு..
பசும்பால் கட்டித் தயிர் போன்றார் பசித்தவர்க்கு..
தாய் போன்றார் ஏழையருக்கு..
தகுந்தவர்க்கு செயிர்தீர்ந்த தவம் போன்றார்..
செந்தமிழ் நாட்டிற் பிறந்த மக்களுக்கெல்லாம் உயிர்போன்றார்..
இங்கு வந்தார்.. யாம் கண்ட மகிழ்ச்சிக்கோர் உவமையுண்டோ?
புரட்சிக்கவிஞரின் இந்தக் கவிதையைப் போல மலேயா வாழ் தமிழர்களின் தங்கள் உணர்வுகளை வாழ்த்துப் பத்திரங்களாக எழுதி வாசித்தளித்தனர். தமிழர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட பெரியார் அவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார்.
“போனமுறை நான் இங்கு வந்தபோது பார்த்ததைவிட, மக்களிடம் இப்போது முன்னேற்றம் தெரிகிறது. நம்ம கடவுள்களின் யோக்கியதை பற்றி எடுத்துச் சொன்னேன். இங்கே உள்ள மக்கள் சம்பாதித்த பணத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இங்கே வாழ்கிற சீன சமுதாயத்தினர் பள்ளிக்கூடங்களைக் கட்டி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். அவர்களைப் போல நம்ம பிள்ளைகளுக்கும் கல்வியைத் தரணும். அவர்களிடமுள்ள கட்டுப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும்” என்று பெரியார் வலியுறுத்தினார். தமிழர்களிடம் அவர் பேசிய இடங்களில் எல்லாம் ஒற்றுமையுணர்வுடன் கட்டுப்பாடு வேண்டும் என்பதையும் அழுத்தமாகச் சொன்னார்.
பாகோ என்ற எஸ்டேட்டை பார்வையிட்டு, மூவார் பகுதிக்கு பெரியார் திரும்பிக் கொண்டிருந்தார். புக்கிட் பாசிரில் அவரது கார் மறிக்கப்பட்டது. சொக்கலிங்கம் என்ற மலேயா தமிழ் வணிகர்தான் மறித்தார். பெரியாரை தன்னுடைய மண்டிக்கு வரவேண்டும் என அழைத்தார். ஈரோட்டில் பெரிய மண்டியை நடத்தியவராயிற்றே பெரியார். பொதுத் தொண்டுக்கு வந்த பிறகு வியாபாரத்தை விட்டுவிட்டாலும், அந்த அனுபவம் மறந்து போகுமா? சொக்கலிங்கத்தின் மண்டிக்குச் சென்றார்.
“வெங்காயம் விலை எங்க நாட்டைவிட அதிகமா இருக்குது. புளி விலை பல மடங்கு குறைவா இருக்கு. இந்தோனேசியாவிலிருந்து புளி வருதா?” என்று பெரியார் கேட்டபோது, சொக்கலிங்கமும் உடனிருந்தவர்களும் ஆச்சரியப்பட்டனர். கடையில் இருந்த சரக்கு ஒவ்வொன்றின் தரம், விலை, மக்களின் பயன்பாடு எல்லாவற்றையும் கேட்டறிந்தார் பெரியார். அவரே வியாபாரமும் செய்தார். பொருளை எடை போடுகிற நேரத்தில், மக்களின் வாழ்க்கையையும் எடை போட்டார்.
பிறகு அவர்களிடம் பேசும்போது, “நம் நாட்டை ஒப்பிடும்போது இங்கே பல பொருட்களோட விலை குறைவாகத்தான் இருக்குது. நம்ம நாட்டு மக்களோட கூலியைப் பார்க்கும்போது, இங்கே நம்ம மக்கள் வாங்குற கூலி கொஞ்சம் கூடுதலாத்தான் இருக்கு. அப்படியிருந்தும் சிக்கனமா இருந்து சேமிப்பது குறைவாகத்தான் இருக்கு. தேவைக்கு வேண்டியதை செலவு பண்ணிட்டு, மிச்சத்தை சேமித்து வைக்கணும்” என்று கணக்காக அறிவுரை வழங்கினார்.
பல இடங்களில் பெரியாரிடமும் மணியம்மையாரிடமும் தமிழர்கள் ஆட்டோகிராஃப் கேட்டு வாங்கினர். மலேயா தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் உழைப்பையும் பாராட்டிய மணியம்மையார், பெண்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை விளக்கி, பகுத்தறிவு சிந்தனையுடன் முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இரண்டாவது பயணத்திலும் மலேயா மக்களிடம் விழிப்புணர்வை விதைத்துவிட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினார் பெரியார். அவருடைய பரப்புரைகள் உழைக்கும் மக்களான மலேயா தமிழர்களிடம் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்துவதைப் பார்த்து சனாதனக் கூட்டம் அதிர்ந்தது.
75 வயது பெரியாருக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆன்மிகத் தரப்பில் யாரை பேச அனுப்புவது என்று ஆலோசித்தனர். “அவரை அனுப்பலாமே?” என்றார் ஒருவர். “அவரா? ரொம்ப சின்ன வயசா இருக்காரே?” என்றார் இன்னொருவர். “சின்ன வயசுதான். ஆனா பெரியாருக்கு பதில் கொடுக்க அவர்தான் சரியா இருப்பாரு” என்றார் மற்றவர்.
பெரியார் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அங்கெல்லாம் அந்த இளம் சாமியாரை அனுப்பினர். அந்த சாமி யார்?
(சுற்றும்)