
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் தன் தலைமையிலான கூட்டணி குறித்து பேசுவதையும், செய்தியாளர்களிடம் பதிலளிப்பதையும் முடிந்தவரை தவிர்த்துவிட்டு, தி.மு.க. கூட்டணி பற்றியே தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க. கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறப் போகின்றன என்றும், கூட்டணி கலகலத்துவிடும் என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் போன்றவர்கள் பதிலளித்தனர். அதைவிட முக்கியமாக கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன், முத்தரசன் போன்றவர்கள் பல முறை பதிலளித்துவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என்பதே அவர்களின் தொடர்ச்சியான பதிலாக உள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே காவிரிப் பிரச்சினைக்காக தி.மு.க.வுடன் தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் ஓர் அமைப்பாகத் திரண்டன. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அது கூட்டணியாக உருவாகி பெரும் வெற்றி பெற்றது.

2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக இந்தக் கூட்டணி வெற்றி பெற்றுவருகிறது. கூட்டணியின் தலைவரான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதில் முனைப்பாக இருந்து வெற்றி கண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் பின்னடைவு ஏற்பட்டதற்கு காரணமே இந்தியா கூட்டணியின் களச் செயல்பாடுகள்தான்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய மரியாதையோ, வாய்ப்போ தரவில்லை என்பதாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய், காங்கிரஸ் கட்சியின் சாறை உறிஞ்சி, சக்கையாக்கிவிட்டது தி.மு.க. என்று பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் அழகிரி, மாணிக் தாக்கூர் எம்.பி, கார்த்தி சிதம்பரம் எம்.பி. போன்றவர்கள் அவ்வப்போது ஆட்சியில் பங்கு குறித்து கருத்து தெரிவிக்கும் நிலையில், அதை அரசியலாக்க எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
தனக்கு எதிரான கூட்டணி பற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய கட்சியின் கூட்டணி என்ன நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசும்போதெல்லாம் தடுமாறுகிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எதிர்பார்ப்பு இருப்பது இயல்பானது. அதைத்தாண்டி, பொதுநோக்கில் கொள்கைப் பார்வையுடன் பா.ஜ.க எதிர்ப்பு-மாநில உரிமைகள் மீட்பு என்ற நிலையில் கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமியோ பா.ஜ.க.வுடன் அமைத்திருக்கும் கூட்டணி குறித்து விளக்கமளிக்கும்போது, “கொள்கை வேறு. கூட்டணி வேறு” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். இது அ.தி.மு.க.வின் பரிதாப நிலையையே அம்பலப்படுத்துகிறது.

வாஜ்பாய் காலத்தில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்தது என்கிறார் பழனிசாமி. அப்போது, பா.ஜ.க.வின் மதவாதக் கொள்கைகளை ஆட்சியில் செயல்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையையும், மாநிலங்களின் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்பதையும் முன்வைத்து, குறைந்தபட்ச பொது செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி, அதனடிப்படையில்தான் 1999ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. சேர்ந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ம.க, ம.தி.மு.க., வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றன.
தமிழ்நாட்டில் முதன்முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த கட்சி அ.தி.மு.க.தான். 1998ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எந்தவிதமான பொது நிபந்தனைகளும் இல்லாமல் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டில் அதிக இடங்களை வென்றதும், பா.ஜ.க. ஆட்சியமைக்கவேண்டுமானால், தன் மீதான ஊழல் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்தார். அவை நடக்காததால் 13 மாதங்களில் பா.ஜ.க. ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு, ஆட்சியை கவிழ்த்தார்.
அப்போதிருந்தே அ.தி.மு.க மீது அகில இந்திய அரசியலில் நம்பகத்தன்மை கிடையாது. அதனால்தான், பா.ஜ.க தரப்பு அ.தி.மு.க.வை மூன்று, நான்கு பிரிவுகளாக்கி, எடப்பாடி பழனிசாமியை அடிக்கடி டெல்லிக்கு அழைத்து நிபந்தனைகளை விதித்து அனுப்புவதும், பழனிசாமிக்கு எதிரான கோஷ்டிகளைத் தூண்டி விடுவதுமாக டபுள் ரோல் செய்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருந்தாலும் பொதுநல நோக்கில் அமைவதுதான் கூட்டணி. தமிழ்நாட்டில் அதற்கு காரணமானவர் அண்ணா. அவர் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டு கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி பாவங்கள்.